கோவில் 989 - திருவண்ணாமலை காமக்கூர் சந்திரசேகர சுவாமி கோவில் ஆறுமுகர்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-989 [திருப்புகழ் தலம்]

கடக ராசிக்காரர்களின் தடைகளை விலக்கும் திருவண்ணாமலை காமக்கூர் சந்திரசேகர சுவாமி கோவில் ஆறுமுகர்

22.2.2024 வியாழன்


அருள்மிகு சந்திரசேகர சுவாமி திருக்கோவில் [TM020898]

திருப்புகழ் தலம்

காமக்கூர்-606903

திருவண்ணாமலை மாவட்டம்

இருப்பிடம்: ஆரணி 8 கிமீ, திருவண்ணாமலை 32 கிமீ, வேலூர் 33 கிமீ


மூலவர்: சந்திரசேகர சுவாமி, இளம்பிறைநாதர், பிறைசூடிய பெருமான்

அம்பாள்: அமிர்தாம்பிகை

திருப்புகழ் நாயகர்: ஆறுமுகர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

புராணப்பெயர்கள்: காமத்தூர், காமநகர்

பாடியவர்கள்: அருணகிரிநாதர் (1)


தல மகிமை:

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையிலிருந்து 32 கிமீ தொலைவில் இருக்கும் காமக்கூர் திருத்தலத்தில் கடக ராசிக்காரர்கள் வழிபட்டால் தடைகளை விலக்கும் சந்திரசேகர சுவாமி கோவில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து 33 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது காமக்கூர் சந்திரசேகர சுவாமி கோவில். இத்தலத்தில் சந்திரசேகர சுவாமி அன்னை அமிர்தாம்பிகையுடன் அருளாட்சி செய்கின்றார்.


பழங்காலத்தில் காமநகர் என்றும், காமத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இந்த இடம், பின்னர் காமக்கூர் என மாறியது. ஆதிசங்கரரால் ஶ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம். முருகப்பெருமான், சந்திரன், அர்ச்சுனன், மன்மதன், ரதி, தசரதன், விவஸ்வன் என்ற மன்னன், காமகோடி என்ற பெண்மணி ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டு, தங்களின் பாவங்கள் நீங்கப் பெற்ற தலம்.


அருணகிரிநாதர் இத்தல முருகரை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். அழகிய ஆறுமுகப்பெருமானை கண்டதும் அருணகிரிநாதர் தன்னை நாயகியாக பாவித்து “ஆகத்தே தப்பாமல்” என்று தன் பாடலை தொடங்கி அற்புதமாக பாடுகின்றார்.


சந்திரன் ராசிநாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இந்த பெருமானைத் தரிசித்து வழிபட்டால் தடைகள் விலகப் பெறுவார்கள். ஜாதக ரீதியாகச் சந்திரன் நீச்சம் அடைந்தவர்கள் இங்கு வழிபட்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும். அனைத்து விதமான கலைகளிலும் நீங்கள் வல்லவராக திகழ வேண்டும் எனில் காமத்தூர் ஈசனை வழிபட வேண்டும். இசை, ஓவியம், நடனம், கவிதை உள்ளிட்ட கலைகளில் சிறப்படைய விரும்புபவர்கள் திங்கட்கிழமை தினங்களில் இங்கு வந்து வெண்ணிற மலர்களால் மாலை சாத்தி வழிபடுவது மேன்மை தரும்.


தல வரலாறு:

தட்சனின் சாபத்தில் இருந்து விடுபட சந்திரன் வழிபட்ட தலம் இந்த காமக்கூர் சிவன் கோவில். இந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்ததால், 'சந்திரசேகரர்' என்ற திருநாமம் இவருக்கு வந்தது.


ஒரு முறை ஜெயம் கொண்ட சோழனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். கனவில் அவர் கூறியபடிதான், மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டித் திருப்பணிகள் செய்ததாக சொல்லப்படுகிறது.


தல அமைப்பு:

இக்கோவிலில் நான்கு நிலை ராஜகோபுரம் உள்ளது. கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன, அடுத்து விநாயகர் தனி சந்நிதியில் அருளுகின்றார். கருவறையில் மூலவர் சந்திரசேகர சுவாமி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அன்னை அமிர்தாம்பிகை தனி சந்நிதியில் நின்ற கோலத்ஹ்டில் அருள்பாலிக்கின்றார். காமாட்சி அம்மன் ஒரு கையில் பூவும், மறு கையில் கரும்பும் ஏந்தியபடி தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். இவரை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கின்றனர். ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீ சக்கரம் உள்ளது. நடராஜர் சதுர தாண்டவ கோலத்தில் சிவகாமி அம்மையுடன் அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, கோஷ்ட தெய்வங்கள், சஹஸ்ர லிங்கம், பைரவர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


இக்கோவிலின் கருவறைக்கு நேர் பின்புறம் திருப்புகழ் தெய்வம் ஆறுமுகர் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்த நிலையில் மிக்க வேலைப்பாடுகளுடைய திருவாட்சியுடன் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இதேப் போன்ற அழகிய ஆறுமுகப்பெருமான் அருகிலுள்ள திருப்புகழ் தலமான தேவிகாபுரம் (கனககிரி) கனககிரீஸ்வரர் கோவிலிலும் அருள்பாலிக்கின்றார். [முருகன் ஆலயம் எண் 429]


திருவிழா:

மகா சிவராத்திரி, அரூத்ரா தரிசனம், கார்த்திகை சோமவாரம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி, சோமவாரம் (திங்கள்)


பிரார்த்தனை:

தடைகள் நீங்க, தோஷங்கள் அகல, கல்வி, கலைகளில் சிறக்க, வேண்டிய வரம் கிடைக்க, தோழில், வியாபாரம் மேம்பட


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 7-11 மாலை 5-7


கல்வி, கலைகளில் சிறக்க அருளும் திருவண்ணாமலை காமக்கூர் சந்திரசேகர சுவாமி மற்றும் ஆறுமுகர் திருவடிகள் பணிந்து வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 989 கல்வி, கலைகளில் சிறக்க அருளும் திருவண்ணாமலை காமக்கூர் சந்திரசேகர சுவாமி கோவில் ஆறுமுகர்


படம் 2 - 989 கடக ராசிக்காரர்களின் தடைகளை விலக்கும் திருவண்ணாமலை காமக்கூர் சந்திரசேகர சுவாமி - அமிர்தாம்பிகை

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்