கோவில் 897 - ஆந்திரா நெல்லூர் கனுபார்த்திபாடு சுப்பிரமணியேஸ்வர சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-897
சர்ப்ப தோஷம் நீக்கும் ஆந்திரா நெல்லூர் கனுபார்த்திபாடு சுப்பிரமணியேஸ்வர சுவாமி கோவில்
22.11.2023 புதன்
அருள்மிகு சுப்பிரமணியேஸ்வர சுவாமி திருக்கோவில்
கோலகமுடி சாலை [Golagamudi Road]
கனுபார்த்திபாடு-524003 [Kanuparthipadu]
நெல்லூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம் மாநிலம்
இருப்பிடம்: நெல்லூர் பேருந்து நிலையம் 7 கிமீ
மூலவர்: சுப்பிரமணியேஸ்வர சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நெல்லூர் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள கனுபார்த்திபாடு கிராமத்தில் சர்ப்ப தோஷம் நீக்கும் சுப்பிரமணியேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணியேஸ்வர சுவாமி குடியமர்ந்து அருளாட்சி செய்கின்றார். சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் உட்பட அனைத்து தோஷங்களும் விலக சுப்பிரமணியேஸ்வர சுவாமி அருள்புரிவதால், இக்கோவிலுக்கு ஆந்திர மாநில பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகம், தெலுங்கானா, கர்நாடகாவிலிருந்தும் முருக பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர். சுப்பிரமணியேஸ்வர சுவாமி நாகசொரூபமாகவும் ஆசிகள் கூறுவதாக நம்பிக்கை.
செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இந்நாட்களில் கோவில் கூடுதல் நேரம் திறந்திருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தன்று சிறப்பு நாக தெய்வ (சேஷையா) வழிபாடுகள் நடக்கும், அதிக அளவில் பக்தர்கள் வந்து நாக தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்வது சிறப்பம்சம். சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், கார்த்திகை முதல் சோமவார தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
சுப்ரமணியேஸ்வர சுவாமியின் கோவில் மிகவும் பழமையான, மகிமை வாய்ந்த தெய்வீக ஆலயமாகும். பல்லாண்டு காலமாக சுப்பிரமணியேஸ்வர சுவாமி நாக வடிவில் அருள்புரிகின்றார் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.
தல அமைப்பு:
அழகிய கோபுர ஆர்ச் வழியே சென்றால் வேல், பலிபீடம், கொடிமரம் பக்தர்களை வரவேற்கின்றன. நாக தேவதைகள் நாற்புறமும் வரிசையாக அமைந்திருக்க, உள்ளே மரத்தடியில் நாக தெய்வம் ((சேஷையா) வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். பக்தர்கள் ஒவ்வொரு நாக சிற்பங்களுக்கும், நாக தெய்வத்திற்கும் பாலாபிஷேகம் செய்கின்றனர், மேலும் ஒரு மரத்தடியில் நாக தேவதைகள் அருளுகின்றனர். கருவறையில் சுப்பிரமணியேஸ்வர சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்தில் பழனி தண்டாயுதபாணி உட்பட முருகப்பெருமான் பல்வேறு திருக்கோலங்களில் அருள்கின்றார். மகா கணபதி தனி சந்நிதியில் அருள்கின்றார். காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். நவக்கிரகங்கள் தத்தம் துணவியருடன் வீற்றிருந்து அருளுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், பிரதோஷம், கார்த்திகை முதல் சோமவாரம்
பிரார்த்தனை:
சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பிற தோஷங்கள் விலக, பிரச்சினைகள் தீர, குழந்தை பாக்கியம் கிட்ட, திருமணம் நடைபெற, செல்வம் சேர, வேண்டிய வரம் பெற
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், பொருள் காணிக்கை
திறக்கும் நேரம்
காலை 7-11 மாலை 6-8 [செவ்வாய், ஞாயிறு கூடுதல் நேரம்]
பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஆந்திரா நெல்லூர் கனுபார்த்திபாடு சுப்பிரமணியேஸ்வர சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment