கோவில் 1040 - அரியலூர் இரவாங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1040
தீவினைகள் நீக்கும் அரியலூர் இரவாங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில்
13.4.2024 சனி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM042757]
இரவாங்குடி-621803
[இறவாங்குடி]
உடையார்பாளையம் வட்டம்
அரியலூர் மாவட்டம்
இருப்பிடம்: ஜெயங்கொண்டம் 13 கிமீ, உடையார்பாளையம் 21 கிமீ, அரியலூர் 50 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
பழமை: 50 ஆண்டுகள்
தல மகிமை:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஜெயங்கொண்டத்திலிருந்து 13 கிமீ உள்ள இரவாங்குடி [இறவாங்குடி] கிராமத்தில் தீவினைகள் நீக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. உடையார்பாளையத்திலிருந்து 21 கிமீ பிரயாணம் செய்தாலும், தலைநகர் அரியலூரிலிருந்து 50 கிமீ பிரயாணம் செய்தாலும் இரவாங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப்பெருமானின் முக்கிய திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
ஒரு சமயம் இரவாங்குடி கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. ஆதலால் அக்கிராம மக்கள் அங்குள்ள ஏரியில் கிணறு ஒன்று தோண்டினார்கள். அப்போது முருகப்பெருமான் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அச்சிலையை அந்த ஏரிக்கரையிலேயே நாட்டு ஓடு வேய்ந்த மேற்கூரை கொண்ட சிறிய கட்டிடத்தில் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் சுப்பிரமணிய சுவாமி திருப்பெயரிட்டு வழிபாடு செய்து வந்தனர். இக்கோவில் தற்போது இந்து அறந்நிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு பின்னர் திருப்பணி செய்து 06.02.2014 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
இக்கோவிலின் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேல் கொண்டு நின்ற நிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகப்பெருமானும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
தீவினைகள் நீங்க, கேட்டது கிடைக்க, மன மகிழ்ச்சி அடைய, உடல் நோய்கள் குணமாக, நல்லன நடக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-10 மாலை 4-8
கேட்டது கிடைக்க அருளும் அரியலூர் இரவாங்குடி சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1039 மன நிம்மதி தந்தருளும் அரியலூர் செந்துறை செல்வ சுப்பிரமணியர் கோவில்
Comments
Post a Comment