கோவில் 107 - வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-107

கேட்டதெல்லாம் அள்ளித்தரும் வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

23.9.21 வியாழன்

அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

ரத்தினகிரி–632517

வேலூர் மாவட்டம்

இருப்பிடம்: வேலூரிலிருந்து 12 கிமீ


மூலவர்: பாலமுருகன்

உற்சவர்: சண்முகர்

தீர்த்தம்: ஆறுமுக தெப்பம் [அறுகோண வடிவம்]

பாடியவர்: அருணகிரிநாதர்

தல மகிமை:

வேலூர்-சென்னை நெடுஞ்சாலையில் வேலூர் மாநகரிலிருந்து 12-வது கிமீ-ல் கேட்டதெல்லாம் அள்ளித்தரும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. ஆடிக்கிருத்திகையன்று ரத்தினங்களாலான ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு பாலமுருகன் அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதர் ரத்தினகிரி பாலமுருகனைப் பற்றி திருப்புகழில், ‘ஒப்பில்லாத மாமணி’, ‘வித்தகர்’ எனச் சொல்லி பாடிப் பரவியுள்ளார்.


ஐப்பசி பவுர்ணமியில் சிவனுக்குத்தான், அன்னாபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு பாலமுருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது விஷேசம். முருகப்பெருமான் சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் சிவ அம்சமாகிறார். இத்தலத்து முருகனுக்கு பூஜையின்போது மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர். முருகன் பால வடிவில் இருப்பதால், கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடப்பதில்லை. இங்குள்ள வாராஹியிடம் வளர்பிறை பஞ்சமியில் திருமணத்தடையுள்ள பெண்கள் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம், பூ வைத்து நெய்தீபம் ஏற்றி வேண்டினால் திருமணம் கைக்கூடும். ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மகா சண்டியாஜ பூஜை மிக விமர்சியாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.


தல வரலாறு:

கிபி 1245-ம் ஆண்டு சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவானதாய் ஆய்வுகள் சொல்கின்றன. 1968-ம் ஆண்டு கீழ்மின்னல் கிராமத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் என்பவர் மின்சாரத்துறையில் வேலைப்பார்த்து வந்தார். 20-03-1968 புதன்கிழமை அன்று இவ்வழியாகப் போன சச்சிதானந்தம், இரத்தினகிரி பாலமுருகனை வணங்கினார். அங்கிருந்த பூசாரியிடம் கற்பூரம் ஆரத்தி காட்ட சொன்னார். பூசாரி கற்பூரம் இல்லையென சொல்ல, சரி ஊதுபத்தியாவது காட்டுங்கள் என சச்சிதானந்தம் சொல்ல, அதற்கும் வழியில்லையென பூசாரி சொன்னார். ஒரு கற்பூர ஆரத்திக்குக்கூட வழியில்லாத நிலையில் மனம் வருந்தி சச்சிதானந்தம் மயங்கி விழுந்தார். சச்சிதானந்தம் மயங்கி விழுந்ததை கண்டதும், பூசாரி ஆட்களை அழைத்துவர மலையடிவாரத்துக்கு சென்றார். அதற்கிடையில் சச்சிதானந்திற்கு மயக்கம் தெளிய, முருகனின் பரிதாபநிலை மனசில் தோன்ற, மீண்டும் முருகனை பார்த்தார். கருவறையிலிருந்த முருகன் சிலையில் ஒரு ஒளி தோன்றியது. அருகிலிருந்த மணலில், இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். இனி பாலமுருகனுக்கு பணி செய்யும் அடியவனாகவே இருப்பேன். கோவில் திருப்பணி தவிர வேறு சிந்தனை இனியில்லை என எழுதிவிட்டு, உடைகளை களைந்து வெறும் கோவணத்தோடு முருகன் கோவிலிலேயே மவுன சாமியாராக அமர்ந்து விட்டார். அன்றிலிருந்து அவருக்கு பாலமுருகனடிமை என்று பெயர் உண்டானது.


சச்சிதானந்தம் பாலமுருகனடிமையான பின் யாரிடமும் பேசுவதில்லை. அவரை சுற்றியுள்ளோர், அவரின் தேவையை குறிப்பறிந்து செய்கின்றனர். நமது குறைகளை, விண்ணப்பச்சீட்டில் எழுதிக்கொடுத்தால், அதற்கான பதிலை அதே சீட்டில் எழுதிக்கொடுப்பது சுவாமிகளின் வழக்கம். தொடர்ந்து 54 ஆண்டுகள் எங்கும் செல்லாமல், இன்றுவரை பாலமுருகனருகில் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். அவரது சீரிய முயற்சியால் கோவில் பிரம்மாண்டமாய் எழுந்தது.


தல அமைப்பு:

இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உற்சவர் சண்முகர் சந்நிதி கல்லில் தேர் போன்று அமைக்கப்பட்டுள்ளது. முன்மண்டபத்தில் கற்பக விநாயகர் உள்ளார். மலையடிவாரத்தில் துர்க்கைக்கு தனி கோவில் உள்ளது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் துர்க்கைக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இக்கோவில் வாராஹிக்கு சந்நிதி உண்டு. வாராஹியின் இருபுறமும் நந்தி மற்றும் சிம்ம வாகனங்கள் இருக்கின்றன.


கருவறையில் மூலவர் பாலமுருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். .முருகப்பெருமான் பாலவடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்கின்றனர். கோவிலுக்குள் தங்கத்தேர் ஓடுவது மிக அழகு.


திருவிழா:

தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

கேட்ட வரம் கிடைக்க, திருமண/புத்திர தோஷம் போக்க, கல்யாண வரம், குழந்தை வரம் கிடைக்க, நோய்கள் குணமாக, கல்வி, ஞானம் மேம்பட, செல்வம் சேர


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி எடுத்தல், முடிக்காணிக்கை, பாலாபிஷேகம், பிற அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள, அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6.30-1 மாலை 3.30-8


குழந்தை வரமருளும் வேலூர் ரத்தினகிரி பாலமுருகனை கும்பிட்டு வேண்டிக்கொள்வோம்!


.வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



Comments

  1. Rathnagiri Balamuruganuku Arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்