கோவில் 1036 - எண்ணியதை ஈடேற்றும் அரியலூர் விளந்தை அழகு சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1036
எண்ணியதை ஈடேற்றும் அரியலூர் விளந்தை அழகு சுப்பிரமணியர் கோவில்
9.4.2024 செவ்வாய்
அருள்மிகு அழகு சுப்பிரமணியர் திருக்கோவில் [TM029200]
விளந்தை
ஆண்டிமடம்-621801
அரியலூர் மாவட்டம்
இருப்பிடம்: ஆண்டிமடம் 5 கிமீ, அரியலூர் 51 கிமீ
மூலவர்: அழகு சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள விளந்தை என்னும் பகுதியில் எண்ணியதை ஈடேற்றும் அழகு சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் அழகு சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். மாவட்டம் தலைநகரம் அரியலூர் நகரிலிருந்து 51 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.
ஆண்டிமடம் விளந்தை வள்ளி, தேவசேனா சமேத அழகு சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திர காவடி திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவிற்கு முதல் நாள் காலை விக்னேஸ்வர பூஜை தொடங்குகிறது. வ் திருநாளன்று ஆண்டிமடம் காட்டுகேணி குளக்கரையில் வேல், காவடிகளுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்படும். பின்னர் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேல் காவடி, மயில் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் புறப்படுவர். பல்வேறு வாத்தியங்கள் முழங்க ஆண்டிமடம் நான்கு ரோடு, கடைவீதி, மடத்துத்தெரு, புதுபிள்ளையார் கோவில் தெரு வழியாக அழகு சுப்பிரமணியர் கோவிலை அடைவர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத அழகு சுப்பிரமணிய சுவாமிக்கு 1008 சங்கு, 108 கலச பூஜைகள், ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. மதியம் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவில் இடும்பன், கடம்பன் பூஜை நடைபெறுகிறது. மேலும் சூரசம்ஹார நிகழ்வுடன் கந்த சஷ்டி பெருவிழா மற்றும் தைப்பூசத் திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. இதர முருகப்பெருமானின் திருநாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
செங்குந்தர் சமூகத்தினரால் கட்டப்பட்ட தொன்மையான இக்கோவிலை தற்போது இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. கோவில் புனரமைக்கப்பட்டு 17.6.2022 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
கோவிலின் கோபுரம் மற்றும் மதில் சுவர்களின் மேல் அழகிய இறை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் மூலவர் அழகு சுப்பிரமணியர் வள்ளி, தெய்வான சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, வரசித்தி விநாயகர், அங்காளம்மன், பாவாடைராயர், இடும்பன், கடம்பன், பைரவர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
எண்ணியது ஈடேற, திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, தீவினைகள் அகல, மன மகிழ்ச்சி அடைய, உடல் நலன் வேண்டி
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திருமணத்தடை அகல அருளும் அரியலூர் விளந்தை அழகு சுப்பிரமணியர் அடி தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment