கோவில் 48 - வேலூர் ஞானமலை ஞானபண்டிதன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-48 [திருப்புகழ் தலம்]
வாழ்வில் மங்களம் பெருக அருளும் முருகனின் பாத சுவடுகள் பதிந்த வேலூர் ஞானமலை ஞானபண்டிதன் கோவில்
26.7.2021 திங்கள்
அருள்மிகு ஞானபண்டிதன் திருக்கோவில்
திருப்புகழ் தலம்
ஞானமலை
வேலூர் மாவட்டம்
இருப்பிடம்:
செல்: 9442140830
மூலவர்: ஞானபண்டிதன்
தேவியர்: ஞானகுஞ்சரி, ஞானவல்லி
பாடியவர்: அருணகிரிநாதர் (2)
வேறு பெயர்: கோவிந்தச்சேரி
தலமகிமை:
ஞானகுருவாகி நல்லருள் புரியும் ஞானமலை ஞானபண்டிதன் கோவில் வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில், 16 கி.மீ தூரத்தில் மங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் ஞானமலையின் அடிவாரம் உள்ளது.
முருகப் பெருமானின் பாதச்சுவடுகள் அமைந்த தலம்தான் ஞானமலை முருகன் கோவில். ஞான மூர்த்தியாக முருகப்பெருமான் குடிகொண்ட பழமையான கோவில் ஞான குருவாகக் காட்சிதரும் முருகப்பெருமானை தரிசித்தால் மாயைகள் அனைத்தும் விலகி வாழ்வில் மங்களம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ‘குறமகள் தழுவிய குமரன்’ திருக்கோலத்தை தரிசித்தால் தம்பதிகளுக்குள் உருவான சிக்கல்கள் அனைத்தும் விலகிவிடுமாம். இம்மலையில் மிகுதியாகக் காணப்படும் வெப்பாலை என்னும் குடசப்பாலை மரம், அரிய மூலிகை மரமாகும்
இக்கோவிலில் காணப்படும் 25 அடி உயர வேலின் அமைப்பு வேறு எந்த கோவிலிலும் காணமுடியாது சிறப்பு. இந்த வேலின் இலைப் பகுதி மட்டும் 6 அடி உயரம். ஞானத்தின் சொரூபமான ஞான பூரண சக்தி என்ற 6 அடி உய்ர வேலும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அருணகிரிநாதர் 2 திருப்புகழ் பாடல்கள் பாடிய தலமிது. அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் உயிர் விடத் தீர்மானித்தபோது அவரைக் காத்தருளிய கந்தவேள், தன்னுடைய யோகானுபூதியை அவருக்குக் காட்டி அருளினான். இந்தக் கோவிலின் தென் பிராகாரத்தில் அருணகிரியாருக்குக் காட்சி கொடுத்த “குறமகள் தழுவிய குமரன்” வடிவம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். ஆறுமுகன் மீது யோகத்தை அடிப்படையாய் வைத்து அருணகிரியார் பாடிய இந்தத் தலத்தைப் பற்றி 23 வருடங்கள் முன்னால் 1998-லே தான் தெரிய வந்துள்ளது.
“எமைமனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத
உமைபாலா எழுதரிய பச்சைமேனி
இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே”
- அருணகிரிநாதர்,
வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் மகிழ்ந்து போற்றிய மாமலை இது. இன்றும் ஞானம் தேடி வரும் பக்தர்களுக்கு ஞான ஆசிரமமாக இந்த மலை விளங்கி வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, வைகாசி விசாகம் என திருவிழாக்களால் சிறப்பாக நடைபெறுகின்றன இந்த அற்புத மலை கல்வி, கலைகளில் சிறப்பான இடத்தைப் பெற விரும்புவர்களுக்கு ஒரு சிறப்பான தலம் எனப்படுகிறது.
தல வரலாறு:
வள்ளியைக் கரம் பிடித்த முருகப்பெருமான், வள்ளிமலையிலிருந்து திருத்தணிகை நோக்கிப் புறப்பட்டார். வழியில் தென்பட்டது ஒரு சிறிய குன்று. வள்ளியம்மையோடு முருகப்பெருமான் அந்தக் குன்றில் தங்கி சிறிது நேரம் இளைப்பாறினார். அந்த மலைதான் ஞானமலை என்று புராணங்கள் போற்றுகின்றன. அதற்குச் சான்றாகத்தான் முருகப்பெருமானின் திருவடிச் சுவடுகள் இங்குக் காட்சியளிக்கின்றன. பல்லவர் காலத்து கோயில் என்று சொல்லப்படும் ஞானமலையில், 14-ம் நூற்றாண்டு காளிங்கராயன் காலத்துக் கல்வெட்டு ஒன்று கோவிலின் திருப்பணியை விவரிக்கிறது.
தல அமைப்பு:
150 படிக்கட்டுகள் கொண்ட கோவில். மலையடிவாரத்தில் ‘வள்ளி தழுவிய குமரன்’ உற்சவர் சிலையைத் தரிசித்துவிட்டு மலை மீதேறிச் சென்றால் கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், ஞானகுஞ்சரி, ஞானவல்லி உடன் ஞானபண்டித சுவாமியாக அருட்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பிரம்ம சாஸ்தா வடிவில் ஒருமுகம், நான்கு கரங்களுடன் [பின் இரு கரங்களில் கமண்டலம், ஜபமாலை ஏந்தி முன்வலக்கரத்தில் அபயமுத்திரை காட்டி முன் இடக்கரத்தை இடுப்பில் வைத்தபடி] நின்ற கோலத்தில் கந்தப்பெருமான் காட்சியளிக்கிறார்.
இந்தக் கோவிலின் தென் பிராகாரத்தில் அருணகிரியாருக்குக் காட்சி கொடுத்த “குறமகள் தழுவிய குமரன்” வடிவம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். மேற்கே ஞானகிரீசுவரர் சமேத ஞானப்பூங்கோதையாரின் திருக்கோவில் உள்ளது. அதன் பின்புறமே முருகன் பாதம் பதிந்த புண்ணிய பூமி உள்ளது. இந்தக் கோவிலின் வடமேற்கில் வள்ளிமலையும், வடகிழக்கில் திருத்தணிகையும் சமதூரத்தில் உள்ளதாகவும். இந்த மூன்று மலைகளும் சேர்ந்து ஒரு முக்கோண அமைப்பில் உள்ளதாகவும் சொல்லுகின்றனர். மூன்று மலைகளையும் ஒரே நாளில் தரிசித்தால் பலன்கள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஆடிக்கிருத்திகை
பிரார்த்தனை:
ஞானம், கல்வி, கேள்விகளில் சிறக்க, செல்வம் பெருக, வாழ்வில் மங்களம் பெருக, தம்பதிகளுக்குள் உருவான சிக்கல்கள் விலக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-12 மாலை 4-7
ஞானம், கல்வி, கேள்விகளில் சிறக்க வேலூர் மாவட்டம் ஞானமலை ஞானபண்டிதனை வணங்கி மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - வாழ்வில் மங்களம் பெருக அருளும் வேலூர் மாவட்டம் ஞானமலை ஞானபண்டிதன்
படம் 2 - ஞானம், கல்வி, கேள்விகளில் சிறக்க வேலூர் மாவட்டம் ஞானமலை ஞானபண்டிதன்
Velore Gnanamalai muruganuku Arohara. Thanks for this post
ReplyDeleteIya