கோவில் 109 - சிவகங்கை குன்றக்குடி சண்முகநாதர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-109
கஷ்டங்களெல்லாம் தீர்க்கும் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோவில்
25.9.21 சனி
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்
குன்றக்குடி-630206
சிவகங்கை மாவட்டம்
மூலவர்: சண்முகநாதர்
தாயார்: வள்ளி, தெய்வானை
தலவிருட்சம்: அரசமரம்
தீர்த்தம்: தேனாறு, சரவணப்பொய்கை, மயில் தீர்த்தம்
புராணப்பெயர்: அரசவனம், மயூரகிரி, சிகண்டிமலை, மயில்மலை
வழிபட்டோர்: கண்ணபிரான், நான்முகன், இந்திரன், விசுவாமித்திரர், நாரதர், அகத்தியர், கருடன், சூரியன், மன்மதன், தேவர்கள்
பாடியவர்கள்: அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள்
இருப்பிடம்: காரைக்குடி 10 கிமீ, திருப்பத்தூர் 12 கிமீ, பிள்ளையார்பட்டி 4 கிமீ, மதுரை 80 கிமீ
தல மகிமை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 10 கிமீ தொலைவில் முருக பக்தர்களின் கஷ்டங்களெல்லாம் தீர்க்கும் குன்றக்குடி சண்முகநாதர் கோவில் அமைந்துள்ள்து. இத்திருக்கோவில் குன்றக்குடி ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. தற்போது பொன்னம்பல் தேசிகர் ஆதீனமாக இருந்து ஆன்மீகம் மற்றும் சமுதாய பணி செய்து வருகின்றார்கள். இவருக்கு முன் ஆதீனமாகயிருந்த குன்றக்குடி அடிகளார் ஆற்றிய தொண்டு ஏராளம். மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் 4 கிமீ தூரத்தில் இருக்கிறது.
இக்கோவிலின் மூலவ்ர் சண்முகநாதர் அருளும் இந்த மலை குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் அழைக்கப்படுகின்றது. புராணங்களில் அரசவனம், மயூரகிரி, சிகண்டிமலை, மயில்மலை என்றும் போற்றப்படுகிறது. இதற்குக் காரணம், தொலைவில் நின்று பார்க்கும்போது, மலையே மயிலெனத் திகழ்கின்றது குன்றக்குடி. மலையின் வடிவமே மயில் வடிவில் இருப்பது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்களில் முருகனுக்கு இருபுறமும் தேவியர் இருவரும் நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே வலதுபுறம் வள்ளியும், இடதுபுறம் தெய்வானையும் தனித்தனியாக மயில்களின் மீது இருப்பது வேறெங்கும் காணமுடியாத தோற்றமாகும்.
இங்குள்ள கருவறையில், ஆறு முகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு முருகப்பெருமான் சண்முகநாதர் என்ற திருநாமத்துடன், மயில் வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து காட்சி அளிக்கிறார். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தலத்து முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். முருகனின் மயில் வாகனமும், திருவாசியும், மூலமூர்த்தமும் ஒரே சிலையாக எழிலுடன் வடிக்கப் பெற்றிருக்கிறது.
இக்கோவில் ஒரு சிறிய மலையின் மீது, குடைவரை கோயிலாக அமைந்துள்ளது. மலை உச்சியில் ஞானிகள் வாழ்ந்ததற்கான கற்படுக்கைகளும், பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன. சண்முகநாதர் கோயிலுக்கு அருகில், ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட மூன்று குகைக் கோவில்கள் உள்ளன. இந்தக் குடவரைக் கோயில்களில் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.
இங்கு திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம். பிரிந்த தம்பதியினரும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் பக்தர்கள். பல குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்கும் சண்முகநாதப் பெருமானிடம், மக்கள் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து ‘நீயே காப்பு’ என்று தத்து கொடுத்துச் செல்வது அவர்களின் நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குன்றக்குடி முருகனை தரிசித்தால் சிறப்பு. குன்றக்குடி காவடி உலகப் புகழ் பெற்றது.
அருணகிரிநாதர் இந்த முருகக் கடவுளை போற்றி திருப்புகழ் பாடியிருக்கிறார். பாம்பன் குமரகுருதாஸ சுவாமிகளும் இந்தத் தலத்து இறைவனைப் பாடியுள்ளார். குன்றக்குடி பாமாலையில் வரும் ‘வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே’ என்று பாடுகிறார்.
தல வரலாறு:
சூரபத்மன் மற்றும் இதர அரக்கர்களும், தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் ‘நான்முகனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலைவிட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக’ பொய் சொன்னதால், மயில் கோபம் அடைந்து அன்னத்தையும், கருடனையும் விழுங்கி விட்டது. இந்திரனும், திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டுத்தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரசவனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகப்பெருமானும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள்தந்தார் என்பது தலவரலாறு,
சிவகங்கை மருதுபாண்டியருள் மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு முதுகில் ஏற்பட்டிருந்த ராஜப்பிளவை என்னும் கட்டியை, வைத்தியர்களால் தீர்க்க முடியாது என்று கைவிரித்த போது குன்றக்குடி முருகப்பெருமான் அருளால் அந்த நோயை அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியது. மருது சகோதரர்களால் திருப்பணிகள் பல செய்யப்பட்டன.
தல அமைப்பு:
குன்றக்குடியில், மலைக் கோவில், கீழ் கோவில் என்றும் இருபகுதிகள் உள்ளன. கீழே குடைவரைக் கோவிலில் தேனாற்றுநாதர் சுயம்பு மூர்த்தியாகவும், அம்பாள் அருட்சக்தி என்ற திருநாமத்துடன் அழகே வடிவாக கிழக்கு நோக்கி அருள்கிறார்கள். அகத்திய முனிவர் இங்கு வழிபாடு செய்தது சிறப்பு. சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக்கொழுந்தீசர், சண்டேசர் சிலை வடிவங்கள் உள்ளன.
மலையின் நுழைவு வாசல், மயிலின் தோகை போல் தோன்றுவதால், அங்கே உள்ள பிள்ளையார் ‘தோகையடிவிநாயகர்’ என்று போற்றப்படுகிறார். அவரை வழிபட்டுவிட்டு மலை ஏறத் தொடங்கினால், மேலே முருகனுக்கு காவடி எடுத்த இடும்பன் சன்னிதி உள்ளது. சற்று தள்ளி இடப்புறம் தேவியோடு தோன்றும் வல்லப கணபதி காட்சித்தருகிறார். மலைக்கோவில் வாசலில் முருகனின் படைத்தளபதி வீரபாகு வரவேற்கிறார்.
ராஜகோபுரம் தெற்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. நால்வர், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் சோமாஸ்கந்தர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர் .
கருவறையில் கிழக்கு நோக்கியபடி மூலவர் ‘சண்முகநாதர்’ ஆறுமுகங்கள் , பன்னிரு கரங்களுமாக, சுகாசன நிலையில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்டும், நிற்கும் மயில் மீது வீற்றிருந்து தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரி நாதன், மயில்கலைக்கந்தன். குன்றை முருகன், தேனாறுடையான் என்று பல பெயர்கள் மூலவருக்குண்டு. முருகனுக்கு வலதுபுறம் வள்ளியும், இடதுபுறம் தெய்வானையும் தனித்தனியாக மயில்களின் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திர பெருவிழா (10 நாள்), தைப்பூசம் (10 நாள்), சித்திரை பால்பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடித்திருப்படிப்பூஜை, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மாசி மகம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
தீராத தோல் வியாதிகள் தீர, திருமணம் நடைபெற, மகிழ்ச்சியுடன் இருக்க, நினைத்தக் காரியம் கைக்கூட, நோய்கள் குணமாக, குழந்தை வரம் வேண்டி, ஆயுள் பலம் அதிகரிக்க, கல்வி, ஞானம் மேம்பட, செல்வம் பெருக, விவசாயம் செழிக்க
நேர்த்திக்கடன்:
காவடி வழிபாடு, பால்குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்தல், தோல் வியாதிகள் தீர்ந்தவுடன் உடல்உறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளித்தகடு உண்டியல் காணிக்கை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 4-8
தீராத தோல் வியாதிகளை தீர்த்தருளும் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதரை மனமுருக பிரார்த்திப்போம்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
Sivagangai Kundrakudi Muruganuku Arohara. Thanks for this post Iya
ReplyDelete