கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

 🙏🙏 

தினம் ஒரு முருகன் ஆலயம்-84

கடன், எதிரி போன்ற ரணங்களை பலியாக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

31.8.2021 செவ்வாய்


அருள்மிகு ரணபலி முருகன் ஆலயம்

பெருவயல்-623513

ராமநாதபுரம் மாவட்டம்

இருப்பிடம்: ராமநாதபுரத்திலிருந்து 12 கிமீ


மூலவர்: சிவசுப்ரமணிய சுவாமி (ரணபலி முருகன்)

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்

தல விருட்சம்: மகிழ மரம்

தீர்த்தம்: சரவணப்பொய்கை


தலமகிமை:

ராமநாதபுரம்-தேவிபட்டிணம் சாலையில் 9 கிமீ தொலைவில் பெருவயல் விலக்கு உள்ளது. அங்கிருந்து 3 கிமீ தூரத்தில் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே முருகனின் வேல் காட்சி தரும் பெருவயல் ரணபலி முருகன் கோவில். இத்தலத்தில் முருகன் சிவசுப்ரமணிய சுவாமியாக வள்ளி, தெய்வானையுடன் அருள்கின்றார். பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து (நீக்கி), சகல நன்மைகளும் அருள்வதால், ரணபலி முருகன்' என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான பெயராகும்.


40 வருடங்களுக்கு முன்பு இக்கோவிலுக்கு வந்த திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், இங்குள்ள முருகனின் திரு உருவம் பொறிக்கப்பட்ட வேல் போல் எங்கும் கண்டதில்லை என இத்தலத்தின் சிறப்பை பற்றி கூறியதை இங்கு அவரது புகைப்படத்துடன் செய்தியாக வைத்துள்ளார்கள்.


திருச்செந்தூர் கோவில் திருவிழா போன்றே 11 நாள் மாசி பிரம்மோற்சவம். 7-வது நாளில் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி முருகப்பெருமான் எழுந்தருளுவார். 10-ம் நாளில் தேரோட்டமும், 11-ம் நாளில் தீர்த்தவாரி சேவை திருவிழா நடைபெறும். கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறும். மாசி பிரம்மோற்சவ நாட்களிலும், சூரசம்ஹாரத்தன்றும் சத்ரு சம்ஹார வேலுடன் உற்சவர்கள் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் அருள்கின்றனர். சத்ரு சம்ஹார வேலை வழிபடுவோருக்கு பிணிகள் யாவும் நீங்கும். மற்ற நாட்களில் சத்ரு சம்ஹார வேல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

.

தல வரலாறு:

இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களில் ஒருவரான சேதுபதியின் தளபதியாக விளங்கியவர் தளவா வயிரவன் சேர்வை. முருகபக்தரான இவர் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி, தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.


இதே போன்ற கனவு அருகில் உள்ள திரு உத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, முருகன் கனவில் சொன்ன அடையாளங்களின் படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார். விஷயம் அறிந்த மன்னர், தன் அரண்மனையில் ராமலிங்க விலாசம்' என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக் கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் தானமாக கொடுத்து உதவினார். அதன் பின்னர் ஆலயத்திருப்பணிகள் வேகமாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஜெயங்கொண்ட விநாயகரை வணங்கி, பின்பு பலி பீடம், கொடிமரம், மயில் வாகனம் அர்த்தமண்டபம் கடந்தால், கருவறையில் வள்ளி,தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் ரணபலி முருகன் என்ற சிவசுப்ரமணிய சுவாமி கருணை பொங்கும் முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருசெந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் அனைத்து பலன்களையும் இவரை வழிபட்டாலே கிடைத்துவிடும் என்பர். கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார்.

பிரகாரத்தில் தளபதி வயிரவன் சேர்வை ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மீதும் தீவிர பக்தி உடையவராதலால். இருவருக்கும் இங்கு சந்நிதி அமைத்துள்ளார். மேலும் இங்கு முருகன் ராகு கேதுக்களுடன் தனியாக காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் ராகு தோஷம் நீக்குவார். மேலும் ஜெயம் கொண்ட விநாயகர், சண்முகர், இடும்பன், உலகநாயகி, பிடாரி அம்மன் ஆகிய தெய்வங்களும் பக்தர்களுக்கு அருள்கின்றனர். இக்கோவில் கட்டிய தளபதி வயிரவன் சேர்வையின் சமாதிக் கோவிலும் இங்கு உள்ளது அங்கு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.


திருவிழா:

மாசி பிரம்மோற்சவம், கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்

பிரார்த்தனை:

கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்கள் நீங்க, சகல நன்மைகளும் அருள


நேர்த்திக்கடன்:

பாலாபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்


திறக்கும் நேரம்:

காலை 8-12 மாலை 4-8


ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகனை வழிபடுவோருக்கு சகல நன்மைகளும் கிடைத்திடும்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏 



 படம் 1 - கடன், எதிரி போன்ற ரணங்களை பலியாக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன்


படம் 2 - சகல நன்மைகளும் அருளும் ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில் வேலில் முருகன் உருவம்




Comments

  1. Peruvayal ranapali muruganuku Arohara. Amazing temple history. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்