கோவில் 443 - கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-443

கடன் பிரச்னைகளை தீர்க்கும் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

25.8.2022 வியாழன்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

கீரப்பாளையம்-608602

சிதம்பரம் வட்டம்

கடலூர் மாவட்டம்

இருப்பிடம்: சிதம்பரம்- சேத்தியாதோப்பு சாலையில் 7 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சிதம்பரம்-சேத்தியாதோப்பு சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ள கீரப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்ற திருப்பெயருடன் வள்லி, தெய்வானை சமேதராக எழுந்தருளியுள்ளார்.


பங்குனி உத்திரம் இருநாள் உற்சவமாக நடைபெறும். முதல் நாள் திருக்கல்யாணம், இரவு வீதியுலா நடைபெறும். இரண்டாம் நாள் காலை காவடிகள், சுவாமி உலாவும், மதியம் மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து அன்னதானமும் இடும்பன் பூஜையும் நடைபெறும். வைகாசி விசாகம், தைப்பூசத்தம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் சிறப்பாக நடைபெறும். மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று அருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முன்னால் திருஅருட்பா பாடி, அன்னதானம் நடைபெறுகிறது..


குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்வோருக்கு நல்லமுறையில் குழந்தை பிறக்கின்றது. .ஆண் குழந்தையானால், முருகனின் பெயரையும், பெண் குழந்தையாக இருப்பின் வள்ளி அல்லது தெய்வானை பெயரையும் சூட்டி மகிழ்ந்தனர். பங்குனி உத்திரம் அன்று குழந்தைப்பேறுக்காக இடும்பன் சந்நிதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் ஏராளமான தம்பதியர் கலந்துகொள்கிறார்கள். இடும்பனின் பூஜை பிரசாதத்தை மனைவியர் தங்கள் முந்தானையில் பெற்றுக் கொண்டு கணவன், மனைவி இருவரும் அங்கேயே சாப்பிடுகின்றனர். விரைவில் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கிறது. பலன் பெற்றவர்கள், அடுத்த பங்குனி உத்திரமன்று காவடி எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.


தடை நீங்கி திருமணம் நடைபெற பிரார்த்தனை செய்து கொண்டவர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் தம்பதி சமேதராக பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் நடைபெறும் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு, தங்கக்காசு பட்டம் கட்டி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.


பிள்ளைகள் கல்வியில் சிறக்க, நல்ல பணிவாய்ப்பு கிட்ட தேன், தினைமாவு வைத்து பூஜை செய்கிறார்கள். இப்படிச் செய்தால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும், நல்ல வேலையும் கிடைப்பதாக சொல்கின்றனர்.


இவ்வூரில் விவசாயம் பிரதானமாக நடைபெறுகிறது. அதற்கான பணிகளைத் தொடங்கும் முன் இவ்வாலயத்தில் இருக்கும் சுப்ரமணியரையும், வடலூர் அருட்பிரகாச வள்ளலாரையும் வழிபடுகிறார்கள். இதனால் தங்கள் வயலில் நல்ல விளைச்சல் கிடைப்பதாகவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயம் காக்கப் படுவதாகவும் சொல்கிறார்கள். நன்றிக்கடனாக, முதல் அறுவடையில் கிடைக்கும் நெல்லில் குறிப்பிட்ட அளவை அன்னதானத்திற்கு வழங்குகிறார்கள்.


கடன் பிரச்னையில் இருப்பவர்கள் செவ்வேளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர். ஆரோக்கியம் வேண்டி நலன் பெற்றோர், நேர்த்திக்கடனாக காவடிகள் எடுக்கிறனர். மாதம்தோறும் கார்த்திகை மற்றும் சஷ்டி தினங்களில் காலை சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்படும். சுவாமி புறப்பாடு நடைபெறும். இங்கு அருளும் சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபமேற்றி வழிபட்டால், சனிதோஷம் நீங்குவதாக நம்பிக்கை.


தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்னர் கீரப்பாளையம் கிராமத்தில் அதிக அளவில் நெசவாளர்கள் வசித்து வந்தனர். அவர்கள் சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லை சிவகாமி அம்மையையும் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் காலரா தொற்றுநோய் பரவியது. அந்நோய்க்கு ஏராளமானோர் பலியானார்கள். ஊருக்குள்ளேயே இருந்த மக்களுக்கு, தங்கள் தெய்வங்களை வணங்க முடியவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது. நம் ஊரிலேயே ஒரு கோவில் இருந்தால் நன்றாக இருக்குபே என எண்ணினர். ஊர் ஜமீன்தார் நாகமணியிடம் சென்று விஷயத்தை சொன்னார்கள்.


தெய்வ பக்தரான அவர், 'நான் என் சொந்த இடத்தைத் தருகிறேன். நீங்கள் அதில் முருகனுக்கு ஆலயம் கட்டுங்கள்!' என்று கூறினார். அவர் அளித்த இடத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கீற்றுக் கொட்டகை அமைத்து, அதில் வேல் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். அந்த இடத்தில் முருகனின் சிலை வைக்க வேண்டும் என்று பக்தர்கள் எண்ணினர். அச்சமயத்தில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் இவ்வழியாக சென்றுதான் தில்லை நடராஜரை தரிசிப்பார். அவரது தீவிர பக்தர்கள் வள்ளலார் படத்துடன் திருவருட்பா பாடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று கோவில் திருப்பணிக்கு நிதி திரட்டினர். அதைக் கொண்டு சிறு கோவில் அமைக்கப்பட்டு, முதலில் தண்டாயுதபாணி சிலை வைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். பின்னர் ஆன்றோர்களின் ஆலோசனைப் படி மூலவராக வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டார் பிற்காலத்தில் இவ்வாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு ஐந்தாவது கும்பாபிஷேகம் 6.4.2022 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.


தல அமைப்பு:

ஆலய முகப்பில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணியரையும், அவர்களுக்கு இருபுறம் சிவன், பார்வதி, விநாயகரையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். அருகே எழிலான மயில்களின் வடிவமும் இருக்கிறது. மகா மண்டபத்தில் வேலன் அருள் பாலிக்கிறார். வள்ளலார், இடும்பன், சனீஸ்வரர் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர்.


அர்த்த மண்டபத்தின் மேலே கஜலக்ஷ்மி வீற்றிருக்க, இரு புறமும் துவாரபாலகர்கள் காட்சி தர மயில், பலிபீடம் அழகுற அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கருவறையில் சமேதராக சுப்ரமணிய சுவாமி நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக அழகுடன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

பங்குனி உத்திடம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகை, பூசம், சஷ்டி


பிரார்த்தனை

திருமணவரம், குழந்தைவரம் வேண்டி, கல்வி, வேலை வேண்டி, விவசாயம் செழிக்க, கடன் பிரச்னைகள் தீர


நேர்த்திக்கடன்:

காவடி, திருக்கல்யாணம், அபிஷேகம்அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7-9 மாலை 5-8 [சஷ்டி, கிருத்திகை கூடுதல் நேரம்]


முத்தான பலன்களை அள்ளித் தரும் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - கடன் பிரச்னைகளை தீர்க்கும் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி தேவியருடன்


படம் 2 - முத்தான பலன்களை அள்ளித் தரும் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் காவடி திருவிழா மற்றும் திருவருட்பா பாராயணம்


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்