கோவில் 1016 - நீலகிரி ஊட்டி காந்தள் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-1016

பிரார்த்தனைகளை நிறைவேற்றும் நீலகிரி ஊட்டி காந்தள் முருகன் கோவில்

20.3.2024 புதன்


அருள்மிகு முருகன் திருக்கோவில்

காந்தள்

ஊட்டி-643006

[உதகமண்டலம்]

நீலகிரி மாவட்டம்

இருப்பிடம்: ஊட்டி 3 கிமீ


மூலவர்: முருகன்


தல மகிமை:

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தள் பகுதியில் பிணிகள் போக்கிடும் முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் வீற்றிருக்கும் காந்தள் முருகனை அபூர்வ தியான முருகன் என்றும் அழைக்கப்படுகின்றார். நவக்கிரகங்களுக்கு மத்தியில் சிவலிங்கம், தியான கோலத்தில் முருகப்பெருமான் அருளும் இந்தக் கோவில், பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யும் தலமாகத் திகழ்கிறது. தோடர்கள் வாழ்ந்த இந்த பகுதி ஆங்கிலேயரின் வருகைக்கு முன் ‘கந்தேல் மந்து’ என்று அழைக்கப்பட்டு வந்தது. மந்து என்றால் தோடர்கள் அதிகம் வாழும் பகுதி என்று பொருள்.


சித்தர் வடிவில் முருகப்பெருமான் சிவ பூஜை செய்த தலம் என்றும், சித்தர்கள் தவம் செய்த பூமி என்று சிறப்பாக குறிப்பிடுகின்றார். சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் போகர், பாம்பாட்டிச் சித்தர் உள்ளிட்ட மகா சித்த புருஷர்கள் பலரும் வந்து வழிபட்டு தியானம் செய்தார்கள் என்பது நம்பிக்கை. சித்தர் ஜெயந்திநாதன் ஜீவசமாதி இந்த ஆலயத்தில் உள்ளது.


முருகனுக்கு பிடித்த காந்தள் பூக்கள் இங்கு கார்த்திகை மாதத்தில் இங்கு பூக்கின்றன. இப்பூக்களுக்கு கார்த்திகை பூ என்றும் பெயர் உண்டு. கார்த்திகை மாதத்தில் காந்தள் மலரால் கந்தனை வழிபட்டால், சகல பிரார்த்தனைகளும் பலிக்கும் என்பார்கள் பெரியோர்கள்.


தல வரலாறு:

குறிஞ்சி நிலத்தின் தெய்வமான முருகன், அற்புதமான காந்தள் பகுதியில் சித்தர்கள் கூடி தம்மை வழிபடுகிறார்கள் என்பதை அறிந்து, தானும் சித்தராய் அவதரித்து இந்த பகுதிக்கு வந்தாராம். காந்தளின் எல்லையில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார் என்கிறது வரலாறு. முருகப்பெருமானின் வழிபாட்டால் மனம் கனிந்த பரமேஸ்வரர், முருகனுக்கு பெருஞ்சித்தராகக் காட்சியளித்து அருளினார். அதனால் இந்த இருபெரும் தெய்வங்களின் தரிசனம் அங்கே தவம் இருந்த சித்தர்களுக்குக் கிடைத்தது. இங்ஙனம், சித்தர்களுக்கு அவர்கள் காட்சி அளித்த இடத்தில், முருகன் வழிபட்ட லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். அத்துடன் தியானக் கோலத்தில் முருகனின் சிலையையும் எழுந்தருளச் செய்து, தியான முருகனாக அவரை வழிபட்டு வந்தனர்.


தல அமைப்பு:

இந்தப் பகுதியில் ஆகம விதிகளின்படி முதலில் தோன்றிய ஆலயம் இதுதான் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் மூலவர் முருகன், தியான முருகனாக எழில் மிகு தோற்றத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தை சுற்றிலும் வட்டவடிவில் உரிய திசைகளுக்கு ஏற்ப நவக்கிரகங்கள் உள்ளனர். குறிப்பாக, சூரிய பகவானின் சுப பார்வை அனைத்துக் கிரகங்களுக்கும் கிடைக்கும் வகையில் தனித் தனி பீடங்களில் கிரக மூர்த்திகள் அமைக்கப்பட்டுள்ளார்கள்.


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

பிணிகள் போக்க, பிரார்த்தனைகள் நிறைவேற, பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சகல தோஷங்கள் அகல, நன்மைகள் உண்டாக

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல். அன்னதானம்


பிணிகள் போக்கிடும் நீலகிரி ஊட்டி காந்தள் முருகன் திருவடி தொழுது வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1016 பிரார்த்தனைகளை நிறைவேற்றும் நீலகிரி ஊட்டி காந்தள் முருகன்


படம் 2 - 1016 பிணிகள் போக்கிடும் நீலகிரி ஊட்டி காந்தள் முருகன் கோவில் நவக்கிரகங்களுக்கு மத்தியில் சிவலிங்கம்



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்