கோவில் 110 - விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-110
மன அமைதி தரும் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
26.9.21 ஞாயிறு
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
மயிலம் - 604304
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: திண்டிவனம் 15 கிமீ, பாண்டிச்சேரி 30 கிமீ, விழுப்புரம் 28 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தாயார்: வள்ளி, தெய்வானை
உற்சவர்கள்: பாலசுப்பிரமணியர், முத்துக்குமார சுவாமி, சண்முகப்பெருமான் (3)
புராணப்பெயர்: மயூராசலம்
பழைமை: 1000 வருடங்கள்
பாடியவர்கள்: அருணகிரிநாதர் (1), சிவப்பிரகாச சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள்
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் சிறப்பு வாய்ந்த, அழகிய மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மயிலம் பொம்மபுரி ஆதினம் ஸ்ரீமத் சிவக்னான பாலாய சுவாமிகள் திருமடம் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திருக்கோவில் நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோவிலைப் போலவே இந்த மலையையும் புனிதமாகக் கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
இந்தக் கோவிலின் சிறப்பே 3 உற்சவர்கள் அருள்பாலிக்கின்றனர், ஒவ்வொரு பெருவிழாவிற்கும் ஒவ்வொரு உற்சவர் உலா வந்து அருள்பாலிக்கின்றார், பிரதான உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா வருகின்றார். இரண்வது மூலவர் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வருகின்றார். மூன்றாவது உற்சவர் சண்முகப்பெருமான் கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருகின்றார்.
எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். மயிலத்தில் நடைபெறும் ஒவ்வொரு வருட கந்த சஷ்டி விழாவின் போது, சூரசம்ஹாரத்துக்குக புறப்படும் முன் முருகப்பெருமான், பாலசித்தரிடமிருந்து வேலாயுதத்தைப் பெற்றுச்செல்கின்றார். முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.
பாடல் தலம்: இந்த மயிலம் முருகப்பெருமான் திருத்தலத்தைப் பற்றி அருணகிரிநாதர், சிவப்பிரகாச சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் போற்றிப் பாடியுள்ளனர். ஆடிக்கிருத்திகையன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்படும். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்படும். பின்னர் தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட மூலவர் பக்தர்களுக்கு திருக்காட்சியளிப்பார் .
தல வரலாறு:
சூரசமாரத்தின் போது, சூரபத்மன் போரில் முருகப்பெருமானால் தோற்கடிக்கப்பட்டான். அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி, மயிலம் திருத்தலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகப்பெருமான் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான். மேலும் ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் வீற்றிருந்து இங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தான். உடனே முருகன் அவனிடம் ‘‘எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்’’ என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
தல அமைப்பு:
கோவிலுக்கு செல்லும் வழியில் விநாயகர் தனி சந்நிதியில் அருள்கிறார். அருகில் பாலசித்தர் அக்னி தீர்த்தம் உள்ளது. கோவிலினுள் பாலசித்தர் சந்நிதி உள்ளது. கருவறைக்கு அருகில் விநாயகர், சிவபெருமான் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர். கருவறைக்கு எதிரில் நவக்கிரக சந்நிதி உள்ளது.
கோவிலின் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தந்து பக்த பெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றார். பெரும்பாலான கோவில்களில் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டுமே வடக்கு நோக்கி இருப்பது மிகச்சிறப்பு. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து, முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது. மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. செவ்வாய் தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன், பணப்பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.
மூன்று உற்சவர்கள்: மயிலம் கோவிலில் முருகன் மூன்று விதமான உற்சவராகக் காட்சியளிக்கின்றார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக்காப்பு அணிந்தும் அருள்பாலிக்கின்றார். இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் மலையைச்சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா வருகிறார். பங்குனி உத்திரம் விழா 12 நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக்கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம்விதமான வாகனங்களில் வலம் வருவார்.
இரண்டாவது மூலவர் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார். மாசி மகத் தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். 5 நாட்கள் அங்கிருந்து அருளி 6-வது நாளன்று திரும்புகின்றார்.
மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப்பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருகை தருகின்றார். சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள் லட்சார்ச்சனை என்று திருவிழா நடக்கிறது.
உற்சவர் முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
திருவிழா:
தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், வைகாசி விசாகம், ஆனி திருவாதிரை குருபூஜை, ஆடிக்கிருத்திகை, ஆடிவெள்ளிகள், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை தீபம், பங்குனி உத்திரப், தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி, வெள்ளி, செவ்வாய்
பிரார்த்தனை:
மன அமைதி பெற, திருமணம் நடைபெற, கடன் தொல்லை அகல, பணப்பிரச்னை தீர
நேர்த்திக்கடன்:
அலகு குத்துதல், காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம், திருப்பணி காணிக்கை
திறக்கும் நேரம்:
காலை 6-1 மாலை 4-8.30
கடன் தொல்லை அகலவும், பணப்பிரச்னை தீரவும் அருளும் மயிலம் பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்கி நல்லருளைப் பெற்றிடுவோம்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Mayilam Subramaniyanuku Arohara. Thanks for this post Iya
ReplyDelete