கோவில் 990 - திருவண்ணாமலை செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் சண்முகர்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-990 [திருப்புகழ் தலம்]
வேண்டிய வரம் தரும் திருவண்ணாமலை செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் சண்முகர்
23.2.2024 வெள்ளி
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் [TM020430]
திருப்புகழ் தலம்
திருவத்திபுரம்
செய்யாறு-604407
திருவண்ணாமலை மாவட்டம்
இருப்பிடம்: வந்தவாசி 20 கிமீ, திருவண்ணாமலை 68 கிமீ, காஞ்சிபுரம் 30 கிமீ
மூலவர்: வேதபுரீஸ்வரர், வேதநாதர்
அம்பாள்: பால குஜாம்பிகை, இளமுலையம்பிகை
திருப்புகழ் நாயகர்: சண்முகர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: பனைமரம்
தீர்த்தம்: மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருக்குளம்
புராணப்பெயர்கள்/வேறு பெயர்கள்: திருவோத்தூர், திருஓத்தூர், செய்யார், திருவத்திபுரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1), வள்ளலார், சிவபிரகாசர்
தல மகிமை:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் செய்யாறு திருத்தலத்தில் வேண்டிய வரம் தரும் வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 68 கிமீ அல்லது காஞ்சிபுரத்திலிருந்து 30 கிமீ பிரயாணம் செய்தாலும் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கின்றார். முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று.
சுவாமி மீது தினமும் சூரிய ஒளி படும். இத்தலத்தில் சிவபெருமான் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தின் உட்பொருளை ஓதி உணர்த்தியதால் திருவோத்தூர் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம் இதுவாகும். மகா மண்டபத்தின் நடுவில் நின்றால் சுவாமி, அம்மன், விநாயகர், முருகன், நவக்கிரகங்கள் ஆகிய இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இவ்வமைப்பு வேறு எங்கும் காணமுடியாது. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குப் பிராகாரத்தில் தலமரம் பனை ஓங்கி வளர்ந்துள்ளதைக் காணலாம். பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை 1 திருப்பனந்தாள் 2 திருப்பனையூர் 3 திருவன்பார்த்தான் பனங்காட்டூர் திருப்பனங்காடு 4 புறவார் பனங்காட்டூர் என்பன. உள் சுற்றுப் பிராகாரத்தில் தென்கிழக்கில் கருங்கல்லால் ஆன பனைமரமும், அதனடியில் ஒரு சிவலிங்கமும், சம்பந்தர் ஆண் பனை பெண் பனையாகுமாறு பாடிக்கொண்டு நிற்கும் காட்சியும் ஐதிகச் சிற்பமாக அமைந்து விளங்குவதைக் காணலாம்.
இக்கோவில் நந்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கறது. இறைவன தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை ஓதுவிக்கும் போது தக்கவர் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய தலமிது. தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது 8-வது திருத்தலமாகும். சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240-வது தேவாரத்தலமாகும். திருஞானசம்பந்தர் தமது அருட்பாடலினால் ஆண் பனையை, பெண்பனையாக மாற்றிய தலம்.
அருணகிரிநாதர் இத்தல ஆறுமுகப்பெருமானை நோக்கி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “தவர்வாள் தோமர” என்று தொடங்கும் பாடலில் அருணகிரிநாதர் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் ஆண் பனையை பெண் பனையாக மாற்றிய லீலைகளை பாராட்டியும், வேல், சேவல், மயில், வள்ளி, தெய்வானையுடன் குறைவின்றி வாழ்கின்ற பெரியோனே என்று போற்றுகிறார்.
தல வரலாறு:
வேதங்களை ஓதியுணர்ந்து பிறருக்கு உரைக்கும் முனிவர்களே வேதம் ஓதுதலை மறந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோருமாக வேண்ட, சிவபெருமானே வேதியர் உருவில் வந்து தேவர்கள், முனிவர்களுக்கெல்லாம் வேதத்தை விரித்து ஓதுகிறார். வேதம் ஓதுவித்த ஊர் ஓத்துர் எனப் பெயர் பெறுகிறது. திரு அடைமொழி சேர்ந்து திருஓத்தூர், திருவோத்தூர் என்றாயிற்று. இதை இறைவனே சொல்லுவதாகக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது கோவிலைப் பராமரித்துவந்த சிவனடியார் ஒருவர் கோவில் நிலங்களில் பனை வைத்து வளர்த்து வந்தார். அவை யாவும் ஆண் பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக் கண்டு சிவனடியார் வருந்திச் சம்பந்தரிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் ஆண் பனைமரங்களை பெண் பனைமரங்களாக மாறும் படி திருப்பதிகம் பாடி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவோத்தூர். திருக்கடைக்காப்பில் ‘குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்’ என்று அருளியபோது அவை பெண் பனைமரங்களாயின.
தல அமைப்பு:
சேயாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. ராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நீண்ட முன் மண்டபம் உள்ளது. அதையடுத்து 2-வது கோபுரம் 5 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. முன் மண்டபத்திற்கும், 2-வது கோபுர வாயிலுக்கும் இடையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. கருவறையில் இறைவன் வேதபுரீஸ்வரர் சுயம்புலிங்கமாக காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். ஆவுடை சதுர வடிவமான அமைப்புடையது. அன்னை பால குஜாம்பிகை நான்கு திருக்கரங்களுடன் (ருத்ராட்ச மாலை, தாமரை மொட்டு, அபய ஹஸ்தம், வரத ஹஸ்தம்) தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார். மேலும் கோஷ்ட மூர்த்திகள் விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஏழு திருக்கரங்களுடன் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், நாகநாதர் (நாகம் குடை போல் அமைந்த லிங்கம்), நடராஜர், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், சஹஸ்ரலிங்கம், பஞ்சலிங்கங்கள், ஆதிகேசவ பெருமாள், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவில் மூலவர் வேதபுரீஸ்வரர் சந்நிதியின் வாயு மூலையில் திருப்புகழ் தெய்வம் சண்முகர் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்த நிலையில் வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அழகான கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
தை பிரம்மோற்சவம் (10 நாள், ரத சப்தமி-தேர்), சித்ரா பௌர்ணமி, மகா சிவராத்திரி, மாசிமகம், அரூத்ரா தரிசனம், ஆடிப்பூரம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வேண்டிய வரம் தர, மனத்துயரம் நீங்க, குழந்தைப்பேறு உண்டாக, திருமண பாக்கியம் பெற, மன நிம்மதி கிடைக்க, வேலை வாய்ப்பு பெற, தொழில் மேம்பட, உத்தியோக உயர்வு அடைய
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், திருக்கல்யாணம் செய்தல், நாகாபரணம் சாற்றுதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 4-8.30
மனத்துயரம் நீங்க அருளும் திருவண்ணாமலை செய்யாறு வேதபுரீஸ்வரர் மற்றும் சண்முகரை போற்றி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 990 வேண்டிய வரம் தரும் திருவண்ணாமலை செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் சண்முகர்
படம் 2 - 990 மனத்துயரம் நீங்க அருளும் திருவண்ணாமலை செய்யாறு வேதபுரீஸ்வரர்
Comments
Post a Comment