கோவில் 987 - விழுப்புரம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவில் சண்முகர்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-987 [திருப்புகழ் தலம்]
பிணி நீங்கி வளம் அருளும் விழுப்புரம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவில் சண்முகர்
20.2.2024 செவ்வாய்
அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில் [TM020380]
திருப்புகழ் தலம்
கீழையூர்
திருக்கோவிலூர்-605757
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: விழுப்புரம் 36 கிமீ, திருவண்ணாமலை 36 கிமீ
மூலவர்: வீரட்டேஸ்வரர்
அம்பாள்: பெரியநாயகி, சிவானந்த வல்லி, பிரஹந்நாயகி
உற்சவர்: அந்தகாசுர வதமூர்த்தி
திருப்புகழ் நாயகர்: சண்முகர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம்: தென்பெண்ணை
புராணப்பெயர்கள்: அந்தகபுரம், திருக்கோவலூர்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர். அருணகிரிநாதர் (1)
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகரிலிருந்து 36 கிமீ தூரத்திலும், முக்தி தலமான திருவண்ணாமலையிலிருந்து 36 கிமீ தூரத்திலும் இருக்கும் திருக்கோவிலூர் (திருக்கோயிலூர், திருக்கோவலூர்) திருத்தலத்தில் சிறப்பு மிக்க வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வீரட்டேஸ்வரர் பெரியநாயகியுடன் இங்கு அருளாட்சி செய்கின்றார். இத்தல ஈசனை வழிபட்டால் பிணிகள் நீங்கி வளங்கள் நம்மை வந்து சேரும் இத்திருத்தலதிலேயே புகழ் பெற்ற வைணவத்தலமான (திவ்ய தேசங்களில் ஒன்று) திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சம்.
சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. இரண்டாவது வீரட்டான திருத்தலமிது. அந்தகாசுரனை அழித்த தலமிது. எனவே அந்தகபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால், தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும். பில்லி, சூனியம், பகை அகலும். வாஸ்து ஐதீகம் இத்தலத்தில்தான் தோன்றியது. முருகப்பெருமான் ஈசனை பூஜித்த தலம். அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம். இங்கு வழிபட்டால் வீடு, கடை கட்ட தடைகள் விலகும். 64 பைரவர்கள், 64 பைரவிகள், சப்த மாதர்கள் உற்பத்தியான தலம். ஔவையார் விநாயக சதுர்த்தியன்று இத்தல விநாயகரை வழிபட்டுதான் விநாயகர் அகவல் [சீதக் களப் செந்தாமரை…] பாடினார். விநாயகர் பெரிய யானை உருவம் (பெரிய யானை கணபதி) எடுத்து, தனது தும்பிக்கையால் ஔவையாரை கயிலைக்கு எடுத்து சென்றதாக கூறுகிறது புராண வரலாறு. மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனைய நாயனர் அவதரித்த திருத்தலம். சுக்கிரன் பாப விமோசனம் பெற்ற தலம். பாரி வள்ளல் தன் மகள்கள் அங்கவை, சங்கவை இருவரையும் திருக்கோவிலூர் மன்னருக்கு ஔவையார், கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்த சிறப்புத் தலம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிறப்பு தலம். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 11-வது தலமாகும். சிவபெருமானின் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 222-வது தேவாரத்தலமாகும்.
அருணகிரிநாதர் இத்தல சண்முகரை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். அருணகிரிப்பெருமான் “பாவ மாமட மாதர்” என்ற திருப்புகழால் இத்தல முருகனை பாடிப் பரவியுள்ளார்.
தல வரலாறு:
ஈசனின் மனைவியான பார்வதி, ஈசனின் இரு கண்களையும் (சூரியன், சந்திரன்) விளாயாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள் (அஞ்ஞானம்). அந்த அசுரனான அந்தகாசூரனுக்கும் ஈஸ்வரனுக்கும் யுத்தம் நடக்கிறது. போர் நடைபெறும் பொழுது அசுரனின் குருதியிலிருந்து அசுரர்கள் தோன்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தடுப்பதற்காக சிவபெருமான் 64 பைரவர்களை உருவாக்கினார். அறியாமை எனும் இருளான அந்தாகசூரனை அழித்து சிவபெருமான் வீரட்டேஸ்வரராக மெய்ஞானத்தினை அருளிய தலம்.
தல அமைப்பு:
கருவறையில் மூலவர் வீரட்டேஸ்வரர் நெடிதுயர்ந்த சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். வீரட்டேஸ்வரர் மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாக விளங்குகின்றார். அன்னை பெரியநாயகி சாந்த சொரூபியாக, புன்னகையுடன் மேற்கு நோக்கி தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். இத்தல விநாயகர் பெரிய யானை கணபதியாக அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை, சண்டிகேஸ்வரர், உற்சவர், பஞ்சபூத லிங்கங்கள், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், சந்திரசேகரர், பைரவர், பைரவி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் செப்புச் சிலை வடிவில் அந்தகாசுர சம்ஹாரர் அருள்பாலிக்கின்றார். அந்தகாசுரனைக் காலின் கீழ் போட்டு மிதித்துக்கொண்டு, அவன் பேரில் சூலத்தைப் பாய்ச்சுகின்ற நிலையில் இருக்கிறார். இது சோழர் காலத்துச் செப்புப் படிமம் ஆகும்.
இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் சண்முகர் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவர் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் தேவியருடன் அருள்பாலிக்கின்றார்..
திருவிழா:
மாசிமகம் (10 நாள்), மகா சிவராத்திரி, அரூத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், ஆனி திருமஞ்சனம், ஆடி வெள்ளி, நவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
பிணிகள் நீங்க, வளங்கள் சேர, பூர்வ ஜென்ம பாவங்கள் விலக, வாஸ்து ஐதீகம் கிடைக்க, பில்லி, சூனியம், பகை அகல, வாஸ்து தோஷம் அகல, மன நிம்மதி கிடைக்க, புத்திர தோஷம் நீங்க, காரியத் தடைகள் அகல, திருமணத் தடை நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8
பூர்வ ஜென்ம பாவங்கள் விலக அருளும் விழுப்புரம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் மற்றும் சண்முகரை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 987 பிணி நீங்கி வளம் அருளும் விழுப்புரம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் [திருப்புகழ் தலம்]
படம் 2 - 987 பூர்வ ஜென்ம பாவங்கள் விலக அருளும் விழுப்புரம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோவில்
Comments
Post a Comment