கோவில் 711 - கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில்

🙏🏻🙏🏻                                                                                                                                                 தினம் ஒரு முருகன் ஆலயம்-711

ஆனந்தம் அள்ளித் தரும் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில்

20.5.2023 சனி


அருள்மிகு ஞானதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

அகிலாண்டபுரம்

சின்னதாராபுரம்-639202

அரவக்குறிச்சி வட்டம்

கரூர் மாவட்டம்

இருப்பிடம்: கரூர் 28 கிமீ, அரவக்குறிச்சி 12 கிமீ


மூலவர்: ஞானதண்டாயுதபாணி சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தலமகிமை:

கொங்கு மண்டலத்தில் கரூர் மாவட்டம் கரூர்-சின்னதாராபுரம் சாலையில் கரூரிலிருந்து 28-வது கிமீ-ல் உள்ள சின்னதாராபுரத்தில் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் ஞானதண்டாயுதபாணி சுவாமியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இவர் பழனி தண்டாயுதபாணி சுவாமியைப் போல ஆனந்தத்தை பக்த கோடிகளுக்கு அள்ளி வழங்குகின்றார். அரவக்குறிச்சியிலிருந்தும் 12 கிமீ பயணம் செய்தாலும், இக்கோவிலை அடையலாம். 240.2.2023-ல் இக்கோவிலின் மகா கும்பாம்பிஷேகம் சிறப்புற நடைபெற்றது.


24.02.2023 மாலை 6-8 மணி நேரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவர் திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து மண்டலாபிஷேகத் திருவிழா 48 நாட்களுக்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ் வருட பிறப்பு சித்திரை 1 அன்று 48-வது நாள் மண்டல பூஜை அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாரதனைகளுடன் நடைபெற்றது. பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி திருநாட்கள் விசேஷ பூஜைகளுடன் சிறப்புற நடந்தன, முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் சிறப்புற நடைபெற உள்ளன.

தல வரலாறு:

கொங்கு மண்டலத்தில் கரூர் மாவட்டம் ஜீவ நதி அமராவதி நதியருகே உள்ள சின்னதாராபுரம் அகிலாண்டாபுரம் எனு புண்ணிய ஷேத்திரத்தில் முருகப்பெருமான் திருவருள் பெற்ற திரு பூபதி அவர்களின் கனவில் ஒரு நாள் ஞானதண்டாயுதபாணி சுவாமி தோன்றி ஒரு புற்று இருக்கும் இடத்தில் எழுந்தருளியிருப்பதாகவும், அந்த இடத்தில் உலக மக்கள் நன்மைக்காக தனக்கு புதியதாக ஒரு திருக்கோவில் எழுப்புமாறு கூறிவிட்டு மறைந்து விட்டார். முருகப்பெருமான் உத்திரவின் படி ஆகம் விதிகள் படி கோவிலை நிர்மானம் செய்து ஞானதண்டாயுதபாணி சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து 24.02.2023-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.


தல அமைப்பு:

அழகிய இத்திருக்கோவில் கருவறையில் மூலவரான ஞானதண்டாயுதபாணி சுவாமி பழனி முருகனைப் போலவே ஒரு கையில் தண்டம் ஏந்தி மறு கையை இடுப்பில் வைத்து நின்ற கோலத்தில் கருணை ததும்ப திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் மூர்த்தம் உயரமாக இருப்பது கண்களுக்கு அழகு. மேலும் பரிவார மூர்த்திகளாக மகா கணபதி, செல்லாண்டி அம்மன், சிவபெருமான், மகா விஷ்ணு, நவசக்தி, துர்க்கை, பகவதி அம்மன், வள்ளி, தெய்வானை, சப்த கன்னியர், இடும்பன், நாகராஜன், 18 சித்தர்கள், கருப்பண்ண சுவாமி, பக்த மூர்த்தி மீனாட்சி வலசு அய்யன் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம்


பிரார்த்தனை:

ஆனந்தம் பெற, இகபர சௌபாக்கியங்கள் கிடைக்க, நேர்மறை அதிர்வுகள் உண்டாக, ஞானம் சிறக்க, செல்வம் பெருக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


இகபர சௌபாக்கியங்கள் அருளும் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் ஞானதண்டாயுதபாணி சுவாமியை மனமுருகி தொழுது மகிழ்ந்திடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 711 ஆனந்தம் அள்ளித் தரும் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் ஞானதண்டாயுதபாணி சுவாமி


படம் 2 - 711 இகபர சௌபாக்கியங்கள் அருளும் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் ஞானதண்டாயுதபாணி சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்