கோவில் 173 - திருநெல்வேலி மாவட்டம் கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியர் கோவில்

 🙏🙏                                                                                                                                                                       

தினம் ஒரு முருகன் ஆலயம்-173

மருத்துவ குணம் மிக்க மூலிகைகள் நிறைந்த திருநெல்வேலி மாவட்டம் கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியர் கோவில்

28.11.21 ஞாயிறு


அருள்மிகு கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியர் திருக்கோவில் 

சேரன்மகாதேவி 

திருநெல்வேலி மாவட்டம் 

இருப்பிடம்: திருநெல்வேலி-சேரன்மகாதேவி 19 கிமீ, சேரன்மகாதேவி-களக்காடு சாலையில் 2 கிமீ-ல் கோவில்


மூலவர்: பாலசுப்பிரமணியர் 

தீர்த்தம்: இளநீர் தீர்த்தம்


தலமகிமை:

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகில் தென்றலின் பிறப்பிடமான கொழுந்துமாமலை அடிவாரத்தில், முருகப்பெருமான் குழந்தை வடிவத்தில் பாலசுப்பிரமணியராகத் திகழ்கிறார். குழந்தையில்லாதவர்களின் குறை தீர்க்கும் வள்ளலாக அருள்பாலிக்கின்ற தலம் இது. இம்மலை அனுமன் ஏந்திய சஞ்சீவி மலையின் சிதறிய ஒரு பகுதி என்பதால் மூலிகைகள் நிறைந்தது. எனவே தீராத நோய்களை தீர்க்கின்ற மருத்துவ குணம் கொண்ட முருகப்பெருமானின் தலம். 


கோவிலின் வடகிழக்கு மூலையில் சிறிய கிணறு உள்ளது. இதை பாலூற்று என்று அழைப்பர். மழைக்காலத்தில் கிணற்று நீர் மட்டத்திற்கு மேல் பொங்கி வழியும். இது மிகவும் சுவையாகவும், கலங்கிய நிலையில் தேங்காய் தண்ணீரைப் போலவும் இருக்கும். திருக்கார்த்திகையன்று மட்டும் பொதுமக்கள் இதில் தண்ணீர் எடுப்பது வழக்கம்.


இங்கு நடைபெறும் திருக்கார்த்திகை திருவிழா மிக முக்கியமான திருவிழா. திருவண்ணாமலை போல மலைத்தீபம் ஏற்றப்படும். மலையேறுபவர்கள் பகலில் பூஜைப் பொருட்களுடன் மலையேறிச் சென்று இரவில் அங்கேயே தங்கிவிடுவர். திருக்கார்த்திகையன்று, மலைதீபத்தை தரிசித்த பின்னரே இப்பகுதி மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது வழக்கம். 


தலவரலாறு:

ராவணனின் மகனான இந்திரஜித் வானர வீரர்கள் மீது நாகாஸ்திரத்தை ஏவியதால் அனைவரும் மூர்ச்சை அடைந்தனர். ராமபிரானின் அனுக்கிரகத்தால் ஆஞ்சநேயர் வீரர்களைக் காப்பாற்ற மூலிகை பறிக்க வடக்கு நோக்கிப் புறப்பட்டார். மூலிகை எதுவென்று தெரியாமல் சஞ்சீவிமலையைக் கையில் தாங்கி திரும்பினார். வரும் வழியில் அம்மலையின் ஒரு பகுதி சிதறி பூமியில் விழுந்தது. அப்பகுதியே இங்குள்ள மலையாகும். பசுமையான மூலிகைக் கொழுந்து நிறைந்திருந்ததால் ‘கொழுந்துமாமலை’ என்று பெயர் பெற்றது. 


இப்பகுதியில் வசித்த முருகனின் அடியவர் கனவில் தோன்றிய திருச்செந்தூர் முருகன், சேரன்மகாதேவி கொழுந்துமாமலையில் தங்கி தியானம் செய்யும்படி கட்டளையிட்டார். அந்த அடியவரும் பல காலம் தியானம் செய்து, முருகனைப் பாலகன் வடிவில் தரிசிக்கும் பேறு பெற்றார். பிற்காலத்தில் அந்த இடத்தில் முருகனின் ஆலயம் எழுப்பப்பட்டது. 


தமிழ் மாத கடைசி வெள்ளியன்று காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் இடம்பெறும். அன்று காலை முதல் மாலை வரை கோயில் நடை திறந்திருக்கும். முருகனுக்குரிய சுக்கிரவார விரதம் இருந்து பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்து கொள்வர். தொடர்ந்து ஆறு கடைசி வெள்ளியன்று விரதமிருந்து முருகனை தரிசித்தால் குழந்தைப்பேறு, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வேண்டுதல்கள் இனிதே நிறைவேறும். 


தலஅமைப்பு: 

இந்த ஆலய கருவறையில் முருகன் பாலசுப்பிரமணியராக  நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். நான்கு கைகளில் மேலிரு கைகள் ஆயுதம் தாங்கியும், கீழிரு கைகள் வரத, அபய ஹஸ்தமாகவும் உள்ளன. வலக்கரத்தில் முருகனுக்குரிய வேல் உள்ளது. பாலகனாக இருப்பதால் பாலசுப்பிரமணியர் என்று பெயர் பெற்றார். மலை அருகில் இருப்பதால் ‘மலைக்கோயில்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர். 


முழுமுதற்கடவுள் விநாயகப்பெருமான் தனி சந்நிதியில் வீற்றிருக்கின்றார். கோவிலின் தென்கிழக்கில் காவல் தெய்வமாக இடும்பன் சந்நிதி உள்ளது. அதற்கு தென்கிழக்கில் சிவப்பெருமான், பார்வதி, கங்கையம்மன் சந்நிதிகளில் வீற்றிருந்து  அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்,  வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், மாசிமகம், தமிழ்வருட பிறப்பு


பிரார்த்தனை:

நோய்கள் குணமாக,, குழந்தைப்பேறு, திருமணப்பேறு, வேலை வாய்ப்பு வேண்டி 


நேர்த்திக்கடன்:

அலகு குத்துதல், காவடி எடுத்தல், அபிஷேகம் செய்தல்


திறக்கும் நேரம்:

காலை 5-12.30 மாலை 4-8.30


குழந்தை வளம் அருளும் குழந்தை வடிவிலான  திருநெல்வேலி மாவட்டம் கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியரை கும்பிட்டு பலன் பெறுவோம்! 


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - குழந்தை வளம் அருளும் குழந்தை வடிவிலான கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியர்


படம் 2 - மருத்துவ குணம் மிக்க மூலிகைகள் நிறைந்த திருநெல்வேலி மாவட்டம் மேலக்கொழுந்துமாமலை பாலசுப்பிரமணியர் கோவில்





Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்