கோவில் 985 - விழுப்புரம் திருநாவலூர் பக்தகஜனேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-985 [திருப்புகழ் தலம்]

வழக்குகளில் வெற்றி தேடி தரும் விழுப்புரம் திருநாவலூர் பக்தகஜனேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

18.2.2024 ஞாயிறு


அருள்மிகு பக்தகஜனேஸ்வரர் திருக்கோவில் [TM020514]

திருப்புகழ் தலம்

திருநாவலூர்-607204

விழுப்புரம் மாவட்டம்

இருப்பிடம்: பண்ருட்டி 8 கிமீ, விழுப்புரம் 28 கிமீ, கடலூர் 44 கிமீ


மூலவர்: பக்தகஜனேஸ்வரர், ஜம்புநாதேஸ்வரர், திருநாவலீஸ்வரர்

அம்பாள்: மனோன்மணி, நாவலாம்பிகை, சுந்தர நாயகி

உற்சவர்: சோமாஸ்கந்தர்

திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: நாவல் மரம்

தீர்த்தம்: கோமுகி தீர்த்தம், கருட நதி

புராணப்பெயர்கள்: தொண்டீச்சரம், திருநாமநல்லூர், ஜம்புநாதபுரி, பக்தகஜனேஸ்வரம்

பாடியவர்கள்: சுந்தரர், அருணகிரிநாதர் (1)


தல மகிமை:

பண்ருட்டியிலிருந்து 18 கிமீ தூரத்தில் இருக்கும் விழுப்புரம் மாவட்டம் சுந்தரப்பெருமான் அவதரித்த திருநாவலூர் திருத்தலத்தில் வழக்குகளில் வெற்றி தேடி தரும் பக்தகஜனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. விழுப்புரத்திலிருந்து 28 கிமீ தொலைவிலும், கடலூரிலிருந்து 44 கிமீ பிரயாணம் செய்தாலும் திருநாவலூர் பக்தகஜனேஸ்வரர் கோவிலை அடையலாம். இங்கு அம்பாள் மனோன்மணி சமேத பக்தகஜனேஸ்வரர் சிறப்பாக அருளாட்சி செய்கின்றார். விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், கருடன், சுக்கிரன், சப்தரிஷிகள், சடையப்ப நாயனார், இசைஞானியார், நரசிங்கமுனையர் வழிபட்ட தலம்.


சுக்கிரன் தன் தோஷம் அகல வழிபட்ட லிங்கம் நவக்கிரகங்களுக்கருகே சிறப்புடன் அருள்பாலிக்கின்றார். தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் அருள்கின்றார். மகா விஷ்ணு இரணியனை அழிக்க இறைவனை வழிபட்ட தலம். நவக்கிரகங்களில் சூரியன் மேற்கு நோக்கி அருள்கின்றார். சிவப்பிரியர் என்ற அடியவர் சண்டிகேஸ்வரர் பதவி பெற்ற தலம். இத்தலத்தின் சிறப்பினை சேக்கிழார் பெரியபுராணத்தில் சிறப்பித்துக் கூறுகின்றார். நாவல் மரம் தல விருட்சமாதலால், இத்தலத்திற்கு திருநாவலூர் என்ற பெயர் வந்தது. திருத்தொண்டர்களான 63 நாயன்மார்களை குறிக்கும் விதமாக இத்தலம் திருத்தொண்டீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. அச்சொல்லுக்கு ஈடாக வடமொழியில் பக்தகஜனேஸ்வரம் எனவும் இவ்வூருக்கு பெயருண்டு.


சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற சிறப்பு தலம். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் இது 8-வது தலமாகும். சிவபெருமானின் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 219-வது தேவாரத்தலமாகும். சுந்தரர் அவதரித்த தலமாதலால், பக்தகஜனேஸ்வரர் கோவிலில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியாருடன் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு தனி சந்நிதி உள்ளது. அவர் பிறந்த வீடும் இங்கு கோவிலாக உள்ளது. சுந்தரர் அவதரித்த ஆவணி உத்திரமும், அவர் கயிலை சேர்ந்த (சுந்தரர் குரு பூஜை) ஆடி சுவாதியும் திருநாட்களாக இக்கோவிலில் கொண்டாடப்படுகின்றன.

அருணகிரிநாதர் இத்தல கந்தவேளைப் போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். அருணகிரியார் “கோல மறையொத்த” என்று திருப்புகழ் பாடலைத் தொடங்கி அற்புதமாக பாடுகின்றார்.


தல வரலாறு:

இரணியனை வதம் செய்ய மகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் கொண்டார். ஆனால் வரங்கள் பல பெற்ற இரணியனை அவ்வளவு எளிதாக வதைக்க முடியாது என்பதால், பெருமாள் திருநாவலூர் தல இறைவன் பக்தஜனேஸ்வரரிடம் வேண்டிக்கொண்டார். அதன்படி இரணியனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை இப்பெருமான் திருமாலுக்கு வழங்கினாராம்.


தல அமைப்பு:

ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. கோவிலினுள் நுழைந்த உடன் இடது புறம் சுந்தரர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியாருடன் தனி சந்நிதியில் எழுந்தருள்கின்றார். சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகின்றார். எதிரில் வெள்ளை யானை உள்ளது. கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன, கொடிமர் விநாயகர் சுந்தர விநாயகராக அருள்கின்றார். கருவறையில் பக்தகஜனேஸ்வரர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அம்பாள் மனோன்மணி விரி சடை கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நால்வர், சேக்கிழார், 63 நாயன்மார்கள், நான்கு யுக லிங்கங்கள், நடராஜர், சிவகாமி, கஜலட்சுமி, சுக்கிர லிங்கம், சுக்கிரன், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் (6 அடி) தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். எதிரே கருடாழ்வார் உள்ளார்.


இத்தலத்தில் திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவரும் மூலவரைப் போன்றே விளங்குகின்றார்.


திருவிழா:

சுந்தரர் பிறந்த நாள்(ஆவணி உத்திரம்), சுந்தரர் குரு பூஜை(ஆடி சுவாதி), சித்திரை பிரம்மோற்சவம் (15 நாள்), மகா சிவராத்திரி, அரூத்ரா தரிசனம், சங்கடஹர சதுர்த்தி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், தமிழ் வருட பிறப்பு, பௌர்ணமி, பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி, வெள்ளி


பிரார்த்தனை:

வழக்குகளில் வெற்றி பெற, வாக்கு வன்மை சிறக்க, சுக்கிர தோஷம் அகல, திருமண வரம் வேண்டி, வியாபாரம் விருத்தியடைய, உத்தியோக உயர்வு பெற்றிட, உடல் ஆரோக்கியம் பேண, மன நிம்மதி வேண்டி, கல்வி, கேள்விகளில் சிறக்க, வினைகள் தீர


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-12 மாலை 4-8


வாக்கு வன்மை சிறக்க அருளும் விழுப்புரம் திருநாவலூர் பக்தகஜனேஸ்வரர், முருகப்பெருமானை ஒரு சேர தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 985 வழக்குகளில் வெற்றி தேடி தரும் விழுப்புரம் திருநாவலூர் பக்தகஜனேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்


படம் 2 - 985 வாக்கு வன்மை சிறக்க அருளும் விழுப்புரம் திருநாவலூர் பக்தகஜனேஸ்வரர்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்