கோவில் 475 - முருகன் திருப்புகழ் தலம் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-475
திருமண வரம் அருளும் முருகன் திருப்புகழ் தலம் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில்
26.9.2022 திங்கள்
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
பந்தநல்லூர்-609807
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: கும்பகோணம் 29 கிமீ, மயிலாடுதுறை 21 கிமீ
மூலவர்: பசுபதீஸ்வரர்
அம்பாள்: வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி
நாயகர்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலவிருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
புராணப்பெயர்: பந்தணை நல்லூர், திருப்பந்தணை நல்லூர்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் (7)
தலமகிமை:
கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 29 கிமீ-ல் திருப்பனந்தாள் அருகில் திருமண வரம் தரும் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் (21 கிமீ) இத்தலத்திற்கு செல்லலாம். இங்கு சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக பசுபதீஸ்வரர் என்ற திருப்பெயரில் அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 35-வது தேவாரத்தலம் (காவிரி வடகரை) ஆகும்.
காவிரி வடகரைத் தலங்களில் மிகவும் பெரிய கோவிலாகத் திகழ்வது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம்..‘பந்தணை நல்லுர் நின்ற எம் பசுபதியாரே’ என்று திருஞானசம்பந்தரும், ‘பந்தணை நல்லுராரே’ என்றும், ‘எம்மை ஆளும் பசுபதியே’ என்றும் திருநாவுக்கரசரும் உருகிப் பாடிய திருத்தலம் இது. அருணகிரிநாதப்பெருமான் இத்தலத்து முருகப்பெருமானை நோக்கி 7 திருப்புகழ் பாடி பரவியுள்ளார்.
திருமண வேண்டி வரும் அனைவருக்கும் பசுபதீஸ்வரர் திருமணம் வரமருளுகின்றார். கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பார்வை கிடைக்கின்றது. பித்ருக்களால் ஏற்படும் தோஷம், திருமணத்தடை, மனநிலை பாதிப்பு, பயந்த சுபாவம் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கிறது. சொத்து வழக்கில் நியாயம், கடன் பிரச்னை, தொழில் விருத்தி ஆகியவற்றை பசுபதீஸ்வர தந்தருள்கிறார். கல்வி, ஞானம், குழந்தைப்பேறு வேணுபுஜாம்பிகை வழங்குகிறாள்.
தல வரலாறு:
சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள், சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல, பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன், பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாப விமோசனம் வேண்டுகிறார். சிவன் பந்தை காலால் எட்டி உதைக்க, அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பந்து அணைந்த தலம் ஆதலால் “பந்தணை நல்லூர்’ ஆனது.
பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு, மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து, அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க, பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெருகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து அம்மன் சிவனை திருமணம் செய்கிறார். காப்போச மன்னன் மகன் குருடு நீங்கிய தலம். அதற்கான ஆதாரமாக கல்வெட்டுகள் உள்ளன.
தல அமைப்பு:
இவ்வாலயத்தின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோயிலுக்கு எதிரில் நடுவில் நீராழி மண்டபத்துடன் ஆலயத்தின் தீர்த்தமான சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் விசாலமான ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் வேணுபுஜாம்பிகை சந்நிதி உள்ளது. அருகில் காளி சந்நிதியும் உள்ளது. அடுத்துள்ள நுழைவாயில் திருநாவுக்கரசர் நுழைவாயில் என்ற பெயருடன் உள்ளது. இந்த நுழைவாயிலுக்கு அருகில் வலதுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகர் தனி சந்நிதியில் அருள்கிறார். இந்த வாயில் வழி உள்ளே சென்று இடதுபுறம் திரும்பினால் நால்வர் சந்நிதியைக் காணலாம். உட்பிரகாரம் வலம் வரும்போது கன்னி மூலையில் நிருதி கணபதி சந்நிதி,
அடுத்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பக்தர்கள் கேட்கும் வரங்களை அள்ளி வழங்குகிறார்.ம். கஜலட்சுமி, அண்ணபூரணி, சரஸ்வதி, 63 நாயன்மார்கள், தசலிங்கங்கள் அருளுகின்றனர். பைரவரை அடுத்து நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் காட்சியளிக்கின்றன என்பது சிறப்பு.. அருகில் சந்திரன், சூரியன், விநாயகர் உள்ளனர். பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள் தனிக்கோவிலில் வீற்றிருக்கின்றார்.
சுவாமி சந்நிதி வாயிலுக்குத் திருஞான சம்பந்தர் திருவாயில் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. துவாரபாலகரைக் கைகூப்பித்தொழுது உட்சென்றால் மூலவர் பசுபதீஸ்வரர், சுயம்பு லிங்கமாக குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தந்து அருள்பாலிக்கிறார். புற்று வடிவான சிவலிங்கம் மீது பசுவின் குளம்படி பட்ட வடுவும், பந்து மோதிய வடுவும் தெரிகிறது. குவளை சாத்தி தான் மூலவருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அர்த்தமண்டபத்தில் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பிட்சாடனமூர்த்தி மிகவும் அழகுடன் உள்ளார். இத்தலத்தில் வருடத்தில் ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் படுகின்றன. இறைவி, மூங்கில் தோள் அம்மையாக, ‘காம்பனைய தோளி’ என்ற திருப்பெயருடன் தனிச் சந்நிதியி வடக்கு பார்த்து ல் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னை தனது வலது கையில் சக்கரமும், இடது கையில் கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள்.
திருவிழா:
மாசி மகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், ,கந்த சஷ்டி, திருவாதிரை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி
பிரார்த்தனை:
திருமண வரம் வேண்டி, கண் குறைபாடுகள் நீங்க, பித்ரு தோஷம் அகல, மனநிலை பாதிப்பு குணமாக, கடன் தொல்லை தீர
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல், திருப்பணி காணிக்கை
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 4-8
கண் குறைபாடுகளை குணமாக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரரை முருகப்பெருமானுடன் சேர்த்து வணங்கி அனைத்து பலன்களும் பெற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment