கோவில் 229 - ஆந்திரா குண்டூர் நாகுலபாடு சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில்
🙏🙏
மறு பதிவு தினம் ஒரு முருகன் ஆலயம்-229
குழந்தை வரமருளும் ஆந்திரா குண்டூர் நாகுலபாடு சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில்
23.01.2022 ஞாயிறு
அருள்மிகு நாகுலபாடு சுப்ரமணியேஸ்வர சுவாமி திருக்கோவில்
நாகுலபாடு-522235
குண்டூர் மாவட்டம்
ஆந்திரா
இருப்பிடம்: குண்டூர் 28 கிமீ
மூலவர்: சுப்ரமணியேஸ்வர சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது நாகுலபாடு கிராமம் அதன் கோவில்களுக்காக பிரபலமானது. இவ்வூர் நாகுலபடு புட்டா என்றும் அழைக்கப்படும் சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவிலுக்கு பிரசித்தி பெற்றது. இங்குள்ள சுப்ரமணியர் பாம்பு வடிவில் இருக்கிறார். இங்கு வரும் ஏராளமான பக்தர்களது அனைத்து வேண்டுதல்களையும் சுப்ரமணியேஸ்வர சுவாமி நிறைவேற்றுவது சிறப்பு. புதிதாகத் திருமணமான தம்பதிகள் அனைவரும் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுவதற்காக இந்த சுவாமியின் ஆசிர்வாதத்திற்காக வருகை தருகின்றனர்.
இத்திருக்கோவிலின் சிறப்பு: பக்தர்கள் கோவிலுக்குள் நுழைந்ததும், கால்களைக் சுத்தமாக கழுவிவிட்டு, அங்குள்ள பானைகளில் தண்ணீரை நிரப்பி, கோவிலை சுற்றி வரும் போது பக்தியுடன் தண்ணீரை ஊற்றிக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு மூன்று முறை சுற்றி வருகின்றனர். சிலர் 5/11 சுற்றுகளும் வருகின்றனர் இச்சடங்கிற்கு வரப் போயாதம் என்று பெயர். இவ்வாறு செய்வதால், பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாக ஐதீகம். பின்பு பொங்கல் அல்லது பிரசாதம் நைவேத்தியம் படைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களை உணவருந்த செய்து, இனிப்புகள் வழங்குதல் மற்றுமொரு சிறப்பு,
நாகுல சவிதி ( தெலுங்கு சொல்) என்பது நாக பூஜை இக்கோவிலில் அனுசரிக்க படுகிறது. கார்த்திகை மாதத்தின் போது தீபாவளி அமாவாசைக்குப் பிறகு நான்காவது நாள்( சதுர்த்தி ), நகுல சவிதி அனுசரிக்கப்படுகிறது. நாக சதுர்த்திக்குப் பிறகு நாக பஞ்சமி மற்றும் நாகசஷ்டி அனுசரிக்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இது சிராவண மாசம் என்று கொண்டாடப்படுகிறது. இவ்விழா பெண்களின் முக்கிய பண்டிகை. திருமணமான பெண்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக நகுல சவிதி கொண்டாடப்படுகிறது. சவிதி பண்டிகையின் போது பெண்கள் விரதம் இருந்து நாகபூஜை செய்வார்கள். பக்தர்கள் வால்மீகம் அல்லது புட்டத்தில்(பாம்பு குழி) சர்ப்ப தேவதைக்கு பால் மற்றும் உலர் பழங்களை வழங்குகிறார்கள். இவ்வாறு செய்தால், தங்கள் இல்லறம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் உள்ள அனைத்து பதட்டங்களையும் நீக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
தலவரலாறு:
சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்தி பெற்றது.
தல அமைப்பு:
இக்கோவில் ஒரு தனித்துவமான சுப்ரமணியர் கோவில். கருவறையில் சுப்ரமணிய சுவாமி பெரிய பாம்பாக காட்சியளித்து பக்த பெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றார். வள்ளி, தெய்வானை இருவரும் இத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றனர்.
திருவிழா:
சுப்ரமணிய சஷ்டி, நகுல சவிதி
பிரார்த்தனை:
குழந்தைப்பேறு, கால சர்ப்ப தோஷம் மற்றும் அனைத்து தோஷங்கள் நீங்க, வேண்டுதல்கள் நிறைவேற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 4 முதல் இரவு 8.30 வரை
ஆந்திரா குண்டூர் நாகுலபாடு நாகுலபாடு சுப்ரமணியேஸ்வர சுவாமி கோவிலை 3 முறை நீர் தெளித்து சுற்றி வந்து வேண்டினால், சுப்ரமணிய பகவான் நம் விருப்பங்களை நிறைவேற்றி அருளுவார்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கோவிலை 3 முறை நீர் தெளித்து சுற்றி வந்தால், விருப்பங்களை நிறைவேற்றி அருளும் ஆந்திரா நாகுலபாடு சுப்ரமணியேஸ்வர சுவாமி
படம் 2 - சஷ்டி திருநாளில் வேண்டினால், குழந்தை வரமருளும் ஆந்திரா குண்டூர் நாகுலபாடு சுப்ரமணியேஸ்வர சுவாமி பாம்பு வடிவில்
Comments
Post a Comment