கோவில் 108 - திருச்செந்தூர் ஜெயந்திநாதர் (சுப்பிரமணிய சுவாமி) கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-108
அனைத்து பக்தர்களுக்கும் ஜெயமருளும் 2-ம் படைவீடு திருச்செந்தூர் ஜெயந்திநாதர் (சுப்பிரமணிய சுவாமி) கோவில்
24.9.21 வெள்ளி
குறிப்பு: திருச்செந்தூர் குமரனின் சிறப்புகள் எண்ணிலடங்கா. அவற்றில் ஒரு சில தேன்துளிகள் மட்டும்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
திருச்செந்தூர்–628205
தூத்துக்குடி மாவட்டம்
இருப்பிடம்: திருநெல்வேலி 53 கிமீ, தூத்துக்குடி37 கிமீ, மதுரை 182 கிமீ
பாடியவர்கள்: அருணகிரிநாதர் (83 திருப்புகழ் பாடல்கள்) [2nd Highest], ஆதி சங்கரர், பழிக்கூத்தர், குமரகுருபரர், நக்கீரர், மேலும் பல மகான்கள்
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி (செந்திலாண்டவர், செந்தில முருகன்)
உற்சவர்: சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் [4]
தேவியர்: வள்ளி, தெய்வானை
தீர்த்தம்: சரவணப்பொய்கை, நாழி தீர்த்தம்
தல மகிமை:
முருகனின் அறுபடை வீடுகளில், 2-ம் படைவீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். இத்தலம் மட்டுமே கடற்கரை கோவில் என்பது சிறப்பு. மற்ற ஐந்தும் மலைக்கோவில்கள் ஆகும். இக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி, உலகெங்குமிலிருந்தும் வருடம் முழுவதும் வருகின்றனர். இந்த திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி உடன் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என 4 உற்சவர்கள் இருப்பது வேறெங்குமே இல்லாத சிறப்பு.
தமிழக கடற்கரைகள் முழுவதும் 2004 டிசம்பர் 24-ல் பேரழிவை சந்தித்தப்போது, திருச்செந்தூர் முருகன் தலம் மற்றும் அம்மையப்பன் அருள்புரியும் ராமேஸ்வரத்தில் மட்டுமே கடல் பின் வாங்கியது அதிசயத்திலும் அதிசயம். எந்த சேதமும் இல்லை.
திருச்செந்தூர் முருகனின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் டச்சுக்காரர்கள் இந்தியாவில் இருந்தபொழுது முருகன் சிலையை கடத்தி அவர்களது நாட்டிற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்பொழுது கடலுக்கு நடுவே செல்லும் பொழுது அவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு சூறாவளி அடிக்க தொடங்கியது. அப்பொழுது அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, முருகன் சிலையை கடலில் போட்ட பின்னரே, சூறாவளி நின்றது. சில காலங்கள் கழித்து ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முருகன், தான் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி வெளியே எடுக்க சொன்னார். அப்படி கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலையும் திருச்செந்தூர் கோவிலினுள்ளேதான் இருக்கிறது என்பது எங்குமே நடக்காத அதிசய நிகழ்வாகும். .
இலை விபூதி பிரசாதம்: தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக இலை விபூதி பிரசாதம் விளங்கி வருகிறது. ஆதிசங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் சுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது. மேலும் முருகன் ஒரு பக்கத்திற்கு ஆறுகரங்கள் என 12 கரங்கள் கொண்டவர். அதுபோலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பன்னிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னிருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிரு திருக்கரங்களாலேயே இலை விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் பன்னீர்செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்களின் 7-ம் நாளன்று சண்முகர் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி அணிந்து மும்மூர்த்தி வடிவங்களாக அருள்பாலிப்பது சிறப்பு. கோவில் தங்கத்தேர் அறுகோண வடிவில் இருப்பது சிறப்பு. தினமும் ஓடும். முருகனுக்கு பிடித்த உணவுகளான சிறுபருப்பு கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரைப்பொங்கல், கற்கண்டு, பேரிச்சை, பொறி, தோசை, சுய்யன், தேங்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு முதலானவற்றை படைத்து நைவேத்தியம் செய்கின்றனர். இரவில் முருகனுக்கு பால், சுக்குவென்னீர் மட்டும் வைத்து பூஜை.
திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தெற்கே நாழிக்கிணறு உள்ளது. கடலின் மிக அருகில் இருந்தாலும், இந்நீர் இனிப்பாகவே இருப்பது சிறப்பு. இங்கு நீராடி கோவிலுக்கு சென்று முருகனை வேண்டினால் வினைகள் தீரும். செல்வங்கள் சேரும்..
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி வளர்பிறை சஷ்டியின்று வெற்றிக்கொண்டார். இத்தினமே கந்த சஷ்டியாகக் கொண்டாடப்படுகிறது. இத்தல கடற்கரையில்தான் சூரசம்ஹாரம் நடைப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் சஷ்டி யாகம் நடத்தி இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது. கடல் அலையா அல்லது மனிதத்தலைகளா என்பது போல லட்சக்கணக்கான பக்தர்கள் 6 நாள் கடும் விரதமிருந்து, ஜெயந்திநாதரிடமிருந்து வேண்டும் வரம் பெற்று செல்கின்றார்கள்.
பாடல் தலம்:
ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது மனமுருகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்கம் பாடியுள்ளார். அதில் கோவிலின் சிறப்பு, சுவாமியின் மேன்மை போன்றவைக் குறித்து இருந்தது. அதில் 25-வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமைப்படப் பாடியுள்ளார். ‘சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும்’ என்று பாடியுள்ளார்..
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோவிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார். "என் புகழைப் பிள்ளைத்தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்து விட்டு மறைந்தாராம். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
குமரகுருபரர் ஆறுமுகப்பெருமாள் அருளினால் பேசும் வரம் பெற்ற தலம். கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரர் செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதை தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
அருணகிரிநாதர் திருசெந்தூர் திருப்புகழில் ‘செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே’ என்ரு பாடியுள்ளார். இத்தலத்து முருகப்பெருமானின் புகழை பற்றி 83 பாடல்கள் பாடி பரவியுள்ளார்.
தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை போன்ற தமிழ் இலக்கியங்களில், திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது.
தல வரலாறு:
தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மன் சகோதரர்களை அழிக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலையேற்ற சிவபெருமான், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சிக்கலில் அன்னையிடமிருந்து வேல் வாங்கிய முருகப்பெருமான், சிங்கார வேலனாக, சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழப்பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழப்பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார்.அதன் படியே முருகனும் இங்கே தங்கினார். வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "ஜெயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி-வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.
தல அமைப்பு:
திருச்செந்தூர் முருகனை தரிசிக்கும் முன் கடற்கரையில் நீராடி, ஈரத்துணியுடன் அருகிலுள்ள நாழிக்கிணற்றில் நீராட வேண்டும். நாழிக்கிணறு எப்பொழுதும் வற்றாமல் நீர் சுரந்து கொண்டே இருக்கும் அதிசயமான ஒரு இடமாகும். கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இந்த கிணற்றில் மட்டும் குடிக்கும் அளவிற்கு நல்ல நீர் சுரப்பது அதிசயத்திலும் அதிசயம். முருகப்பெருமான் அவருடைய படை வீரர்களின் தாகத்தைத் தணிப்பதற்காக அம்பு எய்தி, ஒரு நீருற்றை ஏற்படுத்தினார். அதுவே இந்த நாழிக்கிணறாகும். பின்பு அருகில் உள்ள மூவர் சமாதியை (மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி) வணங்கியப் பின்னரே கோவிலுக்குள் நுழைய வேண்டும்.
திருச்செந்தூரில் முருகன் சந்நிதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கிழக்கு நோக்கி கடலைப் பார்த்தபடி, காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்த சஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவ பூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன், சுப்பிரமணிய சுவாமியாக கிழக்கு நோக்கியப்படி வலக்கையில் தாமரை மலருடன் அருளுகின்றார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். விபூதிக்காப்பு, சந்தனகாப்பு, வெள்ளிகவசம், தங்கக்கவசம், வைர வேல் அலங்காரத்தில் முருகப்பெருமான் ஜொலிப்பார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஓர் லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபராதனை நடக்கும். விசேஷ தினங்களில் வைர, தங்க ஆபரணங்களுடன் அருளுவது மிக அழகு. தெற்கு நோக்கி அருள்புரியும் சண்முகர் சந்நிதியிலும் சுவாமிக்குப் பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். சண்முகருக்கு பச்சை நிற ஆடைகளையே அணிவிக்கிறார்கள். சண்முகார்ச்சனை சிறப்பு. இங்கு 4 உற்சவர்கள் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் இருப்பது சிறப்பு. குமரவிடங்கருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு.
முருகன் சந்நிதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சந்நிதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. மூலவர் முருகரின் இடப்புறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலப்புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்யலாம். மேலும் தனித்தனியாக வள்ளி, தெய்வானை, விநாயகர், மேதா குரு தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹார மூர்த்தி, சகஸ்ரலிங்கம், பெருமாள் நாராயணர், நடராஜர், சனிஸ்வரன் மற்றும் பைரவர் அருளுவது சிறப்பு. இது ஒரு குருஸ்தலம். முருகனே குருவாக இருந்து அருள்புரிகின்றார்.
திருவிழா:
கந்தசஷ்டி (இங்கு மட்டுமே 12 நாட்கள் விழா – 6 நாள் விரதம், 6-ம் நாள் சூரசம்ஹாரம், 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள் சுவாமி திருக்கல்யாண ஊஞ்சல் சேவை. மற்ற அனைத்து முருகன் கோவில்களில் 6/7 நாட்களே சஷ்டி விழா), வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா, மாசி மகம், தைப்பூசம், பொங்கல் (பாதயாத்திரை சிறப்பு), பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி, அனைத்து நாட்களும் விசேஷம்
பிரார்த்தனை:
வேண்டிம் வரம் கிடைக்க, வினைகள், நோய்கள் தீர, வாழ்வில் ஜெயம் உண்டாக திருமண வரம், குழந்தை வரம் (சஷ்டி விரதம்), குருப்பெயர்ச்சி நிவர்த்தி வேண்டி, கல்வி, ஞானம், வியாபாரம், அனைத்து செல்வங்களும் பெருக
நேர்த்திக்கடன்:
பால்குடம், அனைத்து வித காவடிகள், முடிக்காணிக்கை, காதுக்குத்துதல், பாலாபிஷேகம், பிற அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் இழுத்தல்
திறக்கும் நேரம்:
காலை 5 முதல் இரவு 9 வரை
யோகம், போகம், வேகம், குருபலன் அருளும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை நமது இல்லத்திலிருந்தே நெஞ்சார வணங்கி மகிழ்வோம்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment