கோவில் 957 - மயிலாடுதுறை வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-957 [திருப்புகழ் தலம்]

பில்லி, சூனியம், பகை நீக்கி அருளும் மயிலாடுதுறை வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

21.1.2024 ஞாயிறு


அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில் [TM018062]

திருப்புகழ் தலம்

வழுவூர்-609401

மயிலாடுதுறை மாவட்டம்

இருப்பிடம்: மயிலாடுதுறை 8 கிமீ


மூலவர்: வீரட்டேஸ்வரர், கிருத்திவாசர், கஜசம்ஹார மூர்த்தி

அம்மன்: இலங்கிளைநாயகி, பாலகுராம்பிகை

திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: தேவதாரு, வன்னி மரம்

தீர்த்தம்: பாதாளகங்கை

புராணப்பெயர்கள்: தாருகாவனம், திருவழுவூர்

பாடியவர்: அருணகிரிநாதர் (2)


தல மகிமை:

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் வழுவூர் திருத்தலத்தில் பில்லி, சூனியம், பகை நீக்கி அருளும் வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வீரட்டேஸ்வரர் கோவிலில் இறைவன் வீரட்டேஸ்வரர் என்ற திருப்பெயரிலும், அன்னை இலங்கிளைநாயகி என்ற திருப்பெயரிலும் அருளாட்சி செய்கின்றனர். மூலவரை வேண்டுவோருக்கு துஅரங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே காணமுடியும் என்பது சிறப்பு. அமாவாசைதோறும் சுவாமி சந்நிதியிலுள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபடுவோர்க்குப் புத்திர தோஷம் நீங்கி நன்மக்கட்பேறு பெறுவதாக ஐதிகம்.


திருநாவுக்கரசரும், சுந்தரரும் போற்றி அருளிய தேவார வைப்புத்தலாமகும். சப்த கன்னியரில் வாராகி வழிப்பட்ட தலம் இது. 48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர். பிரளய காலத்திலும் அழியாமால் வழுவியதாதலின் வழுவூர் என்றானது. இதிகாசங்களில் இத்தலம் தாருகாவனம் என்று குறிப்பிடப்படுகிறது.


சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்தியருளிய அட்ட வீரட்டத்தலங்களில் வழுவூர் திருத்தலமும் ஒன்றாகும். அட்ட வீரட்டத்தலங்களில் இது 6-வது தலமாகும். ‘யானை உரித்த பிரான்’ என்று போற்றும் கஜசம்ஹார மூர்த்தியை சிறப்பு மூர்த்தமாகக் கொண்ட திருத்தலம் வழுவூர் ஆகும். யானையை உரித்த அருளாடல் அவிமுத்தம் என்று போற்றப் பெறும் காசியில் நிகழ்ந்ததாக புராணங்களில் கூறப்பட்டாலும் வழிவூரிலேயே இன்றும் கஜசம்ஹார பெருவிழா மாசி மாதத்தில் 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தின் சிறப்பு தெய்வமான கஜசம்ஹார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல், மாந்த்ரீகம் ஆகியவை நீங்கி நன்மை பயக்கும்.


அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமான் மீது இரண்டு திருப்புகழ் பாடல்கள் இயற்றியுள்ளார். “தருவூரிசை” என்று தொடங்கும் திருப்புகழ பாடலில் காமத்தை அகற்றி, முருகப்பெருமானின் திருவருள் வேண்டி வழுவூரில் நிலாவிய வாழ்வருள் ...... பெருமாளே” என்று முடிக்கிறார். மற்றொரு திருப்புகழ பாடலில் “தலைநாளிற்” தொடங்கி “வழுவூர் நற்பதி வீற்றிருந்தருள் ...... பெருமாளே” என்று சிறப்புற முடிக்கின்றார்.

தல வரலாறு:

பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும், இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது. தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய கஜாசுரன் என்ற யானை தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தியது, பின்னர் கஜாசுரன் சிவபெருமானை வம்பிழுக்க, பெருமான் அந்த யானையை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம் இதுவாகும். ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடி வர, அதையழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன. அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை, பஞ்சமுக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட இறைவன் வீரட்டேஸ்வரர் எழுந்து வெளிப்படவே, உமையவள் இடுப்பில் இருந்த முருகப்பெருமான் தன் தாய்க்கு தந்தையை சுட்டிக் காட்டினார். இந்த வரலாறு பற்றிய காட்சி கோவிலினுள் சிற்பங்களாக உள்ளன.


தல அமைப்பு:

மிகவும் பழமையான இக்கோவிலில் ஐந்து புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. கருவறையில் மூலவர் வீரட்டேஸ்வரர் நாகாபரணத்துடன் சுயம்பு லிங்கமாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அம்பாள் இலங்கிளைநாயகி தனி சந்நிதியில் பொலிவுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் செல்வ விநாயகர், ஞான சபையில் திருவடிகளை யானையின் தலை மீது ஊன்றிய பெரிய திருவுருவ கஜசம்ஹார மூர்த்தி, அருகில் குழந்தை முருகனை இடுப்பில் ஏந்திய உமையவள், சகஸ்ரலிங்கேஸ்வரர், ஆலிங்கன மூர்த்தி, பிச்சாடனர், மோகினி, வில்லோடு சனீஸ்வரன், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.


இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணிய சுவாமி ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன், வள்ளி, தெய்வானை உடனிருக்க கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

மாசிமகம், மகா சிவராத்திரி, திருவாதிரை, கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு


பிரார்த்தனை:

ஏவல், பில்லி, சூனியம், பகை, செய்வினை, மாந்திரீகம் அகல, துயரம் நீங்க, மன அமைதி பெற, திருமண வரம், குழந்தை வரம் கிடைக்க, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு, தொழில் விருத்தி அடைய, கல்வி, அறிவு, ஞானம் மேம்பட


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், கல்யாண மாலை சாத்துதல், அன்னதானம், திருப்பணி பொருளுதவி


திறக்கும் நேரம்:

காலை 6-12 மாலை 4-8


உத்தியோக உயர்வு தந்து அருளும் மயிலாடுதுறை வழுவூர் வீரட்டேஸ்வரர், சுப்பிரமணிய சுவாமி இருவரையும் மனக்கண்ணால் தரிசித்து வழிபடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 957 பில்லி, சூனியம், பகை நீக்கி அருளும் மயிலாடுதுறை வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருப்புகழ் நாயகன் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 957 உத்தியோக உயர்வு தந்து அருளும் மயிலாடுதுறை வழுவூர் வீரட்டேஸ்வரர்



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்