கோவில் 442 - குகன் (முருகப்பெருமான்) வழிபட்ட கன்யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-442
பிரதோஷ நன்னாளில் குகன் (முருகப்பெருமான்) வழிபட்ட கன்யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்
24.8.2022 புதன்
அருள்மிகு குகநாதீஸ்வரர் திருக்கோவில்
கன்யாகுமரி-629702
கன்யாகுமரி மாவட்டம்
இருப்பிடம்: கன்னியாகுமரி ரயில்நிலையத்திலிருந்து100 மீ
மூலவர்: குகநாதீஸ்வரர், கோனாண்டேஸ்வரன், குகனாண்டேஸ்வரன்
அம்பாள்: பார்வதி
நாயகர்: குகன் (முருகப்பெருமான்)
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம்: வில்வமரம்
தலமகிமை:
கன்னியாகுமரி ரயில்நிலையம் அருகில் (100 மீ) மரங்களும் செடிகளும் நிறைந்த ரம்மியமான சூழலில் அருள்மிகு குகநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் இறைவன் கோனாண்டேஸ்வரன் என்றும், குகனாண்டேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், இக்கோவில் கருவறை குகை போன்று அமைத்துள்ளதாலும், பிராகாரம் குறுகியிருப்பதாலும், குகநாதீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். இறைவி பார்வதி. கோவில் தலவிருட்சம் வில்வமரம். குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான சிவலிங்கம் இந்தத் திருக்கோவிலில்தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து புதராகக் காட்சியளித்த இக்கோவிலை, 30 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி ரயில் நிலையப் பணியாளர் ஒருவர் சுத்தப்படுத்தி, கோவிலில் பூஜை நடப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அதன் பிறகே, பக்தர்கள் வரத் தொடங்கினர்..
கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோவிலின் தலபுராணத்தில் குகன் (முருகன்) தன் தந்தையை (சிவன்) வழிபட்ட இடம் குகநாதீஸ்வரர் கோவில் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக கீழ் கண்ட கந்தபுராண வரியை மேற்கோள் காட்டுகிறார்கள்
‘மகமெனும் குகன்தான் அந்த மகிமைசேர் குமரியங்கண்
அகமகிழ் தாதையான அரன்தனைத் தாபித்து
அன்பால்தகைமைசேர் உபசாரங்கள் தம்மொடும் பூசைசெய்து
குகன்தனை ஆண்ட ஈசன் எனும்பெயர்கூறிப் பின்னர்’
1008 இளநீர் அபிஷேகம்: கோடையில் கோடை வெப்பம் நீங்கி, நாட்டில் நல்ல மழைபெய்ய வேண்டி, இக்கோவிலில் 1008 இளநீர் அபிஷேக பூஜை வெகு விமரிசையாக நடைபெறுவது மிகச் சிறப்பு. திரளான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட இளநீரை பாட்டில்களில் நிரப்பி, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர்.
1008 சங்காபிஷேகம்: இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அன்றைய தினத்தில் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜை ஆகியவை தொடர்ந்து நடைபெறும். அன்றைய தினம் 12.30 மணிக்கு, ரிஷப வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி, பவனி வரும் நிகழ்ச்சி வெகு பிரபலமாகும்.
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.. அன்று விரதமிருந்து குகநாதீஸ்வரரை வழிபட்டால், குடும்ப பிரச்னைகள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கட்கிழமை மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். அப்போது கிரி தாரை, நெய் தாரை, இளநீர் தாரை போன்ற நேர்ச்சை அபிஷேகங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். ஆண்களைவிட பெண் பக்தர்களே இக்கோவிலுக்கு அதிக அளவில் வருகின்றனர். பெண் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறினாலே குடும்பம் தழைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் திருமணத் தாலி செய்வதற்காக தங்கக்காசுகள் வாங்கிக் கொண்டு இக்கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அவர் தங்கக் காசுகள் தொலைந்துவிட்டன. உடனே, அவர் மூலவரிடம் முறையிட்டு, மனமுருகி வேண்டினார். அடுத்த சில மணி நேரத்தில், யாரோ ஒரு நபர் அந்தத் தொலைந்த தங்கக் காசுகளைக் கொண்டுவந்து அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டுச் செல்ல, அர்ச்சகர் இவரை அழைத்து அவற்றை ஒப்படைத்தார். அன்றிலிருந்து, குகநாதீஸ்வரரிடம் மனமுருகி வேண்டினால், நமது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணவரம் கிட்டாத பெண்கள் தொடர்ந்து இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிட்டும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
முருகப்பெருமான் தனது தந்தையான சிவபெருமானிடம் தவமிருந்து நினைத்த காரியத்தை நடத்தியதால் குகன் மற்றும் நாதீஸ்வரன் என இரு பெயரையும் சேர்த்து குகநாதீஸ்வரன் என்ற பெயருடன் இந்த ஆலயம் விளங்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இத்திருக்கோவிலில் கிபி 11-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், இத்திருக்கோவில் இறைவனை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்’ என நீண்ட அடைமொழியோடு குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரி பகுதியில் நிலவிய போது இந்த குகநாதீஸ்வரர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டதாகக் கல்வெட்டுக் குறிப்பில் காணப்படுகிறது. எனவே, கிபி10-ம் நூற்றாண்டுக்கு முன்பே இக்கோவிலில் வழிபாடுகள் நடந்திருக்கலாம் என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இக்கோவிலில், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒரு கல்வெட்டில், ‘ஒரு செவ்வாய்க்கிழமையில் பூச நட்சத்திரத்தன்று கோவிலின் முக மண்டபத்தில் சபை கூடியது; கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த வியாபாரி ஆச்சான் மாற்றிலி என்பவர் இக்கோவிலுக்கு நன்கொடை கொடுத்தார்’ என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கோவிலிலுக்கு நிவந்தங்கள் அளித்ததவர்கள் விவரங்களும் கல்வெட்டில் முழுமையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
தல அமைப்பு:
இக்கோவில் மூலஸ்தானத்தில் மூலவர் குகநாதீஸ்வரர் 5 1/2 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். குமரி மாவட்டத்திலேயே இந்த லிங்கம்தான் மிகப் பெரிய லிங்கமாகும். இக்கோவில் கோசாலையில் உள்ள பசுக்களின் மூலம் கிடைக்கும் பாலை கொண்டு குகநாதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. இறைவி பார்வதி தேவி தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
இத்தலத்து குகநாதீஸ்வரரை வணங்கி வரம் பெற்ற முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி நவக்கிரகங்கள், கன்னி விநாயகர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகிய பரிவார மூர்த்தங்களும் அருளுகின்றனர்.. கால பைரவர் தெற்கு நோக்கி அருள்கின்றார். கோவில் அரசமரத்தடியில் சிவன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
புரட்டாசி திருவாதிரை, ஆனி உத்திரம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிப்பூரம், ஆடித்தபசு, கார்த்திகை சோமவாரம், ஆனி பவுர்ணமி (காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா) பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, விசாகம், சஷ்டி, பஞ்சமி, திருவாதிரை, சோமவாரம், அஷ்டமி, முருகன் விசேஷ தினங்கள்
பிரார்த்தனை
குடும்ப பிரச்னைகள் தீர, வேண்டுதல்கள் நிறைவேற, குழந்தை வரம், திருமண பாக்கியம் வேண்டி,
நேர்த்திக்கடன்:
இளநீர் அபிஷேகம், சங்காபிஷேகம், பிற அபிஷேகம். அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5.30-8.30
குடும்ப பிரச்னைகளை தீர்க்கும் கன்யாகுமரி குகநாதீஸ்வரரை, குகனுடன் சேர்த்து வணங்கி நற்பலங்கள் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - குடும்ப பிரச்னைகளை தீர்க்கும் கன்யாகுமரி குகநாதீஸ்வர கோவிலில் குகன் தேவியருடன்
படம் 2 - குகன் (முருகப்பெருமான்) வழிபட்ட கன்யாகுமரி குகநாதீஸ்வரர் ஐப்பசி அன்னாபிஷேகம்
Comments
Post a Comment