கோவில் 596 - சென்னை சூளை பெரியமேடு செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-596

நல்வினைகள் அருளும் சென்னை சூளை பெரியமேடு செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

25.1.2023 புதன்

அருள்மிகு செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

செவ்வேள் கோட்டம்

4, சாமி பிள்ளை தெரு

சூளை

சென்னை-600112

இருப்பிடம்: சென்ட்ரல் 2 கிமீ, கோயம்பேடு 10 கிமீ


மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

சென்னையில் சில முருகப்பெருமான் கோவில்கள் கோட்டம் என்று முடிவடைகின்றன. அவை பார்க் டவுனில் உள்ள கந்தகோட்டம், ஜார்ஜ் நகரில் உள்ள குமார கோட்டம், சைதாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் கோட்டம் மற்றும் சூளையில் உள்ள செவ்வேள் கோட்டம் ஆகும். சென்னை சென்ட்ரல் அருகே 2 கிமீ தொலைவில் உள்ள சூளை பெரியமேடு பகுதியில் சிறப்பு மிக்க செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிவது சிறப்பம்சம்.


கோவில் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டது. கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முக மண்டபத் தூண்களில் கந்தர் சஷ்டி கவசம் முதலிய முருகப்பெருமான் பாடல்கள் உள்ளன. கருவறையில் உபநயனம் மற்றும் பாத பந்த அதிஷ்டானம் உள்ளது. கருவறையில் 2 அடுக்கு திராவிட விமானம் உள்ளது.

தல வரலாறு:

இந்த கோவில் 100 முதல் 150 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். 1905-ல் தொடங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 16.4.1986, 19.1.1997, 8.8.2001, 20.8.2014-ல் கும்பாபிஷேகங்கள் சிறப்புற நடைபெற்றன.


தல அமைப்பு:

கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கூடிய ஆலய மேற்பரப்பில் இருபுறமும் முருகப்பெருமானுடன் வள்ளி தெய்வானை வண்ணமய திருமண சிற்பங்கள் கண்களை கவருகின்றன. கோபுரத்தினுள் நுழைந்தவுடன் விஜய விநாயகர் தனி சந்நிதியில் அருளுகின்றார். நுழைவாயிலில் சங்கநிதி, பத்மநிதி வீற்றிருந்து அருள்கின்றனர். அடுத்து த்வஜஸ்தம்பம், பலிபீடம், மயில், யானை வாகனங்கள் உள்ளன.


திருக்கோவில் கருவறையின் மூலவராக சிவசுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு கருணை பொங்க அருள்பாலிக்கின்றார். இடப்புறம் வள்ளி, வலப்புறம் தெய்வானை சந்நிதிகள் உள்ளன. கருவறையின் நுழைவாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். பண்டிரிமலை சுவாமிகள் அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி இருக்கிறார். பிரகாரத்தில், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அருள்பாலிக்கின்றனர். இவர்கள் சந்நிதி கஜபிருஷ்டம் வடிவில் உள்ளது. பலிபீடம் மற்றும் நந்தி எதிரில் உள்ளன. மேலும் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, அருணகிரிநாதர், நவக்கிரகங்கள், ஆறுமுகர், நடராஜர், ஷீரடி சாய்பாபா, ஆதிபராசக்தி முதலான தெய்வங்கள் அருளுகின்றனர். கிழக்குப் பகுதியில் உள்ள் வேப்ப மரத்தடியில் நாகர் சிலைகள் உள்ளன.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், சித்திரை பிரமோற்சவம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், பவுர்ணமி, அமாவாசை கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

நல்வினைகள் வேண்டி, திருமணத்தடை அகல, குழந்தைப்பேறு வேண்டி, நினைத்தது நிறைவேற, மன அமைதி வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7-10 மாலை 5-8


மன அமைதி தந்திடும் சென்னை சூளை பெரியமேடு செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமியை மனக்கண்ணால் தரிசித்து பலன் பெறுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻



படம் 1  - 596 நல்வினைகள் அருளும் சென்னை சூளை பெரியமேடு செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்


படம் 2 - 596 மன அமைதி தந்திடும் சென்னை சூளை பெரியமேடு செவ்வேள் கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்