கோவில் 956 - மயிலாடுதுறை குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர் கோவில் சண்முகர்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-956 [திருப்புகழ் தலம்]

கடுமையான தோல் நோய்களையும் குணமாக்கும் மயிலாடுதுறை குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர் கோவில் சண்முகர்

20.1.2024 சனி


அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோவில்

திருப்புகழ் தலம்

குத்தாலம்-609801

(திருத்துருத்தி)

மயிலாடுதுறை மாவட்டம்

இருப்பிடம்: மயிலாடுதுறை 10 கிமீ


மூலவர்: உத்தவேதீஸ்வரர்

அம்மன்: அரும்பன்ன வனமுலைநாயகி, அமிர்த முகிழாம்பிகை

திருப்புகழ் நாயகர்: சண்முகர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: உத்தாலமரம்

தீர்த்தம்: பதும தீர்த்தம், சுந்தர தீர்த்தம், காவிரி, வடகுளம்

புராணப்பெயர்கள்: திருத்துருத்தி, குற்றாலம்

பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் (1)

பழமை: 1000 வருடங்கள் முன்


தல மகிமை:

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 10 கிமீ தொலைவில் இருக்கும் குத்தாலம் திருத்தலத்தில் தோல் நோய்களையும் குணமாக்கும் உத்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் உத்தவேதீஸ்வரர் அரும்பன்ன வனமுலைநாயகி சமேதராக அருள்புரிகின்றார். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தல விருட்சமான உத்தால மரம் மருத்துவ குணம் கொண்டுள்ளதால், சரும நோய்கள் உட்பட அனைத்து நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கை.


சிவபெருமான் இத்தலத்தில் அம்பாளை திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். இறைவன் பாதுகைகளை இப்போது சென்றாலும் தரிஸ்க்கலாம். சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில் உள்ள குளத்தில் நீராடிய பின்னர் அவரது உடற்பிணி தீர்ந்தது. ஆற்றுக்கிடையே இருந்ததால் ‘திருத்துருத்தி’ என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலின் தல விருட்சமான உத்தால மரம் ஆகும். எனவே இத்தலம் உத்தால வனம் என்றழைக்கப்பட்டது. அதுவே மருவி ‘குத்தாலம்’ என்று ஆனது இத்தலத்து சிவபெருமானை பார்வதி, காளி, அக்னி, வருணன், காமன், சூரியன், காசிபன், ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகத்தியர் மற்றும் பல முனிவர்கள், மகான்கள் வழிபட்டுள்ளனர். மேலும் காசிபன், ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகத்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.


திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரரால் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில், இது 37-வது தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 100-வது தேவாரத்தலம் ஆகும்.


இத்தலத்து முருகப்பெருமானை போற்றி அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடியுள்ளார். இத்தல திருப்புகழ் பாடல் “மலைக்கனத்தென” என்று தொடங்குகிறது. மேலும் இப்பாடலில் அருணகிரிபெருமான் “அடைக்கலப்பொருளாமென நாயெனை அழைத்து முத்தியதாம் அநுபூதி என் அருள் திருப்புகழ் ஓதுக வேல்மயில் அருள்வேனே என்று திருத்துத்தி முருகப்பெருமானை போற்றி பாடுகின்றார்.


தல வரலாறு:

பரத மாமுனிவர் அன்னை பார்வதி தேவி தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் யாக குண்டத்தில் பார்வதி தேவியை குழந்தையாக பிறக்க செய்கிறார். சிவபெருமானின் மேல் கொண்ட அதீத பக்தியின் காரணமாக அந்த குழந்தை வளர்ந்த பின் காதல் கொள்கிறார். சிவபெருமானையே கணவனாக நினைத்து மணலில் சிவபெருமானின் உருவத்தை உருவாக்குகிறார். இதனால் மனம் உருகிய சிவபெருமான் அங்கு காட்சி கொடுத்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார். அம்பிகை ‘சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய், தந்தையர், உற்றார், உறவினர் சூழ என்னை திருமணம் முடிக்க வேண்டும் ‘ என்று கூறினார். உன் விருப்பபடியே நம் திருமணம் நடக்கும் என்றும் அதன்படி சிவபெருமான் நந்தி பகவானை அனுப்பி பரத மாமுனிவரிடம் பெண் கேட்கிறார். பரத மாமுனிவர் இதற்கு ஒப்புக்கொள்ளவே குத்தாலத்தில் கோலாகலமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் , அம்மரம் குடையாக அமைய அம்பாளை திருமணம் செய்துகொள்ள சுவாமி மணவாளனாக எழுந்தருளினார்


தல அமைப்பு:

ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலப்புறம் தல விருட்சம் உள்ளது. கருவறையில் மூலவர் உத்தவேதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். அன்னை அரும்பன்ன வனமுலைநாயகி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். வெளி பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ‘துணைவந்த விநாயகர் சந்நிதி உள்ளது. தாயாரை மணந்துகொள்ள வந்த இறைவனுக்கு துணையாக வந்ததால் விநாயகருக்கு இப்பெயர் ஏற்பட்டது. மேலும் வலஞ்சுழி விநாயகர், மகாலட்சுமி, நடராஜர், பஞ்ச லிங்கங்கள், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, நால்வர், சுந்தரர், 63 நாயன்மார்கள், சப்தரிஷிஸ்வரர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், பிட்சாடனர் முதலிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். தெற்கு பகுதியில் பரிமள சுகந்தநாயகி தனி சந்நிதியில் அருள்கின்றார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் பரிமள சுகந்த நாயகி.


இக்கோவிலில் திருப்புகழ் தெய்வம் சண்முகர் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மயிலின் மீதமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் அற்புத கோலத்தில் மேற்கு நோக்கி திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சண்முகர் மயில் மீது அமர்ந்து இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் எழுந்தருளி அருள்கின்றார்.


திருவிழா:

மகா சிவராத்திரி, திருவாதிரை, கார்த்திகை ஞாயிறு, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

சரும நோய்கள் குணமாக, இடர்கள் களைய, வேண்டுவன நிறைவேற, திருமணத் தடை அகல


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்,


திறக்கும் நேரம்:

காலை 6-12.30 மாலை 5-9


இடர்கள் அனைத்தும் களைய அருளும் மயிலாடுதுறை குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர், சண்முகர் திருப்பாதங்கள் பணிந்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 956 கடுமையான தோல் நோய்களையும் குணமாக்கும் மயிலாடுதுறை குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர் கோவில் சண்முகர்


படம் 2 - 956 இடர்கள் அனைத்தும் களைய அருளும் மயிலாடுதுறை குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்