கோவில் 960 - நாகப்பட்டினம் வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில் மேலக்குமரன்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-960 [திருப்புகழ் தலம்]
ராஜயோகம் அளிக்கும் நாகப்பட்டினம் வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில் மேலக்குமரன்
24.1.2024 புதன்
அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோவில் [TM014589]
திருப்புகழ் தலம்
வேதாரண்யம்-614810
(வேதாரணியம்)
நாகப்பட்டினம் மாவட்டம்
இருப்பிடம்: திருத்துறைபூண்டி 35 கிமீ, கோடியக்கரை 10 கிமீ, நாகப்பட்டினம் 48 கிமீ
மூலவர்: திருமறைக்காடர், வேதாரண்யேஸ்வரர்
அம்மன்: வேதநாயகி
திருப்புகழ் நாயகர்: மேலக்குமரன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வன்னி மரம், புன்னை மரம்
தீர்த்தம்: வேத தீர்த்தம், மணிகர்ணிகை
புராணப்பெயர்கள்: திருமறைக்காடு, வேதாரணியம், ஆதி சேது
பாடியவர்: திருஞானசம்பந்தர் (4), திருநாவுக்கரசர் (5), சுந்தரர் (1), அருணகிரிநாதர் (3)
தல மகிமை:
நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைபூண்டிக்கு தென்கிழக்கே 35 கிமீ தொலைவில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் ராஜயோகம் அளிக்கும் திருமறைக்காடர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவர் திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) அம்பாள் வேதநாயகியுடன் அருளாட்சி செய்கின்றார். வேதங்கள் பூசை தலமாதலால் ‘மறைக்காடு’ என்று பெயர் பெற்றது. கோடியக்கரை திருப்புகழ் திருத்தலத்திலிருந்து 10 கிமீ பிரயாணித்தாலும், நாகப்பட்டினம் நகரிலிருந்து 48 கிமீ பிரயாணித்தாலும் திருமறைக்காடு திருத்தலத்தை அடையலாம். இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. மூலவருக்குப் பின்னால் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகச் சக்தி வாய்ந்தவர். இக்கோவிலில் தியாகேசர் (நடராஜர்) செய்யும் நடனம் அம்ச நடனம் எனப்படும்.
இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள இராமபிரான் இத்தலத்தில் உள்ள ஆதிசேது தீர்த்தத்தில் நீராடி, சிவபூஜை செய்தார். திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் இவ்வூரைச் சேர்ந்தவர். இத்தலம் புராண காலத்திற்கும் முந்தையது. அகத்தியர் போன்ற முனிவர்களும், தசரதன், விசுவாமித்திரர், இராம பிரான், வசிஷ்டர் போன்ற இதிகாச காலத்து பெருமக்களும், முசுகுந்தச் சக்ககவர்த்தி போன்ற புராண காலத்து மன்னர்களும், பின்னர் வாழ்ந்த சேர சோழ பாண்டிய மன்னர்களாலும் வழிபடப்பெற்றது. வேதாரண்யம் விளக்கழகு என்பது பிரசித்தம். மாலை வேளை வழிபாட்டின் போது வரிசையாக சரவிளக்குகள் ஏற்றி இறைவழிபாடு கண்கொள்ளாக் காட்சி.
இத்திருத்தலத்தில் எலி ஒன்று தெரியாமல் விளக்கைத் தூண்டிவிட்ட புண்ணியத்தால் மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்து மூவுலகையும் ஆட்சி செய்தது என்பதால், இந்த ஆலயம் சென்று திருமறைக்காடரை வழிபட்டால் ராஜயோகம் பெறுவர். அரசியலில் அதிகாரப் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மிகவும் புகழ் பெற்ற கோளறு பதிகத்தை திருஞானசம்பந்தர் இத்தலத்தில்தான் பாடியருளினார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில், இது 125-வது தலமாகும். தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், இது 189-வது தேவாரத்தலமாகும். தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது. வேதங்கள் பூஜை செய்து மூடிச் சென்ற கதவுகளைத் திறக்கவும், பின்பு மூடவும் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய சிறப்பு மிக்க தலம். அடைக்கப்பட்டிருந்த கோவில் வாயில் கதவு திறந்ததை கொண்டாடும் வகையில் மாசி மகம் பிரம்மோற்சவம் 29 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
அருணகிரிநாதர் இத்தலத்தில் வீற்றிருக்கும் மேலக்குமரனை (முருகப்பெருமான்) போற்றி மூன்று திருப்புகழ் பாடல்கள் பாடி பரவியுள்ளார். அருணகிரிநாதர் “சூழும் வினை”, சேலையுடுத்து”, “நூலினையொத்த” என்று சிறப்பாக பாடல்களை தொடங்குகிறார். மூன்று திருப்புகழ் பாடல்களிலும் ராமாயண நிகழ்ச்சிகளை குறிப்பிடுகின்றார். மேலும் மாவலி வரலாற்றையும் குறிப்பிடுகின்றார். பழனி திருப்புகழிலும் மறைக்காட்டை குறிப்பிட்டுள்ளது சிறப்பு.
தல வரலாறு:
சைவத் திருமறைகள் நான்கும் இத்தலத்தை மறைக்காடு, மறைவனம், வேதவனம் என்று போற்றி. புகழ்கின்றன. வேதங்கள் நான்கும் மனித உருகொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலரெடுத்து வந்து திருக்கோவிலின் வடக்கு புறம் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள வேதாமிருத ஏரியில் நீராடி இத்திருக்கோவில் அமைந்துள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடிய பின்னர் இத்தலத்து இறைவனை போற்றி வழிபாடுகள் செய்தன. பின்னர் இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்துவிட்டு சென்றுவிட்டன. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டிவாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் ஆகியோரால் தேவாரத் தமிழ்ப்பதிகம் பாடித் திறக்கவும், மீண்டும் திருக்கதவு தாள் செய்யப்படுதலும் நிகழ்ந்தன.
வடமொழியும், தென்தமிழும் வழிபாட்டு ஆற்றலில் ஒன்றே என நிரூபணம் ஆகிய இடம் இவ்வூர். சிவப்பரம்பொருளின் திருமணக்கோலத்தை காண தேவரும், முனிவரும், பிறரும் வடதிசையில் ஒருங்கே கூடியதால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. ஏற்றத் தாழ்வை சமன் செய்ய இறைவன், அகத்திய மாமுனிவரை தென்திசைக்கு அனுப்பினார். அகத்திய மாமுனிவர் தாங்கள் மணக்கோலத்தை காணும் பாக்கியம் வேண்டும் என வினவ, அதற்கு இறைவனும் வேதங்கள் வழிபட்ட வேத வனத்தில் தரிசனம் தருவதாக வாக்களித்தார். அவ்வாறே அகத்திய மாமுனிவர் இங்கு வந்து தங்கி தவம் செய்து வந்தார். இறைவனும் வாக்களித்தபடி அகத்திய மாமுனிவருக்கு தமது திருமணக்கோலத்தினை, சித்திரை மாதம் வளர்பிறையில் சப்தமி திதியில் உச்சிகாலத்தில் இத்தலத்தில் காட்சியருளினார். இந்த காட்சியின்படி, கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னர் இறைவனும், இறைவியும் திருமணக் கோலத்தில் படைப்புச் சிற்பங்களாக எழுந்தருளியுள்ளனர். இந்தத் திருமணத் திருவிழா ஒவ்வோராண்டும் சித்திரைத் திங்களில் இத்தலத்தில் நிகழ்த்திக் காட்டப்பெறுகிறது. அதனால் இறைவன் மறைக்காட்டுறையும் மணாளர் என வழங்கப்படுகிறார்.
இத்தலத்தில் இறைவனின் கருவறையில் அனைய இருந்த விளக்கின் தீபத்தில் எலியின் மூக்கு சுட்டிட சுடர்விட்டு எரிந்தது. அந்த எலியை மறுபிறவியில் இறைவன் மகாபலி சக்கரவர்த்தியாக்கிய தலம் இத்தலமாகும். இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. தேவலோகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடக்கும்பொழுது பூலோகத்திலிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவலோகம் சென்று தேவர்களுக்கு ஆதரவாக போரிட்டு வெற்றி பெற்றதன் காரணமாக இந்திரன் அளித்த ஏழு விடங்கர்களில் ஒன்றான மரகதலிங்கம் இத்தலத்தில் முசுகுந்த சக்கர்வர்த்தியினால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தல அமைப்பு:
ஆகம அமைப்புடன் கூடிய இக்கோவிலில் கிழக்கு, மேற்கு என இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. இங்கு சுவாமி, அம்பாள், விநாயகர் மூவருக்கும் தனித் தனி கொடிமரம் உண்டு. கருவறையில் மூலவர் திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். சுவாமியின் பின்னால் சுவாமி-அம்பாள் திருமணக் கோலம் புடைப்பு சிற்பமாக உள்ளது. அம்மாள் வேதநாயகி தனி சந்நிதியில் அழகிய கோலத்தில் அருள்பாலிக்கின்றார். சக்தி பீடங்களில் இது சுந்தரி பீடம். தியாகேசர் சந்நிதியில் [மரகதலிங்கத்திற்கு (விடங்கப்பெருமான்)] இரண்டு வேளை பூஜைகள் நடக்கின்றன. நவக்கிரகங்கள் ஒரே முகமாக தனித் தனி விக்ரகமாக சுவாமி-அம்பாள் திருமணக் கோலத்தைக் காண ஒரே திசையில் உள்ளது.
மேலும் நடுக்கம் தீர்த்த விநாயகர், தொப்புள் விநாயகர், மேற்கு கோபுர விநாயகர், தொண்டு விநாயகர், இராவணன் வழிபட்ட வீரஹத்தி விநாயகர், சிந்தாமணி விநாயகர், 63 நாயன்மார்கள், 10 தொகையறாக்கள், தியாகேசர், காசி விஸ்வநாதர், விஸ்வாமித்ர லிங்கம், சேர லிங்கம், சோழ லிங்கம், பாண்டிய லிங்கம், வீணை இல்லாத சரஸ்வதி, தென் திசை நோக்கிய துர்க்கை, கால பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
வெளிப்பிரகாரத்தில் திருப்புகழ் தெய்வம் மேலக்குமரன் ஒரு முகமும், இரண்டு திருக்கரங்களும் கொண்டு மயிலுடன் வள்ளி, தெய்வானை சகிதம் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உட்பிரகாரத்தில் ஆறுமுகப்பெருமான் ஆறுமுகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் மயிலுக்கு முன்னால் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
மாசி மகம், மகா சிவராத்திரி, திருவாதிரை, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, தை அமாவாசை, விநாயகர் சதுர்த்தி வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு
பிரார்த்தனை:
ராஜயோகம் பெற்றிட, அரசியலில் அதிகாரப் பதவி அருள, திருமணத்தடை அகல, குழந்தைப்பேறு வேண்டி, பாவங்கள் விலக, நாக தோஷம் நீங்க, கல்வி, ஞானம் சிறக்க, செல்வம் பெருக, பிணிகள் தீர, மனஅமைதி பெற, வேண்டுதல் நிறைவேற
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், கல்யாண மாலை, தொட்டில் கட்டுதல், அன்னதானம், திருப்பணி பொருளுதவி
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5-8.30
அரசியலில் அதிகாரப் பதவி கிடைத்திட அருளும் நாகப்பட்டினம் வேதாரண்யம் திருமறைக்காடர் மற்றும் மேலக்குமரன் திருவடிகள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 960 ராஜ யோகம் அளிக்கும் நாகப்பட்டினம் வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில் திருப்புகழ் தெய்வம் மேலக்குமரன், குழகர், அஞ்சனாட்சி, ஒரே கோட்டில் நவக்கிரகங்கள்
படம் 2 - 960 அரசியலில் அதிகாரப் பதவி கிடைத்திட அருளும் நாகப்பட்டினம் வேதாரண்யம் கோவில்
Comments
Post a Comment