கோவில் 961 - புதுச்சேரி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் கல்யாணசுப்பிரமணிய சுவாமி
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-961 [திருப்புகழ் தலம்]
சனித் தொல்லைகள் நீங்க அருளும் புதுச்சேரி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் கல்யாணசுப்பிரமணிய சுவாமி
25.1.2024 வியாழன்
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
திருநள்ளாறு-609606
காரைக்கால் மாவட்டம்
புதுச்சேரி
இருப்பிடம்: காரைக்கால் 5 கிமீ, மயிலாடுதுறை 33 கிமீ
மூலவர்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
அம்மன்: பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
திருப்புகழ் நாயகர்: கல்யாணசுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: தர்ப்பை
தீர்த்தம்: நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம், கங்கா தீர்த்தம், அஷ்டதிக் பாலகர் தீர்த்தங்கள்
புராணப்பெயர்கள்: திருநள்ளாறு, தர்ப்பாரண்யம், நகவிடங்கபுரம்
பாடியவர்: திருஞானசம்பந்தர் (4), திருநாவுக்கரசர் (2), சுந்தரர் (1), அருணகிரிநாதர் (1)
தல மகிமை:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் நகரிலிருந்து 5 கிமீ தொலைவில் சனி தோஷங்கள் முற்றிலும் அகல அருள்புரியும், உலகப் புகழ் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள் பிராணேஸ்வரி, சொர்ண விநாயகர், திருப்புகழ் தெய்வம் கல்யாணசுப்பிரமணிய சுவாமி, சனீஸ்வரர் முதலான முக்கிய தெய்வங்கள் அருள்புரிவதி சிறப்பம்சம். திருமால், பிரம்மன், இந்திரன், திசைபாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலானோர் வழிபட்டு பேறு பெற்ற தலமிது.
நவக்கிரகத் தலங்களுள் சனீஸ்வரனுக்கு உரிய தலம். இங்கு உள்ள நள தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூசித்ததால் நளமன்னனை பற்றிய சனி விலகிய தலம். இது சிவதலமாயினும் சனி பகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. சனிப்பெயர்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சோமாஸ்கந்த மூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம் இத்தலமிது. இது சப்தவிட தலங்களுள் ஒன்று. திருநள்ளாறு என்றாலே தீர்த்த தலம் என்ற சிறப்பு பெற்ற தலம். பாண்டிய நாட்டில் பாண்டிய மன்னனின் வெப்பு நோயை நீக்கிய சமயம், சமணர்களுக்கு எதிரான சம்பந்தரின் அனல் வாதத்தில், சம்பந்தர் பதிகம் எழுதப்பட்டிருந்த சுவடிகள் மட்டும் கருகாமல் இருந்ததால் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறது. அந்தப் பதிகம்தான் திருநள்ளாற்று பதிகம் என்பது சிறப்பு.
இதனை மனதில் கொண்டுதான் அருணகிரிநாதர் திருநள்ளாற்று முருகப்பெருமானை பாடத் தொடங்கும் போது “பச்சை யொண்கிரி” என்று திருப்புகழை தொடங்குகிறார். இப்பாடலின் சிறப்பு என்னவென்றால், ‘சபாஷ்” என்ற சொல்லை அருணகிரிநாதர் பயன்படுத்தும் இது ஒன்றேயாகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில், இது 52-வது தலமாகும். தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், இது 115-வது தேவாரத்தலமாகும்.
சனித் தொல்லைகள் நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தத்திலும் (சரஸ்வதி தீர்த்தம்) நீராடி இறைவனை வழிபடுகின்றனர்.
தல வரலாறு:
தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்தவற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார். அந்த சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.
தல அமைப்பு:
திருக்குளத்துடன் கூடிய இக்கோவிலின் கருவறையில் மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். தர்ப்பையில் முளைத்த சுயம்பு லிங்கமாதலால் சிவபெருமானுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் என்று திருப்பெயர் வந்தது. சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்பு உள்ளது. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று தள்ளியிருப்பது சிறப்பம்சம். அம்பாள் பிராணேஸ்வரி தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார்.
காலையில் 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி கரையிலுள்ள நள விநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். கோவிலுக்குள் உள்ள கிணறான கங்கா தீர்த்தத்தை தரிசித்து பின் கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுரத்தை வணங்கி, முதல் பிரகாரத்தில் உள்ள நள சத்திரத்தை பக்தி பூர்வமாக படிக்க வேண்டும். பின்னவர் மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் தியாகவிடங்கர் சென்று மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும். பின் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் பிற தெய்வங்களான சொர்ண விநாயகர், கல்யாணசுப்பிரமணிய சுவாமி, ஆதிசேஷன், நளன், பெருமாள், மகாலட்சுமி, பைரவரை வணங்கி, அம்பிகை பிராணேஸ்வரியை கும்பிட வேண்டும். பின்னர்தான் சனீஸ்வரரை வணங்க வேண்டும். அப்போதுதான் சனி தோஷம் விலகி, விமோசனம் கிடைக்கும்.
இக்கோவிலின் மேற்கு பிரகாரத்தில் கல்யாண சுப்பிரமணிய சுவாமி ஒரு முகமும், இரு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து பாதணிகளை கால்களில் அணிந்து வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமான் ஒரு கையில் பழமும், மற்றொரு கை அபயமும் கொண்டு அருள்கின்றார்.
திருவிழா:
மகா சிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷகம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, சனி
பிரார்த்தனை:
சனித் தொல்லை நீங்க, முந்தைய சாபங்கள் ஒழிய, கவி பாடும் திறன் பெற, கேட்டது கிடைக்க, குடும்பம் சிறக்க
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், திருப்பணி பொருளுதவி
திறக்கும் நேரம்:
காலை 5.30-12 மாலை 4.30-9
முந்தைய சாபங்கள் ஒழிய அருளும் புதுச்சேரி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், கல்யாணசுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 961 சனித் தொல்லைகள் நீங்க அருளும் புதுச்சேரி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வரர் [திருப்புகழ் தலம்]
படம் 2 - 961 முந்தைய சாபங்கள் ஒழிய அருளும் புதுச்சேரி திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்
Comments
Post a Comment