கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-80

திருமண வரம் தந்தருளும் சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

27.8.2021 வெள்ளி


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

குன்றத்தூர்

சென்னை-600069

காஞ்சிபுரம் மாவட்டம்

இருப்பிடம்: தாம்பரம் 16 கிமீ, சென்ட்ரல் 25 கிமீ, கோயம்பேடு 16 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வில்வ மரம்

தீர்த்தம்: சரவணப்பொய்கை

பாடியவர்கள்: அருணகிரிநாதர்


தலமகிமை:

சென்னை தாம்பரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் குன்றத்தூரில் உள்ள குன்று ஒன்றில் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருத்தணிக்குத் தெற்கில் இருப்பதால், தென் தணிகை என்றும் அழைக்கப்படுகிறது.


திருப்பரங்குன்றம் முருகனைப் போல குன்றத்தூர் மூலவர் முருகப்பெருமானும் வட திசையைப் பார்த்து காட்சி தந்தருள்வது சிறப்பம்சம். மேலும், திருப்பரங்குன்றத்தில் பெருமான் தெய்வானையுடன் மட்டும் அருள்பாலிக்கின்றார். இத்திருத்தலத்தில், சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிப்பது சிறப்பு.

அசுர சக்திகள் என்பவை மனிதர்களின் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களைக் குறிப்பவை. மும்மலங்களையும் சம்ஹாரம் செய்த குமரக்கடவுளை வழிபட்டால், அவற்றிலிருந்து விடுபட்டு, பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பது தத்துவம்.


இத்தலத்து முருகப்பெருமான் திருமணத் தடைகளை நீக்குவதால் திருமணத்தடை உள்ளவர்கள் அதிக அளவில் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களது நேர்த்திக்கடனுக்காக முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்தும், அபிஷேகம் செய்தும் வழிபாடு செய்கிறார்கள். பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் இந்த ஊரில்தான் அவதரித்தார். சேக்கிழாருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த தலமாகும். மலையடிவாரத்தில் சேக்கிழாருக்கு தனிக் கோவில் உள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் இயற்றிய தலம். சேக்கிழார் குருபூஜையின் போது, முருகப்பெருமான் மலையிலிருந்து சேக்கிழார் சந்நிதிக்கு எழுந்தருளி, அவருக்கு தரிசனம் கொடுப்பது மரபாக இருக்கிறது.


தொட்டில் கட்டி வழிபாடு: அரசமரத்தின் கிளைகளில் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில்கள் கட்டியதன் வாயிலாக குழந்தை வரம் கிடைத்துள்ளது என்பது பலருக்கும் அனுபவமாக உள்ளது.


விபூதி பிரசாதம்: பாடல் பெற்ற இத்தலத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு நடத்தப்படும் அபிஷேக விபூதிதான், தினமும் பிரசாதமாக தரப்படுகிறது.


குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்றால், இங்கு வந்து தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, "இது உன் குழந்தை, நீதாம்பா காப்பாத்தணும்" என்று சொல்லி முருகனுக்குத் தத்துக் கொடுத்து, வழிபட்டுவிட்டு, குழந்தையை அழைத்துச் சென்றால், கந்தக் கடவுள் அந்தக் குழந்தையைக் குறையின்றிக் காப்பார் சொந்த வீடு வேண்டிக் கொண்டால், வேண்டுதல் நிறைவேறும்


தல வரலாறு:

முருகன். ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரில் நீரின் மார்க்கமாகவும், கன்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்தில் நிலத்தின் மார்க்கமாகவும், தாரகாசுரனை திருப்போரூரில் ஆகாய மார்க்கமாகவும் சம்ஹாரம் செய்தார். திருப்போரூர் சம்ஹாரம் முடிந்ததும், மனம் அமைதி பெற திருத்தணி தலம் நோக்கி புறப்பட்டார். வழியிள் குன்றத்தூர் மலையை பார்த்ததும் முருகன் அங்கு அமர்ந்தார். சில காலம் இங்கு தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அந்த சிவன், மலை அடிவாரத்தில் "கந்தழீஸ்வரர்" என்ற பெயரில் தனிக் கோவில் கொண்டு இப்போதும் அருள்பாலித்து வருகின்றார். முருகன் பூஜித்த ஈஸ்வரர் என்பதால் அவருக்கு இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.


தல அமைப்பு:

84 படிகள் ஏறி செல்லும் வழியில் இருக்கும் வலஞ்சுழி விநாயகர் நமது தடைகளை சுலபமாக விலக்கி அருள் புரிந்திடுவார். மேலே சென்றவுடன் கலைத்திறனுடன் அமைக்கப்பட்ட கொடிமரத்தை தரிசிக்கலாம். கொடிமரத்தை வணங்கிய பிறகு மூலவரை வழிபட செல்ல வேண்டும்.


கருவறை சந்நிதி முன்புள்ள துவாரபாலகர்களுக்கு வஜ்ரம், சூலாயுதம் என்று முருகனுக்கு உரிய ஆயுதங்கள் இருக்கின்றன. கருவறையில் மூலவர் முருகன் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருட்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு வெளியில் நின்றபடி மூவரையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வது சிரமம். காரணம் கருவறை மற்றும் சிலைகளின் வடிவமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது. ஒரு பக்கமாக நின்று தரிசனம் செய்யும்போது முருகனும், வள்ளியும் மட்டும் தெரிவார்கள். தெய்வானையின் உருவம் தெரியாது. இன்னொரு பக்கத்தில் நின்று தரிசித்தால் முருகனும், தெய்வானையும் தெரிவார்கள்; வள்ளியின் உருவம் தெரியாது. கருவறைக்கு வெளியே வாசலில் நின்று தரிசிக்கும்போது மூலவரான சுப்பிரமணிய சுவாமியை மட்டுமே பார்க்க முடியும். மூலவர் சந்நிதி மீதுள்ள விமானம் ‘ஷட்கோண’ (அறுகோண) அமைப்பில் அதாவது முருகனின் சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.


முருகன் சந்நிதியை வலம் வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பைரவர், நாகர், நவக்கிரகங்கள் சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்கின்றனர். கோவில் அமைந்துள்ள மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் நாகலிங்கேஸ்வரர் அருள் தருகிறார்.


திருவிழா:

வைகாசி விசாகம், கந்த சஷ்டி (8 நாள்), திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்டிகை, தைப்பூசம். பங்குனி உத்திரம், புது வருட பிறப்பு, கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, திருமண வரமருள, குழந்தைப் பேறு கிடைக்க, குழந்தைகள் உடல்நிலை குணமாக சொந்த வீடு வேண்டி,


நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு திருமணம் நடத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல், எடைக்கு எடை காணிக்கை செலுத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 6.30-12.30 மாலை 4-8


சொந்த வீட்டு வேண்டுதலை நிறைவேற்றி அருளும் சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமியை கும்பிட்டு மகிழ்ந்திடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



Comments

  1. Kundrathoor Subramaniya Swamiku Arohara. Thanks for this post Iya

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்