கோவில் 714 - செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் குமரவேல் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                  தினம் ஒரு முருகன் ஆலயம்-714

கிரக தோஷங்களை நீக்கும் செவ்வேளின் செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் குமரவேல் கோவில்

23.5.2023 செவ்வாய்


அருள்மிகு குமரவேல் திருக்கோவில்

காவனூர்-603401

செங்கல்பட்டு மாவட்டம்

இருப்பிடம்: மதுராந்தகம் 27 கிமீ


மூலவர்: குமரவேல்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வன்னி மரம்


தலமகிமை:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து 27 கிமீ தொலைவில் உள்ள காவனூர் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது அழகிய கோபுர அமைப்புடன் முருகப்பெருமான் குடியிருக்கும் குமரவேல் கோவில் அமைந்துள்ளது. வாக்கு சித்தர் ஆறுமுகம் தன் செல்வம், ஊர் மக்கள் காணிக்கை கொண்டு கட்டிய சிறப்பு மிக்க கோவில் இது.


ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இவ்வாலயத்திற்கு வந்து அருளாசி தந்து சென்றது இக்கோவிலின் சிறப்பம்சம். பக்தர்கள் தங்குவதற்கு ஒரு தியான மண்டபம் உள்ளது. கல்யாணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முருகப்பெருமானின் ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம் மற்றும் அனைத்து விசேஷ திருவிழாக்களும், கிருத்திகை, சஷ்டி முதலான திருநாட்களும் இக்கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

சில காலங்களுக்கு முன்னர் காவனூரில் துரைசாமி என்ற சிறந்த முருக பக்தர் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு பிறந்த 6-வது குழந்தைக்கு ஆறுமுகம் என்று பெயரிட்டார். ஆரம்ப கல்வி முடித்த ஆறுமுகம் மேலே பயில விரும்பாமல், தந்தைக்கு உதவியாக விவசாய பணியுடன், ஆடு, மாடுகளும் மேய்த்து வந்தார். அச்சமயத்தில் முருகன் மற்றும் அம்மன் பாடல்களை பாடிக்கொண்டே இருப்பார். ஒரு ஆடி மாதத்தில் ஆறுமுகம் களைத்துப் போய் வேப்ப மரத்தடியில் கண்ணயர்ந்த போது ஒரு சிறுவன் ஆறுமுகத்தை எழுப்பி தன் கையிலிருந்த வேலினை கொடுத்து வழிபட சொன்னாராம். ஆறுமுகம் தன் பெற்றோரிடம் கூறி வழிபட்டு வந்தார். ஒரு நாள் ஊர் தேவதை ஆறுமுகம் கனவில் தோன்றி அம்மன் கோவிலில் வேலினை நட்டு ஊர் மக்களுக்கு அருள் புரிய சொன்னார். அவரும் அவ்வாறே நட்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்தார். திருமணத்தடை நீங்க, பிள்ளை வரம் வேண்டி, வறுமை அகல, நோய்கள் தீர, பாவங்கள் விலக, பில்லி, சூனியம், கண் திருஷ்டி நீக்க, கிரக தோஷங்கள் போக்க அருள் புரிந்து வந்தார். நாளடைவில் கூட்டம் அதிகமாகவே, அம்மன் கோவிலில் இடம் போதவில்லை. ஆகவே இது பற்றி முருகப்பெருமானிடம் ஆறுமுகம் முறையிட்டார். முருகனும் ஒரு பௌர்ணமி சமயத்தில் ஒரு சிறுமி மூலம் முருகப்பெருமான் கோவிலுக்கு இடமும், வழியும் உணர்த்த வைத்தார். தேடி வரும் ஒரு குரங்கின் கையில் எலுமிச்சை பழத்தை கொடுக்குமாறும், அது எங்கு சென்று வைக்கின்றதோ அவ்விடத்தில் ஒரு கோவில் கட்டி தன்னை குமரவேல் என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக பிரதிஷ்டை செய்ய சொன்னார். அதன்படியே வாக்கு சித்தர் ஆறுமுகம் ஊரின் மேற்கே ஒரு சிறு குன்றின் மீது காவனூர் குமரவேல் கோவில் எழுப்பினார் என்கிறது வரலாறு.


தல அமைப்பு:

30 படிகள் ஏறி சென்றால் கோவில் 3 அடுக்கு ராஜகோபுர நுழைவாயிலை அடையலாம். கோவிலினுள் முதலில் கொடிமரம், பலிபீடம் மற்றும் மயில் அமைந்துள்ளன. அருகில் தல விருட்சமான வன்னி மரத்தடியில் விநாயகர் வன்னி மரப் பிள்ளையார் என்ற திருப்பெயரில் அருள்பாலிக்கின்றார். எதிரிலுள்ள கருவறையில் மூலவராக குமரவேல் புன்முறுவலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். கருவறை வாயிலில் முருகனும், விநாயகரும் வீற்றிருந்து அருளுகின்றனர். வரசித்தி விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். நவக்கிரகங்கள் சந்நிதியில் அமர்ந்து தோஷங்களை போக்குகின்றனர்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

கிரக தோஷங்கள் போக்க, பாவங்கள் அகல, திருமணத்தடை நீங்க, பிள்ளை வரம் வேண்டி, நோய்கள் தீர, பில்லி, சூனியம், கண் திருஷ்டி நீக்க, வறுமை நீங்க


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


பில்லி, சூனியம், கண் திருஷ்டி நீக்க அருளும் செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் குமரவேலை கும்பிட்டு பயனடைவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 714 கிரக தோஷங்களை நீக்கும் செவ்வேளின் செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் குமரவேல்


படம் 2 - 714 பில்லி, சூனியம், கண் திருஷ்டி நீக்க அருளும் செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் குமரவேல்



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்