கோவில் 986 - விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் சண்முகர்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-986 [திருப்புகழ் தலம்]
வழக்குகளை தீர்த்து வைக்க அருளும் விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் சண்முகர்
19.2.2024 திங்கள்
அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில் [TM020505]
திருப்புகழ் தலம்
திருவெண்ணெய்நல்லூர்-607203
விழுப்புரம் மாவட்டம்இருப்பிடம்: விழுப்புரம் 19 கிமீ, திருக்கோவிலூர் 25 கிமீ
மூலவர்: கிருபாபுரீஸ்வரர், அருட்கொண்டநாதர், ஆட்கொண்டநாதர், தடுத்தாட்கொண்டநாதர், வேணுபுரீஸ்வரர்
அம்பாள்: மங்களாம்பிகை, வேற்கன்னியம்மை
திருப்புகழ் நாயகர்: சண்முகர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: மூங்கில் மரம்
தீர்த்தம்: தண்டு தீர்த்தம்(சிவனாற்கேணி), பெண்ணை நதி, நீலி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்
புராணப்பெயர்கள்: திருவருள்துறை, திருஅருட்டுறை
பாடியவர்கள்: சுந்தரர், அருணகிரிநாதர் (1)
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகரிலிருந்து 19 கிமீ தூரத்தில் இருக்கும் திருவெண்ணெய்நல்லூர் திருத்தலத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க அருளும் கிருபாபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலூரிலிருந்து 25 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் கிருபாபுரீஸ்வரர் என்ற அருட்கொண்டநாதர் மங்களாம்பிகையுடன் அருள்பாலிக்கின்றார். சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த பெரும் புனிதமான புராதனமான திருத்தலம். இக்கோவில் பகுதியில் 109 கல்வெட்டுகள் இந்திய தொல்லியல் துறையால் நகலெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலில்தான் சிவபெருமான் சுந்தரரின் திருமஞ்சனத்தின் போது சுந்தரரைத் தனக்கு உதவியாளராக (அடிமையாக) கூறி முதியவராக தோன்றினார். நீண்ட தகராறு மற்றும் பிரச்சினையில் பஞ்சாயத்துக்குப் பிறகு, இறைவன் சுந்தரரை திருவெண்ணைநல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, கோவிலின் கருவறைக்கு அருகில் அவரது பாதணிகளை நுழைவாயிலில் வைத்துவிட்டு மறைந்தார். பக்தர்களின் தரிசனத்திற்காக பாதுகைகள் இன்றும் கோயிலில் உள்ளன. சிவபெருமானும் சுந்தரரும் வழக்கு வாதிட்ட பஞ்சாயத்து மண்டபம் நுழைவாயிலின் வலப்புறம் வடக்கே உள்ளது. சுந்தரருக்கு ஈசன் அம்பிகையோடு ரிஷபாரூடராக காட்சியளித்த தலம். கவிச்சக்கரவர்த்தி கம்பரின் ராமாயணக் கதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்து மாபெரும் தொண்டு செய்த சடையப்ப வள்ளல் பிறந்த ஊர் திருவெண்ணைநல்லூர். சிவஞானபோதம் அருளிய மெய்கண்டநாயனார் காப்பு கூறிய ‘நல்லார் தொழும் பொல்லாப்பிள்ளையார்’ இக்கோவிலில் உள்ள பொல்லாப்பிள்ளையாரே ஆவார். மெய்கண்டநாயனார் கோவில் மேல வீதியில் உள்ளது.
சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற சிறப்பு தலம். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 14-வது தலமாகும். சிவபெருமானின் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 225-வது தேவாரத்தலமாகும். சுந்தரரை இத்திருத்தலத்தில்தான் சிவபெருமான் ஆட்கொண்டார் என்பது சிறப்பம்சம். இங்கு சிவபெருமான் சுந்தரருக்கு ‘பித்தா’ என்று அடியெடுத்துக் கொடுத்து தேவாரம் பாட சொன்ன தலமிது. உடனே அனைவரும் அறிந்த “பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா’ என்று சிவபெருமானை போற்றி பாடிய முதல் பதிகம் சுந்தரர் பாடினார். சுந்தரர் கயிலை சேர்ந்த (சுந்தரர் குரு பூஜை) ஆடி சுவாதி நட்சத்திர நாள் திருநாளாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.
அருணகிரிநாதர் இத்தல ஆறுமுகனை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். அருணகிரிநாதர் இத்தல முருகனை “பல பல தத்துவம்” என தொடங்கும் திருப்புகழ் பாடலால் பரவியுள்ளார். சண்முகப்பெருமான் திருப்புகழ் பாடிய அருணகிரியாருக்கு மயிலோடு நடனமாடி திருக்காட்சி அருளிய தலமிது.
தல வரலாறு:
பஞ்சாக்னி (அக்னி) மத்தியில் அம்பிகை வெண்ணெய்யால் கோட்டை அமைத்து அதன் நடுவே தவம் புரிந்து இறைவனை அடைந்ததாக இத்தல புராணம் (திருவட்டுறை புராணம்) கூறுகிறது. இத்தலத்திற்கும் திருவெண்ணெய்நல்லூர் என்ற பெயர் ஏற்பட்டது.
சுந்தரமூர்த்தி நாயனார் புத்தூர் சடங்கவிச் சிவாச்சாரியார் மகளை மணக்க இருந்த போது, இறைவன் கிழ வேதியனாக வந்து தடுத்தாட்கொண்டு, திருவெண்ணெய்நல்லூர் சபையில், தனக்கு சுந்தரர் அடிமை என ஓலை காட்டி ஆட்கொண்டார். மேலும் இறைவனே ‘பித்தா’ என்று அடியெடுத்துக் கொடுத்து தேவாரப் பதிகம் பாட வைத்தார்.
தல அமைப்பு:
ஆகம அமைப்புடன் கூடிய இக்கோவிலினுள் நுழைந்தவுடன் சுந்தரர் வழக்கு நடந்த ‘வழக்கு தீர்த்த மண்டபம்’ உள்ளது. கொடிமரம், பலிப்பீடம் உள்ளன. கருவறையில் மூலவர் கிருபாபுரீஸ்வரர் என்ற அருட்கொண்டநாதர் சுயம்பு லிங்கமாக கிழக்கி நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். கிழவராக வந்து சுந்தரரோடு வாதம் செய்த சிவபெருமான் லிங்கமாக ஐக்கியாகும் முன் கருவறைக்கு முன்பு ஈசன் கழற்றி வைத்த திருப்பாதுகைகள் இன்றும் பக்தர்களின் தரிசனத்திற்கு உள்ளது என்பது சிறப்பம்சம். அன்னை மங்களாம்பிகை (வேற்கன்னியம்மை) நான்கு திருக்கரங்களுடன் தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கி நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். குழந்தை வரம் கோரி அர்ஜுனன் வழிபட்ட விஜய லிங்கம், தேவேந்திரன் வழிபட்ட சுந்தரலிங்கம், விஷ்ணு வழிபட்ட சங்கரலிங்கம் என மூன்று லிங்கங்கள் இக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர். மேலும் பொல்லாப்பிள்ளையார், பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி, நால்வர், 63 நாயன்மார், நடராஜர், சப்தகன்னியர், அருநந்தி சிவம், சுந்தரர், சம்பந்தர், மெய்கண்டதேவர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் சண்முகர் ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கரங்கள் கொண்டு வள்ளி, தெய்வானைய்டன் மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
சுந்தரர் குரு பூஜை(ஆடி சுவாதி), பங்குனி உத்திரம் (10 நாள்), மகா சிவராத்திரி, அரூத்ரா தரிசனம், ஆவணி மூலம் புட்டு உற்சவம், சங்கடஹர சதுர்த்தி, கந்த சஷ்டி, தைப்பூசம், தமிழ் வருட பிறப்பு, பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
துன்பங்கள் நீங்க, வழக்குகளை தீர்த்து வைக்க, வாக்கு வன்மை பெற, மன நிம்மதி கிடைக்க, பேச்சு வர, திருமணம் வேண்டி, குழந்தை வேண்டி, உத்தியோக உயர்வு பெற, தொழில் விருத்தி அடைய, கஷ்டங்கள் நீங்க, உடல் ஆரோக்கியம் வேண்டி, செல்வம் பெருக, வீடு, வாசல், கல்விப்பேறு, நீண்ட ஆயுள் பெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8
துன்பங்கள் நீக்கியருளும் விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர், சண்முகரை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 986 வழக்குகளை தீர்த்து வைக்க அருளும் விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் சண்முகர்
படம் 2 - 986 துன்பங்கள் நீக்கியருளும் விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் காலணிகள் (இன்றும் கண்ணாடிப் பேழையில்)
Comments
Post a Comment