கோவில் 79 - தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-79

தீராத பிணிகள் தீர்க்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

26.8.2021 வியாழன்


அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி (இராஜேந்திர சோழீஸ்வரர்) திருக்கோவில்

பெரியகுளம்-625601

தேனி மாவட்டம்

இருப்பிடம்: தேனியிலிலிருந்து 15 கிமீ


மூலவர்: இராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்)

தாயார்: அறம் வளர்த்த நாயகி

நாயகர்: பாலசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்


தலமகிமை:

தேனி நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள பெரியகுளம் நகரின் மையப்பகுதியில் பாலசுப்பிரமணிய சுவாமி குடிகொண்டிருக்கும் இராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தேனி மாவட்டத்தில் அமைந்த பெரிய கோவில். இங்கு மூலவர் சிவபெருமானாக இருந்தாலும், முருகப்பெருமான்தான் பிரசித்தி. எனவே இக்கோவிலை பாலசுப்பிரமணிய சுவாமியர் கோவில் என்றால்தான் பக்தர்களுக்கு தெரியும். முருகப்பெருமானின் சிலையானது பூமியைத் துளைத்து கட்டப்பட்டிருக்கிறது. ஆறுமுகங்களையுடைய முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார்.


இந்தக் கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரையிலும், நேரெதிராகப் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன. காசிக்கு அடுத்ததாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்கின்றனர். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள். காசிக்கு நிகரான கோவில் என்கின்றனர்.. வராக நதியின் இரு கரைகளிலும் இருக்கும் ஆண், பெண் மருத மரங்களைப் பார்த்து வழிபட்டுச் செல்லும் தம்பதியர்கள், மனம் ஒன்றுபட்டு அதிகக் காலம் வாழ்வர். அவர்களுக்கு இடையே எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது என்பது நம்பிக்கையாக இருக்கிறது.


இங்குள்ள ராஜேந்திர சோழீசுவரர் சந்நிதியில் சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களிலும், அறம் வளர்த்த நாயகி சந்நிதியில் அம்மனுக்குரிய சிறப்பு நாட்களிலும், பாலசுப்பிரமணிய சுவாமி சந்நிதியில் முருகனுக்குரிய சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலுக்கு வந்து மூவரையும் வழிபடுபவர்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைப்பதுடன் மனமகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்கிறார்கள். இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி முருகனை வணங்கிட, தீராத வியாதிகளும் தீரும் என்பது ஐதீகம்.


தல வரலாறு:

ஒருமுறை ராஜேந்திர சோழ மன்னர், ஒரு சமயம் வராக நதி அகமலைக் காட்டுப்பகுதிக்குள் ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த போது அதனை தேவையில்லாமல் கொன்று விட்டதாகவும், பின்னர் அந்த பன்றியின் குட்டிகளுக்கு முருகப்பெருமான் பாலூட்டிக் கொண்டிருந்ததை ராஜேந்திர சோழர் காண நேரிட்டது. தனது தவறை உணர்ந்த ராஜேந்திரன் அதே இடத்தில் சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோருடன் முருகப்பெருமானையும் சேர்த்து மூன்று தெய்வங்களை முதன்மை தெய்வங்களாக்கி வழிபட்டான் என்று இக்கோவில் தல வரலாறு சொல்லப்படுகிறது. இந்த கதை அப்படியே கற்சிற்பங்களாக இக்கோவிலில் செதுக்கப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணிய சுவாமிய கடவுளின் இந்த கோவில் வடநாட்டின் காசி கோவில் அமைப்பை போல உள்ளது.


தல அமைப்பு:

ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில், சோழர் கால கட்டுமான அமைப்பைக் கொண்டிருக்கிறது. இக்கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் முருகப்பெருமான் என்று மூன்று கருவறைகள் தனித்தனியாக மூன்று கொடி மரங்களுடன் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மூலவராக இறைவன் சிவபெருமான், ‘ராஜேந்திர சோழீஸ்வரர்’ எனும் திருப்பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் தனி சந்நிதியில் அருளுகின்றார்.


அடுத்த கருவறையில், முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் ‘பாலசுப்பிரமணிய சுவாமி’என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமான் சந்நிதிக்கு நேராக அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேற்கூரை உட்பகுதியில், 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகள் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கின்றன. இந்த தலத்தில் கந்தனை கும்பிடுவோருக்கு தோஷங்கள், பிணிகள் அகலுகின்றன.


ஆலய வெளிச்சுற்றில் விநாயகர், நடராஜர், சூரியன் மற்றும் சந்திரன் தங்கள் மனைவியருடன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஜுரத்தேவர், பைரவர், சப்த கன்னியர், மகாவிஷ்ணு, நவக்கிரகங்கள் வீற்றிருந்து அருள்கின்றனர். இங்கு மரணத்தை வெல்ல அருளும் மிருத்யுஞ்சர் சந்நிதியும் உள்ளது. கோவில் தூண்களில் அகோரவீரபத்திரர், ருத்ரதாண்டவர், துர்க்கை, மன்மதன் வீற்றிருக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி பிரம்மோற்சவம், சித்திரைத் திருவிழா (சிவன்), வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் (முருகன்), ஆடிப்பூரம் (அம்மன்), பிரதோஷம்


பிரார்த்தனை:

தம்பதி ஒற்றுமை ஓங்க, சகல வளங்கள் பெற்றிட, திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, தீராத பிணிகள் தீர


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்


திறக்கும் நேரம்:

காலை 6-12 மாலை 4.30-8


தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்குவோருக்கு சகல வளங்கள் கிடைத்திடும்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - தீராத பிணிகள் தீர்க்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி



படம் 2 - சகல வளங்கள் கிடைத்திட அருளும் தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி

Comments

  1. Theni Periyakulam Balasubramaniya Swamiku Arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்