கோவில் 803 - திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-803
விரும்பியது கிடைக்க அருளும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்
20.8.2023 ஞாயிறு
அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில்
நெல்லுக்கார தெரு
காஞ்சிபுரம்-631502
காஞ்சிபுரம் மாவட்டம்
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 68 கிமீ, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 900 மீ
மூலவர்: கச்சபேஸ்வரர்
அம்பாள்: சுந்தராம்பிகை
திருப்புகழ் நாயகன்: ஆறுமுகப்பெருமான்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தீர்த்தம்: இஷ்டசித்தி தீர்த்தம்
பாடியவர்: அருணகிரிநாதர் (2)
தலமகிமை:
காஞ்சி மாநகரில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 900 மீ தூரத்தில் திருப்புகழ் தலமான கச்சபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகில் எண்ணற்ற சிவ ஸ்தலங்கள், பெருமாள் கோவில்கள், காஞ்சிய காமாட்சி அன்னை கோவில், குமரகோட்டம், குபேரர் கோவில் அமைந்துருப்பது சிறப்பம்சமாகும். இங்கு வீற்றிருக்கும் மூலவர் கச்சபேஸ்வரரை திருமால், விநாயகர், துர்க்கை, ஐயனார், சூரியன், பைரவர் வழிபட்டனர். திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கியதால், ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது..
காஞ்சி திருத்தலத்தில் 5 திருப்புகழ் தலங்கள் உள்ளன. அவை 1. ஏகாம்பரேஸ்வரர் கோவில் (37), 2. காமாட்சி அம்மன் கோவில் (2), 3. குமரகோட்டம் (2), 4. திருமேற்றளீஸ்வரர் கோவில் (1), 5. திருக்கச்சப்பேஸ்வரர் கோவில் (2). ஆக மொத்தம் 44 திருப்புகழ் பாடல்கள் அருணகிரிநாதர் இயற்றியுள்ளார். அருணகிரியார் கச்சபேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமானை போற்றி ‘இறைச்சிப் பற்று’ எனும் துவங்கும் திருப்புகழில் ‘கச்சபத்திச்சைப் படுக் கச்சி பதிச்சொக்கப் பெருமாளே’ என்றும், ‘மக்கட்குக் கூறரிதானது’ என்று துவங்கும் திருப்புகழில் கச்சிக் கச்சாலையில் மேவியப் பெருமாளே என்று 2 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த ஆலயத்தில் அமைந்துள்ள திருக்குளத்தின் பெயர் "இஷ்டசித்தி தீர்த்தம்".. இத்தீர்த்தக் குளத்தைக் கண்டவர்களும், தன் உடம்பில் இத்தீர்த்தத்தை தெளித்துக் கொண்டவர்களுக்கும், மூழ்கிக் குளிப்பர்களுக்கு அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு போன்ற பொருளை அடைவார்கள் என பக்தர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக் கிழமை முழுகினால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறந்திடும், மனைவி அமையாதவர்களுக்கு, நல்மனைவி அமைந்திடும், நோயில் துன்புறும் மக்கள், நோய் தீர்ந்து அவர்களின் ஆயுள் கெட்டிப்படும், கல்வி அறிவைப் பெறுவர் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பொன் பொருள் இல்லாதவர் அனைத்துச் செல்வமும் பெற்றுச் சிறப்புடன் வாழ்வர் மற்றும் பதவி வேலை இல்லாதவர் பணியையும் பெற்று வாழ்வார்கள் என்பது இக்கோயில் திருக்குளத்தின் சிறப்பாக உள்ளது.
.தல வரலாறு:
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்த போது, திருமால் ஆமையாக (கச்சபம்) இருந்து மந்தர மலையைத் தாங்கினார். அமுதம் கிடைத்தவுடன் பெருமாள் செறுக்குற்று உயிர்கள் அனைத்தும் அஞ்சுமாறு கடல்களைக் கலக்கினார். இதைக் கண்ட சிவபெருமான் ஆமையை (கச்சபம்) அழித்து அதன் ஓட்டை, தான் அணிந்திருக்கும் வெண்டலை (தசை நீங்கி எலும்பு மட்டும்) மாலையின் இடையில் கோர்த்து அணிந்து கொண்டார். திருமால் தம் செயலுக்கு வருந்தி , காஞ்சியை அடைந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு வைகுந்த தலைமைப் பதவியை திரும்ப பெற்றார். திருமால், கச்சபம் (ஆமை) வடிவில் வழிபட்டதால் இது கச்சபேசம் எனப்பட்டது. இறைவன் கச்சபேஸ்வரர் (கச்சபேசர்) என்றழக்கப்படுகிறார். இக்கோவிலின் கும்பாபிஷேகம் 13.6.1954 மற்றும் 10.6.2005-ல் சிறப்புற நடைபெற்றது.
தல அமைப்பு:
திருக்கோவில் கருறையில் மூலவர் கச்சபேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் இத்திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் கருவறையின் பின்புறம் வலது புறத்தில் திருப்புகழ் தெய்வம் ஆறுமுகப்பெருமான் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானை உடனிருக்க தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக திகழ்கின்றார். வெளிப்பிராகரத்தில் சத்தியமொழி விநாயகர் அருள்கின்றார். இவரை பொய்யாமொழிப் பிள்ளையார் என்றும் அழைக்கின்றனர்.
இக்கோவிலில் மூலவர் தவிர இட்ட சித்தீசப் பெருமான், யோக சித்தீசப் பெருமான் தரும சித்தீசப் பெருமான், ஞான சித்தீசப் பெருமான், வேதசித்தீசப் பெருமான் (சதுர்முகேசுவரப் பெருமான்), யுக சித்தீசப் பெருமான், பாதாள ஈசுவரப் பெருமான், லிங்கபேசர் பெருமான், குளக்கரை ஜலகண்டேசுவரப் பெருமான் தனித் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர். மற்றும் மூலவருக்கு வடக்கே சுற்றுப் பிராகாரத்தில் 9 லிங்கங்களையும் (108, 1008 லிங்கங்கள்) தரிசித்துப் பேறு பெறலாம். மேலும் விஷ்ணு துர்க்கை, பஞ்ச சந்தி விநாயகர், ஆதிக்கேசவப் பெருமான், சரஸ்வதி, பைரவர், சூரியன் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், பிரதோஷம், பவுர்ணமி
பிரார்த்தனை:
விரும்பியது கிடைக்க, துன்பம் நீங்க. இன்பம் பெற, முக்தி அடைய, நோய்கள் நீங்க, குழந்தை வேண்டி, நல் மனைவி வேண்டி, கல்வி, ஞானம் சிறக்க, ஆயுள் பலம் பெற, செல்வம் சேர, வேலை வேண்டி
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 7.30-11.30 மாலை 5-8
துன்பம் நீங்கி இன்பம் பெற அருளும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் மற்றும் ஆறுமுகப்பெருமான் திருபாதங்கள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 803 விரும்பியது கிடைக்க அருளும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் ஆறுமுகப்பெருமான்
படம் 2 - 803 துன்பம் நீங்கி இன்பம் பெற அருளும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில்
Comments
Post a Comment