கோவில் 959 - நாகப்பட்டினம் கோடியக்கரை அமிர்தகடேஸ்வரர் கோவில் அமிர்தகர சுப்பிரமணியர்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-959 [திருப்புகழ் தலம்]

கோரிக்கைகளை நிறைவேற்றும் நாகப்பட்டினம் கோடியக்கரை அமிர்தகடேஸ்வரர் கோவில் அமிர்தகர சுப்பிரமணியர்

23.1.2024 செவ்வாய்


அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் [TM014595]

திருப்புகழ் தலம்

கோடியக்கரை-614807

(கோடிநகர்)

நாகப்பட்டினம் மாவட்டம்

இருப்பிடம்: வேதாரண்யம் 10 கிமீ, நாகப்பட்டினம் 58 கிமீ


மூலவர்: அமிர்தகடேஸ்வரர், அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்

அம்மன்: அஞ்சனாட்சி, அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி

திருப்புகழ் நாயகர்: அமுதகர சுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: குரா மரம்

தீர்த்தம்: அக்னி தீர்த்தம் (கடல்), அமுதக்கிணறு

புராணப்பெயர்கள்: கோடிநகர், கோடிக்குழகர், குழகர் கோவில், கோடிக்கரை

பாடியவர்: சுந்தரர், அருணகிரிநாதர் (1)


தல மகிமை:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் திருத்தலத்திலிருந்து தெற்கே 10 கிமீ தொலைவில் உள்ள கோடியக்கரை திருத்தலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் ஆதிப்பெயர் கோடிநகர் ஆகும். இக்கோவிலில் அமிர்தகடேஸ்வரர் அன்னை அஞ்சனாட்சியுடன் அருள்புரிகின்றார். நவக்கிரகங்கள் இக்கோவிலில் ஒரே வரிசையில் உள்ளதால், இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது. நாகப்பட்டினம் நகரிலிருந்து 58 கிமீ பிரயாணித்தாலும் இத்திருத்தலத்தை அடையலாம்.


பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்த கலசத்தை வாயு பகவான், தேவலோகத்திற்கு எடுத்துச் செல்லும்போது, அரக்கர்கள் சூறாவளிக் காற்றினை ஏவி விட, வாயு பகவான் அமிர்த கலசத்தைத் தவறவிடுகின்றார். அதை இத்தலத்தின் முருகப்பெருமான் ஏந்தி, தேவர்களிடம் அளிக்கின்றார். இதனால், தேவர்கள் மகிழ்ந்து, கந்தனுக்கு நீலோற்பல மலரைப் பரிசாக அளிக்கின்றனர். ஆறுகரங்கள் கொண்ட இத்தல முருகன் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும் மற்றொன்றில் நீலோற்பல மலரையும் ஏந்தி அருட்காட்சி அளிக்கின்றார். அமிர்த கலசத்திலிருந்து சிந்திய அமிர்தத் துளிகள் திரண்டு, சிவலிங்கமாக ஆனது. அந்த லிங்கமே இத்தலத்தின் இறைவனாக அருள்புரியும் அமிர்தகடேஸ்வரர் ஆவார். முருகன் (குழகன்) இங்கே சிறப்பு பெற்று இருப்பதாலும், குழக முனிவர் பூஜித்தமையாலும், இத்தலம் குழகர் கோவில் என்றழைக்கப்படுகின்றது. ஆறு வாரங்கள் சஷ்டியில் கந்தனுக்கு அபிஷேகம் செய்து, ஆறு நிற மலர்கள் மற்றும் ஆறு நிவேதனங்களால் ஆராதனை செய்வோர் சத்ரு பயம் நீங்கப் பெறுவர்.

சரியாக பேச்சு வராத குழந்தைகள் இங்கு முருகனுக்கு அபிஷேகிக்கும் தேனைப் பருகிட, விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இத்தல முருகன், நியாயமான கோரிக்கைகள் எதுவானாலும் நிறைவேற்றும் பெரும் வரப்பிரசாதி. வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது.

சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில், இது 127-வது தலமாகும். சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோவில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி தேவாரம் பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது. பித்ரு தோஷம் நீங்க தட்சிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் (ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி மகம்) தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பு எனக் கருதுகின்றனர். இங்கு நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்தால், முன்னோர்கள் முக்தி நிலையை அடைவார்கள். 


இத்தல சிவபெருமானை இந்திரன், சுவேத முனிவரின் மகன் பிரமன், நாரதர், குழக முனிவர், சித்தர்கள் முதலானோர் வழிபட்டுள்ளனர். இத்தலத்து கடற்கரையிலுள்ள நவக்கோடி சித்தர் கோவிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. திருவாவடுதுறை சித்தர் சிவப்பிரகாசர் அதிஷ்டானம் இங்குள்ளது சிறப்பு.


இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமாகும். இங்கு ஒரு திருப்புகழ் பாடல் இயற்றியுள்ளார். இத்தலத்து அமிர்தகர சுப்பிரமணியர் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும், ஏனைய கரங்களில் ஆயுதங்களுடம் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம் தொடர்புடையதாக இருக்கலாம். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடலை “நீலமுகிலான” எனத் தொடங்கி “குழகர் கோடிநகர் மேவை வளர் பெருமாளே” என்று சிறப்புற பாடி முடிக்கின்றார்.


தல வரலாறு:

ஒரு சமயம் திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்ற போது, அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்தில் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்றழைக்கப்படுகின்றார்.


தல அமைப்பு:

அபூர்வமான ஆறு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அடுத்து நந்தி உள்ளது. கருவறையில் அமிர்தகடேஸ்வரர் கருணாமூர்த்தியாக, சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். சதுர ஆவுடையராக அருள்கின்றார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். அன்னை அஞ்சனாட்சி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். விநாயகர் அமிர்த விநாயகர் என்ற திருப்பெயரில் அருள்கின்றார். மேலும் அமிர்த கணபதி, கஜலட்சுமி, நடராஜர், குழக முனிவர், அய்யனார், ஒரே வரிசையில் நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்

.

இத்திருத்தலத்தில் திருப்புகழ் நாயகர் அமிர்தகர சுப்பிரமணியர் ஒரு முகம், ஆறு திருக்கரங்களுடன் மயில் மீதமர்ம்ந்த கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அவரது திருக்கரங்களில் அமுத கலசம், நீலோற்பவம், பதுமம், அபயம், வஜ்ஜிரம், வேல் ஆகியவை உள்ளன. இத்தகைய வடிவம் கொண்ட முருகப்பெருமான் வேறு எந்த திருத்தலத்திலும் இல்லை.


திருவிழா:

திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, வைகாசி விசாகம் (10 நாள்), கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி,


பிரார்த்தனை:

கோரிக்கைகள் நிறைவேற, பித்ரு தோஷம் நீங்க, பேச்சு வராத குறை நீங்க, எதிரிகள் தொல்லைகள் அகல, குழந்தை வரம் கிட்ட, திருமண வரம் வேண்டி, வேண்டியவை நிறைவேற, கல்வி சிறக்க


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 7-10 மாலை 5-6


பித்ரு தோஷம் நீங்க அருளும் நாகப்பட்டினம் கோடியக்கரை அமிர்தகடேஸ்வரர் கோவில் அமிர்தகர சுப்பிரமணியரை போற்றி தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 959 கோரிக்கைகளை நிறைவேற்றும் நாகப்பட்டினம் கோடியக்கரை அமிர்தகடேஸ்வரர் கோவில் அமிர்தகர சுப்பிரமணியர்


படம் 2 - 959 பித்ரு தோஷம் நீங்க அருளும் நாகப்பட்டினம் கோடியக்கரை அமிர்தகடேஸ்வரர்



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்