கோவில் 988 - விழுப்புரம் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் சண்முகர்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-988 [திருப்புகழ் தலம்]
அற்புதங்களை அருளும் விழுப்புரம் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் சண்முகர்
21.2.2024 புதன்
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில் [TM020502]
திருப்புகழ் தலம்
திருவாமாத்தூர்-605402
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: விழுப்புரம் 8 கிமீ
மூலவர்: அபிராமேஸ்வரர், அழகியநாதர்
அம்பாள்: முத்தாம்பிகை
திருப்புகழ் நாயகர்: சண்முகர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வன்னி, கொன்றை
தீர்த்தம்: ஆம்பலம் பூம்பொய்கை(குளம்), தண்ட தீர்த்தம்(கிணறு), பம்பை(ஆறு), சக்கர தீர்த்தம்
புராணப்பெயர்கள்: கோமாதுபுரம், கோமாத்ருபுரம், ஆமாத்தூர், திருவாமாத்தூர், மாதை
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் (4)
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகரிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் திருவாமாத்தூர் திருத்தலத்தில் அற்புதங்களை அருளும் அபிராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் அருளுகின்றார்.
ராமபிரான் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு அபிராமேஸ்வரர் என்ற பெயர் வந்தது. ராமபிரான் தனது தண்டத்தால் ஊன்றிய தீர்த்தம்(கிணறு) தண்ட தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. காமதேனு பூசித்து அருள் பெற்ற தலம். ஆதி காலத்தில் பசுக்கள் கொம்புகள் இல்லாமல் படைக்கப்பட்டன. அவை இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுக் கொம்புகளை பெற்றமையால் இத்தலம் கோமாத்ருபுரம் (கோமாதுபுரம்) என்றழைக்கப்படுகிறது. பிரகாரத்தில் ஒரு திருவட்டப்பாறை (சிவபெருமான்) உள்ளது. இதனிடம் சென்று சத்தியப் பிரமாணம் செய்வது அக்கால வழக்கம். அன்னையால் வன்னிமரமாக மாற்றப்பட்ட பிருங்கி முனிவர் சாப விமோசனம் அடைந்த தலம். இந்த ஆலயத்தில் திருவட்டப்பாறை ஒன்று உள்ளது. இந்தப் பாறையின் முன்பாக நின்று பொய் சொல்பவர்கள், தேவர்களாக இருந்தாலும் அவர்கள் மீளாத துன்பக் கடலில் வீழ்வார்கள் என்பது ஐதீகம். எனவே பொய் சாட்சியால் சிக்கலில் இருக்கும் வழக்குகள் பலவும், இங்கு வந்து தீர்க்கப்படுவது கண்கூடாக நடக்கும் செயலாகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற சிறப்பு தலம். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 21-வது தலமாகும். சிவபெருமானின் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 232-வது தேவாரத்தலமாகும். ராமபிரான் வழிபட்ட தலமாதலால் அப்பர் சுவாமிகள் ‘இராமனும் வழிபாடு செய் ஈசனை’ என்று பாடுகின்றார்.
அருணகிரிநாதர் இத்தல சண்முகரை போற்றி நான்கு திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். அருணகிரிப்பெருமான் “அடல் வடிவேல்”, “கண்கயல் பிணை”, “கருமுகில்”, “காலமுகில் என” என்று தொடங்குகின்றன. இத்தலத்திற்கு மாதை என்ற திருப்பெயருமுண்டு. ஒரு பாடலில் ‘மாதையில் விறல்மயில் மீது மேவிய பெருமாளே’ என்று போற்றுகின்றார். இத்திருப்புகழ் பாக்களை தினமும் பாராயணம் செய்தால் எண்ணியது கைகூடும். திருப்புகழ் சேய்த்தொண்டர் வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் அதிஷ்டானம் அமைந்த தலம். திருவாமாத்தூரில் அமைந்துள்ள அவரது மடாலாயம் சிறப்பு மிக்கது. இத்தலத்தைப் பற்றி பல பிரபந்தங்களை பாடியுள்ளார்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் பசுக்களெல்லாம் கொம்புகள் இல்லாமல் படைக்கப்பட்டு இருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும், மற்ற பசுக் கூட்டங்களும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளக் கொம்புகள் வேண்டும் என நந்திதேவரிடம் முறையிட்டனவாம். அதற்கு நந்தியம்பெருமான் பம்பை நதிக்கரையில் உள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரரை வணங்கி, வழிபடும் படி கூறினாராம். அவ்வாறு பசுக்கள் தவம் செய்து வணங்கி வழிபட்டு கொம்புகளைப் பெற்ற தலம் என்பதால் இது திருஆமாத்தூர் எனப்படுகிறது.
தல அமைப்பு:
ராஜகோபுரம் 7 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் அபிராமேஸ்வரர் சுயம்பு லிங்கமாக கிழக்கு வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். பசுக்கள் வழிபாடு செய்த அடையாளமாகக் குளம்புச் சுவடு லிங்கத்தின் தலையில் உள்ளது. அன்னை முத்தாம்பிகை தனி சந்நிதியில் மேற்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். அம்மனின் திருமேனியில் நாகப்பாம்பின் வால் பகுதி அமைந்துள்ளது. மேலும் சித்தி விநாயகர், வலம்புரி விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சிவதுர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் ராமபிரான், லட்சுமி, நாலவர் 63 நாயன்மார்கள், சகஸ்ரலிங்கம், சட்டநாதர், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர், சப்த மாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலின் மூலவரின் பின்புறம் வலப்பக்கத்தில் திருப்புகழ் தெய்வம் சண்முகர் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
மகா சிவராத்திரி, அரூத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம், ஆடி வெள்ளி, நவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
அற்புதங்கள் அருள, பங்காளி சண்டை முடிய, பிரச்னைகள் தீர, எண்ணியது ஈடேற, திருமணத்தடை நீங்க, புத்திர பாக்கியம் கிட்ட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7.30-12 மாலை 5-8.30
பங்காளி சண்டைகளை தீர்த்தருளும் விழுப்புரம் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர், சண்முகரை பணிந்து தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 988 அற்புதங்களை அருளும் விழுப்புரம் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் சண்முகர்
படம் 2 - 988 பங்காளி சண்டைகளை தீர்த்தருளும் விழுப்புரம் திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர்
Comments
Post a Comment