கோவில் 800 - திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மாவடி கந்தன்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-800
பக்தர்களுக்கு முக்தி தரும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மாவடி கந்தன்
17.8.2023 வியாழன்
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில்
காஞ்சிபுரம்-631501
காஞ்சிபுரம் மாவட்டம்
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 65 கிமீ, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 1.5 கிமீ
மூலவர்: ஏகாம்பரநாதர், ஏகாம்பரேஸ்வரர்
அம்பாள்: ஏழவார்குழலி, காமாட்சி
திருப்புகழ் நாயகன்: மாவடி கந்தன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: மாமரம் [மாவடி]
தீர்த்தம்: சிவகங்கை
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர்
• தாயும், தந்தையும், குருவும், குருவுக்கு குருநாதனுமான எம் முருகப்பெருமானின் திருவடி சரணங்கள்
தலமகிமை:
கோவில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்பு பெயரைக் கொண்ட காஞ்சிபுரம், சென்னை கோயம்பேட்டில் இருந்து 65 கிமீ தொலைவிலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 1.5 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாநகரில் வாழ்வோருக்கு முக்தி தரும் மாவடி கந்தன் குடியிருக்கும் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. நூற்றுக்கணக்கில் சிறப்பு மிக்க கோவில்கள் இருக்கும் இந்நகரத்தில் புகழ் பெற்ற சக்தி தலமான காமாட்சி அம்மன் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவில், குமரகோட்டம், காஞ்சி மடம் போன்றவை அருகில் இருப்பது கூடுதல் சிறப்பம்சம். அருணகிரிநாத பெருமான் இக்கோவில் மாவடி கந்தன் உட்பட காஞ்சிபுரம் திருத்தலத்தில் உள்ள கோவில்களில் உள்ள முருகப்பெருமானை போற்றி மொத்தம் 44 திருப்புகழ் பாடல்கள் [மதாணி வரிசைப்படி 309-352] பாடியுள்ளார். நால்வர் பாடிய சிறப்புப் பெற்ற தலம் இது. சுந்தரருக்கு கண் பார்வை அருளிய தலமிது.
பஞ்சபூத தலங்களில் பிருத்வி தலமாகவும் விளங்குகிறது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல், திரும்பும் திசையெல்லாம் கோவில்களாகவே காட்சியளிப்பதால், கோவில்கள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இதனால்தான் காஞ்சி மாநகரத்தை நகரேஷு காஞ்சி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர் பாரவி பாடியிருக்கிறார். "புஷ்பேசு ஜாதி புருஷேசு விஷ்ணு, நாரீஷு ரம்பா நகரேஷு" காஞ்சி என்று சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. அதாவது மலர்களில் ஜாதி மல்லிகை சிறந்தது. புருஷர்களில் பெரியவர் ஸ்ரீமகா விஷ்ணு. அதேபோல் நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம் என்று மகாகவி காளிதாசர் பாடியிருக்கிறார். இன்னும் பல சிறப்புகள் வாய்ந்த காஞ்சி மாநரில் வாழ்ந்தாலே ஒரு ஜீவனுக்கு நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
சிவபெருமான் ஏகன் அநேகனாக அருளும் திருக்கோவில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். இறைவன் பிருத்வி லிங்கமாக அருளும் கோவில். அம்பிகைக்கு அருள்பாலித்த ஆலயம். சகஸ்ரலிங்க தரிசனம் கிடைக்கும் சந்நிதி. மாவடி கந்தன் அருளும் தலம். இப்படியான இந்தத் திருக்கோவிலின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது மாவடி தரிசனம். இறைவன் மாமரத்தின் அடியில் (3500 ஆண்டுகள் பழமை) அம்பிகைக்குத் தரிசனம் தந்து அருளியதை நினைவுகூர்வதுபோல், ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்ஸவத்தின் 9-வது நாள், `மாவடி சேவை’ என்ற வைபவம் நடைபெற்று வருகிறது. அதே போல், ஆலயப் பிராகாரத்தில் அமைந்துள்ள `மாவடி' சந்நிதி தரிசிக்க வேண்டிய ஒன்று. சற்று உயரமான இடத்தில், மாமரத்தின் அடியில் அமைந்துள்ளது இந்தச் சந்நிதி. இந்த மரத்தைப் பிரதட்சணம் செய்து, அம்மையப்பரை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தின் பழைமையான மாமரம் பட்டுப்போய்விட, வேளாண் விஞ்ஞானிகளின் உதவியுடன் பழைய மரத்தின் மரபணுக்களைக் கொண்டு ஒரு புதிய மரத்தை உருவாக்கினார்கள். பழைய மரத்தின் ஒரு பகுதியைக் கண்ணாடிப் பேழையில் வைத்துள்ளார்கள்.
பங்குனி உத்திர மஹோற்சவம் 13 நாட்கள் நடைபெறுகின்றது திருவிழாவில் வெள்ளி ரதம், தங்க ரதம், வெள்ளி மாவடி சேர்வை மிகவும் விசேஷம். மாவடி கந்தனின் கந்த சஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
தல வரலாறு:
திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால்
தண்டனை பெற்ற அம்பிகை, மணலால் லிங்கம் அமைத்து, காஞ்சியில் தவமியற்றினாள். அப்போது, கதிரவனின் வெண்கதிர்கள் அம்பிகையைத் தகிக்கக்கூடாதே என்று எண்ணியதுபோல், நான்கு வேதங்களே நான்கு கிளைகளாகப் படர்ந்து விரிந்த மாமரமாகத் தோன்றி, அன்னைக்குக் குளிர்நிழல் தந்தன. அந்த மாமரத்தின் அடியில்தான் (மாவடி) சிவபெருமான் அம்பிகைக்குக் காட்சி தந்தருளினார். எனவே, அவருக்கு ஏகாம்பரம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
தல அமைப்பு:
இத்திருக்கோவில் ராஜகோபுரம் 9 நிலைகள் கொண்டுள்ளது. கருவறையில் ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் லிங்கமே மூலவராகும். அன்னை கட்டியணைத்த தடம் இன்றும் லிங்கத்தில் உள்ளது. கருவறைக்கு எதிரில் ஸ்படிகலிங்கம் உள்ளது. எதிரே ஸ்படிக நந்தி உள்ளது. ரத சப்தமியன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகின்றது. அம்பாள் ஏழவார்குழலியாய் அருள்பாலிக்கின்றார், உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனி சந்நிதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சர பந்தலில் கீழ் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். விநாயகர் விகட சக்கர விநாயகர் என்ற திருப்பெயருடன் அருளுகின்றார். நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்) தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றார்.
மிகவும் விசாலாமான இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் பல்வேறு திருவடிவங்களில் எழுந்தருளி இருக்கின்றார். முதலில் கோவில் கோபுர நுழைவு வாயிலில் ராஜகோபுர ஆறுமுகரை தரிசிக்கலாம். ஆறுமுகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாய், மயில் மீதமர்ந்து நெடிய கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இரண்டாவது பிரசித்தி பெற்ற மாவடி என்ற சிறப்பு பெயர் பெற்ற மாமரத்தை தரிசிக்கும் செல்லும் வழியில் வலப்புறத்தில் சிறிய திருமேனியொடு ஆறுமுகக் கடவுள் அருள்பாலிக்கின்றார்.
மூன்றாவதாக மாவடிக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் சந்நிதியில் மாவடிக் கந்தன் என்ற திருப்பெயருடன் ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்த கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இந்த மாவடிக் கந்தனுக்கென திருபுகழ் பாடல்கள், கந்தபுராண துதிப்பாடல் உள்ளன. திருப்புகழ் நாயகன் மாவடிக் கந்தனுக்கு எதிரில் வட்ட வடிவத்தில் சக்கரம் ஒன்று உள்ளது. இந்த திருச்சக்கரத்துக்கு பூஜை நடந்த பின்புதான், மாவடி கந்தனுக்கு பூஜை நடக்கின்றது. நான்காவது சிறிய திருமேனியாக கருவறை மூலவருக்கு பின் முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
அருணகிரிநாதர் தனது ஒரு திருப்புகழில் இந்த சக்கரத்தை குறிப்பிட்டு பாடியுள்ளார். பாடல் வரிகள் பின் வருமாறு:
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
கச்சிச் செக்கப் ...... பெருமாளே.
திருவிழா:
பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, தைப்பூசம், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ். ஆங்கில வருட பிறப்பு
பிரார்த்தனை:
முக்தி பெற, திருமண வரம், குழந்தை வரம் வேண்டி, மனநிம்மதி வேண்டி, நினைத்தது நடக்க, நோய்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம், திருப்பணி பொருளுதவி
திறக்கும் நேரம்:
காலை 6-12.30 மாலை 4-8.30
மனநிம்மதி தந்தருளும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மற்றும் மாவடிக் கந்தனை மனமுருகி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 800 பக்தர்களுக்கு முக்தி தரும் திருப்புகழ் தலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மாவடி கந்தன்
படம் 2 - 800 மனநிம்மதி தந்தருளும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்
Comments
Post a Comment