கோவில் 474 - வில்லேந்திய முருகன் அருளும் திருப்புகழ் தலம் தென்காசி குற்றாலம் குற்றாலநாதர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-474
புரட்டாசி மஹாளய அமாவாசை நன்னாளில் வில்லேந்திய முருகன் அருளும் திருப்புகழ் தலம் தென்காசி குற்றாலம் குற்றாலநாதர் கோவில்
25.9.2022 ஞாயிறு
அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்
குற்றாலம்-627802
தென்காசி மாவட்டம்
இருப்பிடம்: தென்காசி 5 கிமீ, திருநெல்வேலி 60 கிமீ, மதுரை 155 கிமீ
மூலவர்: குற்றாலநாதர், திரிகூடநாதர்
அம்பாள்: குழல்வாய்மொழி, பராசக்தி (2 சந்நிதிகள்)
நாயகர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலவிருட்சம்: குறும்பலா
தீர்த்தம்: சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி
புராணப்பெயர்: திரிகூடமலை
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருணகிரிநாதர் (3)
தலமகிமை:
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கிமீ-ல் இயற்கை சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள குற்றாலம் குற்றாலநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மூலவர் குற்றாலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர் என பல்வேறு திருப்பெயர்கள் உண்டு. இங்கு வந்து வழிபட்டு குற்றாலத்தில் குளித்தால் பித்து தெளிந்து குணமாவதை காணலாம். சிவத்தலத்தில் முருகப்பெருமான் வில்லேந்தி விசேஷ கோலத்தில் அருள்கிறார்.
ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு விதமாக முக்தி தரும்.அண்ணாமலையை நினைத்தால் முக்தி. சிதம்பரம் நடராஜரை (புலியூர்) தரிசித்தால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. ஆனால் திருக்குற்றாலத்தில் பிறந்தால், இறந்தால், தரிசித்தால், நினைந்தால், எல்லா வகையாலும் நற்கதி (முக்தி) நல்குகிறது.
திருக்குற்றாலம் தலத்தின் தலவிருட்சமான குறும்பலா மரம் வேதத்தின் வடிவம் என்கின்றன புராணங்கள். எல்லாம் வல்ல ஆடல்வல்லானுக்கு (நடராஜப் பெருமான்) பஞ்ச சபைகள் (ஐந்து) உண்டு. அவை 1.திருவாலங்காடு-ரத்னசபை, 2.சிதம்பரம்-கனகசபை (தங்கம்), 3.மதுரை-ரஜதசபை (வெள்ளி), 4.திருநெல்வேலி-தாமிரசபை, 5.திருக்குற்றாலம்-சித்திரசபை ஆகும்.
குற்றாலநாதர் கோவிலுக்கு சித்திரசபை நடராஜர் தனிக்கோவில் கொண்டு காட்சி தருகிறார். கிழக்கு நோக்கிய சித்திரசபையில் சிவகாமி தாளம் கொட்ட, தெற்கு நோக்கி ஓவிய வடிவான அம்பலவாணர் காலை தூக்கி ஆடுகிறார். திருவாதிரை திருநாளில், தாண்டவ தீபாராதனை வெகு பிரசித்தம். நடராஜர் நாட்டியமாடினால் எப்படி இருக்குமோ, அதேபோல் தீபத்தட்டினை மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாக ஆட்டியபடி நடராஜருக்கு தீபாராதனை காட்டுவார்கள். ஜோதி சொரூபமான சிவபெருமான், தானே அக்னிப் பிழம்பாக தாண்டவமாடி, உலகை இயக்குவதை உணர்த்துவதற்காக, இந்த தாண்டவ தீபாராதனை என்கின்றனர்.
பாடல்:
மாணிக்கவாசகர் உருகி உருகி பாடிய திருவாசகப் பாடல்
‘உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரையும் வேண்டேன் கற்பன இனி அமையும்
குற்றாலநாதன் குரை கழற்கே ஆளானேன்
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வல்லானே’
பல்லவர் காலத்தில் தேவார பாடல்களில் மட்டுமே குற்றால நகரம், இறைவன் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன .சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பு இத்திருக்கோவிலுக்கு உண்டு. அதில் திருஞானசம்பந்தர் திருக்குற்றாலநாதர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து, கோவிலின் தல விருட்சமான குறும்பலாவை பற்றி இரண்டாம் திருமுறையில் எழுபத்தி ஒன்றாம் பதிகமாக தனியாக ஒரு பதிகம் பாடியுள்ளார். தேவார பாடல்களில்தான் குற்றாலம் என்ற சொல்லாட்சி முதலில் காணப்படுகிறது. தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், திருவந்தாதி, பெரியபுராணம் ஆகியவற்றிலும் கூத்தன் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. நாயக்கர் காலத்தில் பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற மகான்களும் குற்றாலத்து இறைவனைப் பற்றி பாடியுள்ளனர். திரிகூட ராசப்பக் கவிராயர் குற்றாலநாதர், குழல்வாய்மொழி பெருமைகள் அடிப்படையில் 14 சிற்றிலக்கியங்கள் இயற்றியுள்ளார்.
தல வரலாறு:
திருமால் சிவன் ஆன வரலாறு: (திருவிளையாடல் புராணம்) கயிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயந்தது. இறைவன் அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார். அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தயும் திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த இறைவன் திரிகூடமலையின் மகிமையை கூறி அங்கு விஷ்ணுவாயிருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூசித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் கானலாம் என் கூறி அனுப்பி வைத்தார். அகத்தியரும் அவ்வாறே தென்திசை சென்று வைணவர் வேடம் பூண்டு கோவிலுள் சென்று விஷ்னுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோவில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது.
சங்க இலக்கியங்களில் பொதிகைமலை பற்றிய செய்திகள் காணப்படுகிறது. சோழமன்னன் கோச்செங்கண்ணனால் தலவிருட்சம் உருவாக்கப்பட்டிருப்பதாலும், திருக்குற்றாலநாதர் கோவில் வழிபாடு சங்க காலத்தில் இருந்தது என்கின்றனர். பல்லவர் காலத்தில் கபிலரால் எழுதப்பட்ட சிவபெருமான் திருவந்தாதி என்னும் நூலில்,“கோகரணங் குற்றாலம் கூற்றின் பொருள் முயன்ற குற்றாலம் “கொழுந்தேன் கமழ் சோலைக் குற்றாலம் என்று குற்றால நகரின் பெருமையும் குற்றாலநாதரின் சிறப்பும் வெளிப்படுவதால் அக்காலத்தில் குற்றாலமும் குற்றாலநாதர் கோவிலும் பெருமையுடன் விளங்கியிருத்தல் வேண்டும்.
தல அமைப்பு:
குற்றாலநாதர் கோவில் 5000 அடி உயரம் கொண்ட திரிகூடமலை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. நான்கு வாயில்களோடு சங்கு வடிவத்தில் அமைந்திருக்கிறது. இக்கோவில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோவில் சங்கின் வடிவில் இருப்பதை மலையிலுள்ள செண்பகாதேவி கோவிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து காணலாம்.
திரிகூடநாதர் என்றும் குற்றாலநாதர் என்றழைக்கப்படும் இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். குழல்வாய் மொழியம்மை சந்நிதியும், சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பராசக்தியின் உக்கிரம் தணிக்க காமகோடீஸ்வரர் என்ற சிவமூர்த்தம் எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரகார வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பராசக்தி பீடம் உள்ளது. மிகக் குறுகலான பிராகாரத்தை வலம் வரும் போது, அதிகார நந்தி, சூரியன், கும்பமுனி, எதிரில் கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர், சப்தகன்னியர் முதலிய சந்நிதிகளைத் தரிசிக்கலாம். பஞ்சபூதலிங்கங்களும், நன்னகரப்பெருமாள், சுப்பிரமணியர், சனிபகவான் சந்நிதிகளும் உள்ளன.
இங்குள்ள முருகப்பெருமான், கையில் வில்லேந்தியபடி வேடனாகக் காட்சி தருகிறார். இவருடன் வள்ளியம்மை, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்தபடி அருள்கின்றனர். இது தமிழகத்திலேயே பழைமையான வடிவம் எனப்படுகிறது. அகத்தியர் ஈசனின் திருமணக் கோலத்தை தரிசித்த தலம் என்பதால் இங்கு அவருக்கும் சந்நிதி உண்டு. அகத்தியருக்கு எதிரில் அவரின் சீடர், சிவாலய முனிவருக்கும் சந்நிதி உள்ளது. நவகோடி சித்தர்களும் அன்றும் இன்றும் அரூபமாக உலவும் இடம் திருக்குற்றாலம் எனப்படுகிறது.
திருவிழா:
சித்திரை விசு, ஐப்பசி விசு, மார்கழி திருவாதிரை திருநாள், தெப்ப திருநாள், மகா சிவராத்திரி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், ,கந்த சஷ்டி, திருவாதிரை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி
பிரார்த்தனை:
பிறவிப்பிணி நீங்க, நினைத்த காரியம் கைக்கூட, திருமணத்தடை நீங்க, வளமான வாழ்க்கை பெற, புத்தி சுவாதீனம், தோல் நோய்கள் தீராத தலைவலி குணமாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல், திருப்பணி காணிக்கை
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 4.30-8
பிறந்தால், இறந்தால், தரிசித்தால், நினைந்தால், எல்லா வகையாலும் நற்கதி (முக்தி) நல்குகிற குற்றாலம் குற்றாலநாதரை மனமுருகி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment