கோவில் 49 - கன்யாகுமரி மாவட்டம் தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-49
நினைத்ததை நிறைவேற்றும் கன்யாகுமரி மாவட்டம் தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவில்
27.7.2021 செவ்வாய்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோவில்
தோவாளை-629302
கன்யாகுமரி மாவட்டம்
இருப்பிடம்: நாகர்கோவில் 14 கிமீ, கன்யாகுமரி 23 கிமீ, ஆரல்வாய்மொழி 4 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்)
பழமை: 500 ஆண்டுகள்
புராணப்பெயர்: எதிர்வில்லி சோழபுரம்
தலமகிமை:
கன்யாகுமரி மாவட்டத்தில் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 14 கிமீ தொலைவில் முருகனுக்கு பிடித்தமான மிகப் பெரிய அளவில் மலர்கள் சந்தை அமைந்துள்ள தோவாளை எனும் ஊரில் உள்ள குன்று ஒன்றில் முருகப்பெருமான் குடிகொண்ட சுப்பிரமணிய சுவாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோவில் அமையப் பெற்றுள்ளது. மருமகன் சுப்பிரமணிய சுவாமியாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரியும் தலம் என்ற சிறப்புப்பெற்றது..
சஷ்டி திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, திருவிழாவின் போது மூலவர் சுப்பிரமணிய சுவாமி முதல் நாள் பாலமுருகன் வடிவத்திலும், 2-ம் நாள் சிவபெருமான் வடிவத்திலும், 3-ம் நாள் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்திலும், 4-ம் நாள் சங்கர நாராயணன் வடிவத்திலும், 5-ம் நாள் சக்தியின் வடிவத்திலும், 6-ம் நாள் போர்க்கோல முருகன் வடிவத்திலும் அலங்காரம் செய்யப்படுவது எங்குமே காணமுடியாத அரிய் நிகழ்வு. மற்ற நாட்களில் மூலவரை வேலன், வேடன், விருத்தன் கோலங்களில் அலங்கரிப்பர். எல்லா மாதமும் கடைசி வெள்ளி அன்னதானம். ஆடி கடைசி வெள்ளியில் மலர் முழுக்கு விழா நடைபெறும்.
தல வரலாறு:
இந்த கோவில் கி பி 15 அல்லது 16-ம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும். தோவாளைக்கு எதிர்வில்லி சோழபுரம் என்ற பெயரும் உண்டு.
தல அமைப்பு:
இந்தக் கோவில் மலையடிவாரத்தில் பெருமாள் பாலகிருஷ்ணனாக அருள்பாலிக்கின்றார். மலையில் மால்மருகன், சுப்பிரமணிய சுவாமியாக அருள்புரிகின்ரார். திருக்கோவிலுக்கு செல்ல 108 படிகள் ஏற வேண்டும். இரண்டு பிரகாரங்களைக் கொண்ட கோவிலில் முருகப்பெருமான், சுப்பிரமணிய சுவாமி என்ற திருப்பெயரில் 4 கரங்களுடன் மயில் மீது நின்றருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றான். மண்டபத்தில் உள்ள 4 தூண்களில் வீரமகேந்திரர், விநாயகர், ஆண்டிக்கோலத்தில் முருகன் காட்சி தருகின்றனர். வடக்கில் உள்ள கல்வெட்டில் நின்றருளும் முருகனுக்கு திருமலை அமரர் பதிகாத்த நயினார் என்ற திருப்பெயர் உள்ளது. மேலும் ராமபிரான், லட்சுமணன், மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன் முதலானோர் புடைப்பு சிற்பங்களாக அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், ஆடி கடைசி வெள்ளி மலர் முழுக்கு விழா
பிரார்த்தனை:
நினைத்தது நிறைவேற, மன நிம்மதி பெற
நேர்த்திக்கடன்:
பாலாபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 8-12 மாலை 4-8
தோவாளை சுப்பிரமணிய சுவாமி தொழுது வேண்டினால் மன நிம்மதி தந்தருளுவார்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 -நினைத்ததை நிறைவேற்றும் கன்யாகுமரி மாவட்டம் தோவாளை சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - மன நிம்மதி தந்தருளும் தோவாளை சுப்பிரமணிய சுவாமி
Thovalai Subramania Swamiku Arohara. Thanks for this post Iya. It's wonderful learning about kandha Sasti Thiruvizha in this temple
ReplyDelete