கோவில் 958 - மயிலாடுதுறை திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில் சுப்பிரமணியர்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-958 [திருப்புகழ் தலம்]

பதவி உயர்வு, பணியிட மாற்றம் தந்தருளும் மயிலாடுதுறை திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில் சுப்பிரமணியர்

22.1.2024 திங்கள்


அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில்

திருப்புகழ் தலம்

திருவாளப்புத்தூர்-609205

(திருவாழ்கொளிபுத்தூர்)

மயிலாடுதுறை மாவட்டம்

இருப்பிடம்: மயிலாடுதுறை 16 கிமீ, சீர்காழி 19 கிமீ, வைத்தீஸ்வரன்கோவில் 13 கிமீ


மூலவர்: மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்

அம்மன்: வண்டமர்பூங்குழலி, பிரமகுந்தளாம்பிகை

திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வாகை மரம்

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்

புராணப்பெயர்கள்: வாகை மாநகர், திருவாழ்கொளிபுத்தூர்

பாடியவர்: திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் (1)


தல மகிமை:

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து பந்தணைநல்லூர் செல்லும் வழியில் 16 கிமீ தொலைவில் இருக்கும் திருவாளப்புத்தூர் திருத்தலத்தில் பதவி உயர்வு, பணியிட மாற்றம் தந்தருளும் மாணிக்கவண்ணர் கோவில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து 19 கிமீ பிரயாணம் செய்தாலும், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 13 கிமீ பிரயாணம் செய்தாலும் இத்திருத்தலத்தை அடையலாம். இங்கு மாணிக்கவண்ணர் வண்டமர்பூங்குழலி உடன் அருள்புரிகின்றார்.


இதன் புராணப்பெயர் திருவாழ்கொளிபுத்தூர் ஆகும். இத்தலத்தின் தலவிருட்சமாக வாகை மரம் இருப்பதால் ‘வாகை மாநகர்’ என்றும் அழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில், இது 29-வது தலமாகும். மகா விஷ்ணு, துர்க்கை, வாசுகி, அர்ஜுனன் வழிபட்ட தலமிது. பௌர்ணமியன்று மகாலட்சுமி பூஜை நடைபெறுகிறது.


இத்தல திருப்புகழ் பாடலில் வரும் வாகை மாநகர் பற்றி திருப்புகழ் அறிஞர் வலையப்பட்டி கிருஷ்ணன் பேரறிஞர் மு, அருணாசலம் அவர்களிடம் கேட்ட போது, வாகை மாநகர் என்ற பேருடைய தேவாரத்தலம் திருவாழ்வொளிபுத்துர் எனும் திருவாளப்புத்துர் என்று குறிப்பிட்டார். மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் அவர்கள் எழுதிய தலபுராணத்தில் இத்தலத்தை ‘வாகை மாநகர்’ என்று குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு திருப்புகழ் பாடல் பாடிப் பரவியுள்ளார். அருணகிரிநாதர் “ஆலையான மொழிக்கு” என்று தொடங்கி “வாகை மாநர் பற்று பெருமாளே” என்று அழகுற முடிக்கின்றார்.

தல வரலாறு:

ருதுகேதன் எனும் மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே சிவபெருமான் மாணிக்க மழையை பொழிவித்தார். எனவே இவருக்கு மாணிக்கவண்ணர் என்று பெயர் வந்தது. திருமால் மாணிக்கலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட தலமிது. மாணிக்க கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதாலும், இப்பெயரில் அழைக்கப்படுகிறார் என்றும் புராண வரலாறு உள்ளது.


தேவர்கள் பாற்கடலை கடைந்த போது மத்தாக பயன்பட்ட வாசுகி பாம்பு பலவீனமடைந்தது. களைப்பில் தன்னையும் மீறி விஷத்தை உமிழ்ந்து விட்டது. சிவன் விஷத்தை எடுத்து உண்டுவிட்டார். பின் தேவர்கள் அமிர்தத்தை எடுத்துக் கொண்டனர். தன் செயலுக்கு வருந்திய வாசுகி இத்தலத்தில் மாணிக்ககல்லை உமிழ்ந்து சிவனை வேண்டி பூஜை செய்தது. அவருக்கு காட்சி தந்து மன்னித்தருளிய சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.


மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்த துர்க்கை மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த பிறகு இத்தலத்தில் சிவபெருமானை வணங்கி ஆசிபெற்றாள். இவள் எட்டு கைகளுடன் சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும் ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுகிறாள்.


பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அர்ஜுனன் இத்தலம் வழியாக சென்றபோது, தாகம் எடுத்தது. எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் களைப்பில் அமர்ந்து விட்டான். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் தாகமாக இருப்பதால் நீர் தரும்படி கேட்டான். முதியவர் அர்ஜுனரிடம் ஒரு தண்டத்தை கொடுத்து அருகிலிருக்கும் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, அங்கு தோண்டினால் நீர் வரும் என்றார். அர்ஜுனன் தான் வைத்திருந்த வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றான். முதியவரோ அருகிலிருந்து புற்றில் வாளை மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அர்ஜுனன் நீர் அருந்திவிட்டு திரும்பியபோது முதியவரை காணவில்லை. அவன் தேடியபோது பாத தடம் இருந்ததைக் கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தது. அந்த புற்றினுள் வாள் இருந்ததைக் கண்ட அர்ஜுனன் அதனை எடுத்த போது சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். சிவபெருமான் அவனுக்கு காட்சி தந்து தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். பின் இவ்விடத்தில் கோவில் எழுப்பி வழிபட்டான் அர்ஜூனன். அர்ஜுனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தலம் வாளொளிப்புற்றூர் என்று பெயர் பெற்றது.


தல அமைப்பு:

கிழக்கு நோக்கிய இத்தலத்து கருவறையில் மூலவர் மாணிக்கவண்ணர் உயர்ந்த பாணத்துடன் கூடிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். இறைவன் மாணிக்கவண்ணர் திரிதல விமானத்தின் கீழ் அருளுகின்றார். கருவறைக்கு எதிரே ஒரு நந்தியும், பின்புறம் ஒரு நந்தியும் உள்ளன. அம்பாள் வண்டமர்பூங்குழலி தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். அன்னை பார்ப்பதறகு வண்டுகளை கவரும் மலர் போல் அழகுடன் இருப்பதால் வண்டமர்பூங்குழலி என்ற திருப்பெயர் ஏற்பட்டது. மேலும் நிருதி விநாயகர், காலடியில் நந்தியுடன் கூடிய தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அருகில் வணங்கிய படி திருமால் மற்றும் பிரம்மா, சிம்ம வாகனத்தில் கிளியுடன் கூடிய சாந்தமான அஷ்டபுஜ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் காலடியில் முயலகன் மற்றும் நாகம், நாலவர், மெய்கண்ட நாயனார், கஜலட்சுமி, சரஸ்வதி, நாக தோஷங்கள் நீக்கும் அஷ்ட நாகங்களுடன் கூடிய விநாயகர், வாசுகி, சூரியன், சந்திரன், இரட்டை பைரவர், சனீஸ்வரர் அருளுகின்றனர், ராஜகோபுரம், கொடிமரம், நவக்கிரகங்கள் இல்லை.


இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், பௌர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி,


பிரார்த்தனை:

பதவி உயர்வு, பணியிட மாற்றம் கிடைத்திட, திருமணத் தடை அகல, குழந்தை வரம் வேண்டி, ஜாதக ரீதியிலான பாதிப்புகள் நீங்க, நல்லன நடைபெற, கேட்டது கிடைக்க


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 6-12 மாலை 4-8


ஜாதக ரீதியிலான பாதிப்புகள் நீங்க அருளும் மயிலாடுதுறை திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் மற்றும் சுப்பிரமணியரை போற்றி வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 958 பதவி உயர்வு, பணியிட மாற்றம் தந்தருளும் மயிலாடுதுறை திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில் சுப்பிரமணியர்


படம் 2 - 958 ஜாதக ரீதியிலான பாதிப்புகள் நீங்க அருளும் மயிலாடுதுறை திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர்



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்