கோவில் 802 - திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-802
வேண்டும் வரங்கள் கிடைக்கும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
19.8.2023 சனி
அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோவில்
திருமேற்றளித் தெரு
பிள்ளையார் பாளையம்
காஞ்சிபுரம்-631501
காஞ்சிபுரம் மாவட்டம்
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 68 கிமீ, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 2.2 கிமீ
மூலவர் (2): திருமேற்றளீஸ்வரர், ஓதவுருகீஸ்வரர்
அம்பாள்: திருமேற்றளி நாயகி
உற்சவர்: சந்திரசேகர்
திருப்புகழ் நாயகன்: முருகப்பெருமான்
தல விருட்சம்: மாமரம்
தீர்த்தம்: சிவகங்கை
புராணப்பெயர்: திருக்கச்சிமேற்றளி
பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர்
தலமகிமை:
கோவில்கள் நிறைந்த காஞ்சி மாநகரில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2.2 கிமீ தூரத்தில் வேண்டும் வரங்கள் கிடைக்கும் திருமேற்றளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் 2 மூலவர்கள் அருள்பாலிப்பது சிறப்பம்சம். திருமேற்றளீஸ்வரர் பிரதான மூலவராக அருள்கின்றார். மற்றொருவர் ஓதவுருகீஸ்வரர் ஆவார். அம்பாளின் நாமம் திருமேற்றளி நாயகி. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 234-வது ஆகும். தொண்டை நாட்டுத்தலங்களில் இது 2-வது தலமாகும். அப்பர், சுந்தரர் தலா ஒரு தேவாரப் பாடல் பாடியுள்ளனர்.
காஞ்சி திருத்தலத்தில் 5 திருப்புகழ் தலங்கள் உள்ளன. அவை 1. ஏகாம்பரேஸ்வரர் கோவில் (37), 2. காமாட்சி அம்மன் கோவில் (2), 3. குமரகோட்டம் (2), 4. திருமேற்றளீஸ்வரர் கோவில் (1), 5. திருக்கச்சப்பேஸ்வரர் கோவில் (2). ஆக மொத்தம் 44 திருப்புகழ் பாடல்கள் அருணகிரிநாதர் இயற்றியுள்ளார். ‘புகலும் கொண்டதற்கு சித்தியளிக்கும் பெருமாளே’ எனும் இத்தல திருப்புகழ் பாடல் இத்தலபுராண நிகழ்வோடு பொருந்துவதாக அமைந்துள்ளது.
இத்தெருவின் கீழ்க்கோடியில் திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது. மிகச் சிறிய கோவில். ஞானசம்பந்தர் சந்நிதி மட்டுமே உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளது. உற்சவத் திருமேனி வலக்கை சுட்டிய விரலுடன், இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது.
தல வரலாறு:
திருமால் சிவ சாரூப நிலையைப் பெற வேண்டி இறைவனை வழிபட்ட திருத்தலம். இறைவன் காட்சி தந்து நின்றபோது, திருமால் சிவசாரூப நிலையை வேண்ட, ஞானசம்பந்தர் இங்கு வருகை தந்து பதிகம் பாடும் போது அது கிடைக்கும் என்றும், அதுவரை இங்கிருந்து தவஞ்செய்யுமாறும் இறைவன் வரமளித்தார். அதன்படியே ஞானசம்பந்தர் வந்து பாடியபோது திருமால் சிவசாரூபம் பெற்றார் என்பது தலவரலாறு.
தல அமைப்பு:
இக்கோவிலின் ராஜகோபுரம் 3 நிலைகள் உள்ளன. கோவில் வாயிலில் துவார கணபதி அருள்கின்றார். பிரதான மூலவர் திருமேற்றளீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். இரண்டாவது மூலவர் ஓதவுருகீஸ்வரர் தனி கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அருகே திருமால் அருளுகின்றார். சிவலிங்கம். மற்றும் திருமால் பாதங்களை ஒரே நேரத்தில் தரிசித்தால், குறைகள் யாவும் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். இரண்டாவது மூலவர் ஓதவுருகீஸ்வரருக்கே ராஜகோபுரம், பிராதன வாயில் உள்ளன. இவருக்கு எதிரில் உள்ள நந்தியெம் பெருமானுக்கே பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை அருள்கின்றனர். அன்னை பராசக்தி தனி சந்நிதியில் சாந்த முகத்துடன் அருள்கின்றார். நால்வர், காசி விஸ்வநாதர்,நவக்கிரகங்கள், பைரவர் தனித் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களுக்கு தனித்தனியே அம்பாள் கிடையாது. அம்பிகை காமாட்சியே மூலத் திருவாட்டி. இந்த மண்டலம் முழுமையும் அவளுடைய ஆட்சியே. ஆகவே, இந்தக் கோவிலில் அம்மனின் திருமேனி பிற்காலப் பிரதிஷ்டையாக இருக்க வேண்டும்.
கோவில் நுழைவாயிலின் வலப்புறம் முருகப்பெருமான் மயில் மீதம்ர்ந்தவாறு அருள்பாலிக்கின்றார். 2-வது மூலவர் ஓதவுருகீஸ்வரர் சந்நிதியின் வெளிப்புறத்தில் மயில் மீதர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
.
திருவிழா:
மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், ஞானப்பால் உற்சவம்
பிரார்த்தனை:
வேண்டும் வரங்கள் நிறைவேற, குறைகள் தீர, வாழ்வில் வளம் பெற, மன அமைதி வேண்டி
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்,திருப்பணி பொருளுதவி
திறக்கும் நேரம்:
காலை 7-12 மாலை 5-9
வாழ்வில் குறைகள் யாவும் தீர்க்கும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் மற்றும் முருகப்பெருமானை தொழுது பயனடைவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 802 வேண்டும் வரங்கள் கிடைக்கும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோவில் முருகப்பெருமான்
படம் 2 - 802 வாழ்வில் குறைகள் யாவும் தீர்க்கும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர்
Comments
Post a Comment