கோவில் 78 - திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்

🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-78

பாவ வினைகளை அகற்றிடும் திண்டுக்கல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்

25.8.2021 புதன்


அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவில்

பூம்பாறை 624103

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம்

இருப்பிடம்: கொடைக்கானலிலிருந்து 20 கிமீ


மூலவர்: குழந்தை வேலப்பர்

பழைமை: 3000 ஆண்டுகள் பழைமை

பாடியவர்: அருணகிரிநாதர்


தலமகிமை:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலிருந்து 20 கிமீ தொலைவில் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவில் (குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில்) மூன்றாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இக்கோவில் சிலையானது போகர் என்னும் சித்தரால் நவபாஷானத்தில் (இரண்டாவது நவபாஷண சிலை) உருவாக்கப்பட்டது. இந்த கோவில் பழனி தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது.


இந்த தேதியில், இந்த நேரத்தில் வர வேண்டும் என்று இந்த முருகப்பெருமான் நினைத்தால்தான் நாம் வந்து தரிசிக்க முடியும். ஒவ்வொரு வருடமும் பூம்பாறை குழந்தை வேலப்பருக்கு தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்குப் பிறகு வரும் கேட்டை நட்சத்திரத்தன்று விழா நடைபெறுகிறது. தன்னை வழிபடும் பக்தர்களின் பாவ வினைகளை குழந்தை வேலப்பர் தீர்த்து அருள்பாலித்து வருகிறார்.


அருணகிரிநாதர் முருகப்பெருமானை தரிசிக்க பூம்பாறைக்கு வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி, தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருவள், அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது, முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரிநாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, குழந்தையும் தாயும்தான் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம். தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்டு குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால், குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள் பாலித்து வருகிறார். அவரின் பக்கத்திலேயலே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அவர் உருகிப் பாடிய திருப்புகழ் பாடல்:

‘பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு

பூங்கதலி கோடி திகழ்சோலை

பூந்தடமு லாவுகோம்பைகள்கு லாவு

பூம்பாறையில் மேவு பெருமாளே!’


தல வரலாறு:

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் கற்சிலை அல்லது ஐம்பொன்னாலான சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை


1, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி சிலை,

2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் சிலை.


உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர் ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும், அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தி. அது போல அருள்பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர். சுமார் 10/12ம் நூற்றாண்டில் சித்தர் போகர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ரசாயன பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையைத்தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர்.  அக்கோவிலை இறைவனிடம் வேண்டி, சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு. பின்னர் சீன நாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று, யானை முட்டி குகைக்கு வந்து, ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும், ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலை நிறுத்தவும், பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி, குருமூப்பு சிலையை, குழந்தை வேலப்பர் உருவாக்கினார்.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், குழந்தை வடிவில் குழந்தை வேலப்பர் என்ற திருப்பெயரில் ராஜ அலங்கார பழனி தண்டாயுதபாணியைப் போல அழகு திருக்கோலத்தில் காட்சியளியளித்து பக்தர்கள் வேண்டிய வரங்களை அள்ளி வழங்குகிறார். அருணகிரிநாதப் பெருமான் சிலை அருகில் இருப்பது சிறப்பு.


திருவிழா:

தைப்பூசம் (10 நாள், தேர்), வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, பாவ வினைகளை அகற்ற, வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருள, கல்வி, ஞானம் வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6 முதல் மாலை 7 வரை


வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அள்ளி வழங்கும் திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை குழந்தை வேலப்பரை மனமுருக வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - பாவ வினைகளை அகற்றிடும்  திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்


படம் 2 - வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அள்ளி வழங்கும் திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை குழந்தை வேலப்பர்


Comments

  1. Poomparai Kuzhanthai Velapparuku Arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்