கோவில் 473 - திருவாரூர் மாவட்டம் உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-473
ஞானகுருவாக முருகன் அருளும் திருவாரூர் மாவட்டம் உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் கோவில்
24.9.2022 சனி
அருள்மிகு பிரம்மரந்தீஸ்வரர் திருக்கோவில்
உச்சுவாடி-610206
வடபாதிமங்கலம் ஊராட்சி
மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
இருப்பிடம்: மன்னார்குடி 19 மிகீ, திருவாரூர் 16 கிமீ
மூலவர்: பிரம்மரந்தீஸ்வரர்
அம்பாள்: பிரம்மகுந்தளாம்பிகை
நாயகர்: முருகன்
தலமகிமை:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வடபாதிமங்கலம் ஊராட்சியில் உச்சுவாடி கிராமத்தில் வெண்ணாற்றங்கரையில் பிரம்மரந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலம் யோக மார்க்கத்தில் அற்புத தலமாகவும் போற்றப்படுகிறது.
இக்கோவிலில் சிவபெருமான், முருகப்பெருமான் இருவருக்குமே முக்கியத்துவம் உள்ள தலமாகும். இத்தலத்தில் அர்ஜுனனும் சகாதேவனும் வழிபட்ட ஈசன், பிரம்மரந்தீஸ்வரர் என்ற பெயரில் தலையில் வடுவோடு யோகமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இந்த கோவிலும் இங்குள்ள 7 தீர்த்தங்களும் யோகம் பயில்பவருக்கு முக்கியமாக உள்ளன. இங்குள்ள 7 கிணறுகள் எக்காலத்திலும் வற்றுவதில்லை. இதுவே இங்கு தல தீர்த்தமாக உள்ளன. இவை ஏழு ஆதார சக்திகளின் வடிவாக உள்ளன. மேலும் இங்கு சூட்சுமமான பல அதிசயங்கள் தென்படுகின்றன.
இங்கு முருகப்பெருமானும் யோக வடிவாக, ஞானகுருவாக அருளுகிறார். மேலும் முருகன் மிகப் பழைமையான திருமேனியராக, சித்தர்கள் ஸ்தாபித்த பாஷாண மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். செவ்வாயின் அதிபதி என்பதால் முருகனின் அருளால், அவரை வனங்குவோருக்கு விரயச் செலவுகள் குறையும். கடன் தொல்லை நீங்கும். வியாபார, தொழில் அபிவிருத்தி உண்டாகும். வெற்றி வசமாகும். தீராத நோய்கள் தீரும். மாங்கல்ய பலம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, உறவு சமூகம், செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் உண்டாகும்.
. தல வரலாறு:
முருகப்பெருமான் சிறுவனாக தந்தைக்கே பிரணவ மந்திரத்தை குருபீடத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தார். எனவே தகப்பன் சுவாமி என்ற திருநாமமும் கொண்டார். இதற்கு பிராயச்சித்தமாக திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த உச்சுவாடி கிராமத்தில் உள்ள பிரம்மரந்தீஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் ஈசனை வழிபட்டு, அவரிடம் இருந்து சித்தயோகக் கலைகளைக் கற்றார் என்கிறது தலபுராணம். இங்குதான் அர்ஜுனன் பாசுபத ஆயுதம் பெற்றான் என்கிறது தலவரலாறு. ஈசனிடம் ஆசி பெற, இங்கு வந்து சகாதேவன் வழிபாடு செய்து வரங்கள் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது.
தல அமைப்பு:
இங்குள்ள கருவறையில் மூலவர் பிரம்மரந்தீஸ்வரர் தலையில் வடுவுடன் யோகக்கலைகளை சித்திக்கும் ஆதிகுருவாக காட்சை தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அவருக்குத் துணையாக அம்பிகை பிரம்மகுந்தளாம்பிகையாக யோகசக்தியாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இங்கு வந்து வழிபட்டால் ஞானமும் வித்தைகளில் தேர்ச்சியும் பெறலாம். எடுத்த காரியத்தில் வெற்றி பெற இங்கு வந்து வழிபடுவது மிகுந்த பயனைத் தரும்.
அடுத்துள்ள கருவறையில் முருகன் கையில் தண்டம் கொண்டு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமான், அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, செவ்வாய் ஆகிய ஐவரின் அம்சத்தையும் தன்னுள் கொண்டவன். இதனால் முருகனை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். மேலும் நவக்கிரகங்கன், சனீஸ்வரர் முதலான இதர தெய்வங்களும் வீற்றறிருந்து அருளுகின்றனர்
திருவிழா:
வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், , கந்த சஷ்டி, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி
பிரார்த்தனை:
வளமான வாழ்க்கை பெற , சகல தோஷங்களும் நீங்க, ஞானம் பெற, கடன் தொல்லை நீங்க, வியாபார, தொழில் அபிவிருத்தி உண்டாக, தீராத நோய்கள் தீர. மாங்கல்ய பலம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, வெளிநாட்டு யோகம், சகல தோஷங்களும் நீங்க, எடுத்த காரியத்தில் வெற்றி பெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்
வையகத்தில் வளமான வாழ்க்கை பெற அருளும் திருவாரூர் மாவட்டம் உச்சுவாடி பிரம்மரந்தீஸ்வரர் & முருகனை சேர்த்து வணங்கி மகிழ்ந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment