கோவில் 805 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் வடாரண்யேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-805
கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் வடாரண்யேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
22.8.2023 செவ்வாய்
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்
திருவாலங்காடு-631210
திருவள்ளூர் மாவட்டம்
இருப்பிடம்: திருவள்ளூர் 20 கிமீ, சென்னை கோயம்பேடு 57 கிமீ
மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர் சிங்கப்பெருமான்
அம்பாள்: வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள்
திருப்புகழ் நாயகன்: முருகப்பெருமான்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: பலா மரம், ஆலமரம்
தீர்த்தம்: முத்தி
பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அப்பர், காரைக்கால் அம்மையார், அருணகிரிநாதர் (4)
தலமகிமை:
திருவள்ளூர் நகரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து 57 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள திருவாலங்காடு எனும் ஊரில் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் வடாரண்யேஸ்வரர் அம்பாள் வண்டார்குழலியுடன் அருளாட்சி செய்கின்றார். நடராஜப்பெருமான் ஊர்த்தாண்டவம் திருக்காட்சி அருளிய சிறப்பு தலமிது. நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் இத்திருத்தலம் ரத்தின சபை ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி பீடம். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.
திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற 248-வது சிவாலயமாகும் இத்தலம். இறைவனால் அம்மையே என அழைக்கப் பெற்று சிறப்பிக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, ஈசனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோவில் இது. அதனால் இத்தலத்திற்கு வரும் திருஞானசம்பந்தர் ஊருக்குள் கால் பதிக்க அஞ்சி ஊர் எல்லையிலேயே தங்கி பாடி அருளிய தலமிது. சுந்தரரும் தன் கண்களை இழந்த பின். இத்திருத்தல எல்லையிலேயே தங்கி பாடல் பாடிய தலம். இத்தலத்தில் திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். காரைக்கால் அம்மையார் 11-ம் திருமுறை அருளிய தலமாகும்.
காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.
அருணகிரி பெருமான் இக்கோவில் திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமானை போற்றி 4 பாடல்களை பாடியுள்ளார். அவை 1. கனஆலம் கூர்விழி மாதர்கள் …, 2. பொன்றா மன்றாக்கும் புதல்வரே …, 3. புவிபுனல் காலும் காட்டி சிகியோடு வானும் சேர்த்தி …, 4. வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டி …. என்று தொடங்கும் பாடல்கள் ஆகும். தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்’ என்று துவங்கும் பழனி திருப்புகழ் பாடலில் “மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை’ என்ற அடிகளில் திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய போட்டி நடனத்தில் காளியை தோற்கடித்த வரலாற்றை அருணகிரிநாதர் தெரிவிக்கிறார்.
தல வரலாறு:
ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் (நடராஜர்) நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் நடராஜர் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். ஆலமரங்கள் நிறைந்த இக்காட்டில் நடனமாடியதால், இத்தலத்திற்கு திருவாலங்காடு என பெயர் வந்தது. எனவே இங்கு கோவில் கண்ட ஈசனின் நாமம் வடாரண்யேஸ்வரர் ஆகும்.
சிவபெருமானின் தாண்டவக் கோலத்தைக் காணத் தவமிருந்த சுனந்த முனிவருக்கு திருவாலங்காடு தலத்தின் பெருமையை சிவபெருமான் எடுத்துக் கூறி அங்கு சென்று தவமியற்றக் கூறினார். அதன்படி சுனந்தர் திருவாலங்காடு வந்து கடும் தவமியற்றினார். நெடுங்காலம் செல்லவே அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி புல் வளர்ந்து அதன் உச்சியில் முஞ்சிப் புல்லும் (நாணல்) வளர்ந்து விட்டது. அதனால் அவருக்கு முஞ்சிகேசர் என்ற பெயரும் வந்தது. அதே நேரம் சிவனின் திருக்கரத்தில் ஆபரணமாக இலங்கிய கார்கோடகன் என்னும் பாம்பு ஈசனின் கையிலேயே நஞ்சைக் கக்கி விட்டது. அக்குற்றத்திற்காக அந்தப் பாம்பையும் திருவாலங்காடு சென்று தவமியற்றக் கட்டளையிட்டார் ஈசன்.
தல அமைப்பு:
ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது. நுழைந்தவுடன் இடப்புறம் வல்லப கணபதி அருள்கின்றார். அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. கருவறையில் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலி தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். வண்டார் குழலி - வண்டுகள் மொய்க்கும் வகையில் வாசமுள்ள கூந்தலையுடைய அன்னை ஆகவே இத்தலம் தலைக்குரிய திருமுடி தலமாக கூறப்படுகிறது. இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அருளுகின்றனர். சண்டிகேஸ்வரர் தனி சந்நிதியில் அருள்கின்றார்.
எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள நடராஜ பெருமான் உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். எதிரில் நிலைக்கண்ணாடி ஒன்று உள்ளது. அருகில் சிவகாமி காரைகால் அம்மையார் திருமேனிகள் உள்ளன. நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. காளியை வழிபாடு செய்த பின் மூலவரை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும். மேலும் சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், முஞ்சிகேசர், பதஞ்சலி முனிவர், எண்வகை விநாயகர், பஞ்ச லிங்கங்கள், சஹஸ்ரலிங்கம், கஜலட்சுமி, வாகனமின்றி பைரவர் தனித்தனி சந்நிதிகளில் அருள்கின்றார்.
திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் இக்கோவிலில் 3 இடங்களில் அருள்பாலிக்கின்றனர். ஆலய முகப்பில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் அருளாட்சி செய்கின்றார். அடுத்து ஆலய உட்பிரகார சுற்றில் முதலில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார். மூன்றாவது கருவறை மூலவர் பின்புறத்தில் வலது கோடியில் முருகப்பெருமான் தேவியர் இருக்க மயில் உடனிருக்க அருள்பாலிக்கின்றார்.
திருவிழா
மார்கழி திருவாதிரை (3 நாள்), பங்குனி உத்திரம் (10 நாள்), ஐப்பசி பவுர்ணமி, மகா சிவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம், பிரதோஷம், பவுர்ணமி
பிரார்த்தனை:
கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க, நடனக்கலைகளில் தேர்ச்சி பெற, திருமணத்தடை அகல, சனி தோஷம் நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 6-9
நடனக்கலைகளில் தேர்ச்சி பெற அருளும் திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் மற்றும் முருகப்பெருமானை தொழுவோம் !
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 805 கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
படம் 2 - 805 நடனக்கலைகளில் தேர்ச்சி பெற அருளும் திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப்பெருமான் ஊர்த்துவத் தாண்டவம்
Comments
Post a Comment