கோவில் 801 - திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பாலசுப்பிரமணியர்

 🙏🏻🙏🏻                                                                                                                                                தினம் ஒரு முருகன் ஆலயம்-801

வேண்டுவோருக்கு வரங்களை அள்ளித் தரும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பாலசுப்பிரமணியர்

18.8.2023 வெள்ளி


அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில்

கவுரி கோட்டம்

காஞ்சிபுரம்-631501

காஞ்சிபுரம் மாவட்டம்

இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 66 கிமீ, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 850 மீ


மூலவர்: காமாட்சி அம்மன்

திருப்புகழ் நாயகன்: பாலசுப்பிரமணியர்

தல விருட்சம்: செண்பகம்

தீர்த்தம்: பஞ்ச கங்கை

புராணப்பெயர்: கச்சி

பாடியவர்கள்: ஆதிசங்கரர், அருணகிரிநாதர்


தலமகிமை:

காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் உலகப் புகழ் பெற்ற வேண்டுவோருக்கு வரங்களை அள்ளித் தரும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இக்கோவிலை கவுரி கோட்டம் என்றும் அழைக்கின்றனர். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் நாபி (தொப்புள்) விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்தார்.

காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோவில்களும் காமாட்சி கோவிலை நோக்கியே அமைந்திருக்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள எந்த கோவிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோவிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோவிலை சுற்றி வரும் பழக்கம் இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சந்நிதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறார்.


இத்திருத்தலத்தில் ஆதிசங்கரர் ஆனந்த லஹரி பாடியுள்ளார். அருணகிரிநாத பெருமான் இக்கோவில் காமாட்சி அம்மன் கோவில் பாலசுப்பிரமணியர் உட்பட காஞ்சிபுரம் திருத்தலத்தில் உள்ள கோவில்களில் உள்ள முருகப்பெருமானை போற்றி மொத்தம் 44 திருப்புகழ் பாடல்கள் [மதாணி வரிசைப்படி 309-352] பாடியுள்ளார். அருணகிரிநாதர் ‘சலமல விட்ட, தலி வலையத்து’ என்று துவங்கும் இரு திருப்புகழ் பாடல்களில் ‘கவுரி திருக்கொட்டமர்ந்த இந்திரர் தம்பிரானே’ என்று திருப்புகழ் தெய்வத்தை போற்றி பாடியுள்ளார்.

காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதிசங்கரால் எட்டாம் நூற்றாண்டில், இக்கோவிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.


துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் 2000 சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் 1000 சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் 500 சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு. இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் காமகோடி காமாட்சி என அழைக்கப்படுகிறாள்.


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. புரட்டாசியில் நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசியில் அவதார உற்சவம் நடக்கிறது. தீபாவளி, பொங்கல், தமிழ். ஆங்கில வருட பிறப்பு, விஜய தசமி திருநாட்களில் காமாட்சி அம்மன் தங்கரத்ததில் திரு உலா வருவார்.

தல வரலாறு:

பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால்தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார். அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோவிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும்


தல அமைப்பு:

கோவிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. கருவறை தங்க விமானத்தின் கீழ் காமாட்சி அம்மன் அமர்ந்த கோலத்தில் தெங்கிழக்கு நோக்கி அழகிய தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். காமாட்சி அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. காமாட்சி அம்பாள் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். முன் இரு கைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இரு கைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறார். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம். காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். கருவறையைச் சுற்றி பங்காரு காமாட்சி, ஆதிசங்கரர் மற்றும் மகா சரஸ்வதி ஆகியோரின் சிறிய மூர்த்தங்கள் உள்ளன. பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் சந்நிதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருப்பது சிறப்பான அம்சமாகும்.


முருகப்பெருமானுக்கு இக்கோவிலில் தனி சந்நிதி இல்லை. காமாட்சி அன்னையை தரிசிக்க செல்லும் வழியில், உட்பிரகார திருச்சுவற்றில் திருப்பிகழ் தெய்வம் பாலசுப்பிரமணியர் என்ற திருப்பெயருடன் சிறிய திருமேனியராய் எழுந்தருளி தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

.

திருவிழா:

மாசி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம், புரட்டாசி\ நவராத்திரி, ஐப்பசி அவதார உற்சவம், பவுர்ணமி, தீபாவளி, பொங்கல், தமிழ். ஆங்கில வருட பிறப்பு, விஜய தசமி, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வெள்ளி


பிரார்த்தனை:

வேண்டுவோருக்கு வரங்களை அள்ளித் தர, ஐஸ்வர்ய வாழ்வு வேண்டி, மன நிம்மதி பெற, திருமணம், குழந்தை வேண்டி, நவக்கிரக தோஷங்கள் விலக, நினைத்தது நிறைவேற


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம், திருப்பணி பொருளுதவி


திறக்கும் நேரம்:

காலை 5-12.30 மாலை 4-9

நினைத்தது நிறைவேற்ற அருளும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மற்றும் பாலசுப்பிரமணியர்ரை போற்றி புகழ்ந்திடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 801 வேண்டுவோருக்கு வரங்களை அள்ளித் தரும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பாலசுப்பிரமணியர்


படம் 2 - 801  நினைத்தது நிறைவேற்ற அருளும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்