கோவில் 47 - ஊட்டி எல்க் மலை பாலதண்டாயுதபாணி சுவாமி

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-47

செவ்வாய் தோஷம் நீங்கும் ஊட்டி எல்க் மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

25.7.2021 ஞாயிறு

அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

எல்க் மலை

ஊட்டி-639006

இருப்பிடம்: ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ


மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி

சிவன் நாமம்: ஜலகண்டேஸ்வரர்

அம்மன்: ஜலகண்டேஸ்வரி

தல விருட்சம்: செண்பக மரம்

தீர்த்தம்: நீலநாரயண தீர்த்தம்

புராணப்பெயர்: மான் குன்றம்


தலமகிமை:

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் எல்க் மலை எனும் இடத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலில் தோன்றிய முருகன் கோவில். மலையும் மலை சார்ந்த இடத்தில் குறிஞ்சி கடவுள் முருகனை வழிபடுதல் என்பது இத்தலத்துக்கு கூடுதல் சிறப்பு. எல்க் வகை மான்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் இந்த குன்று எல்க் ஹில் அல்லது எல்க் மலை என்று அழைக்கப்படுகிறது.


பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோவிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது. மேலும் இத்தலம் அமைந்துள்ள குன்றுக்கு நடந்து செல்லும் போது முருகன் அருளாலும் அழகான இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுப்புற சூழ்நிலையாலும், தூய்மையான காற்றாலும், இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் மூச்சு திணறல், ரத்தகொதிப்பு, கை, கால், மூட்டு வலி போன்ற உடல் ரீதியான பிரச்னைகளும் குணமடைவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.


தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகத்தையொட்டி திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. முருகன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வருவார். மாதந்தோறும் கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.



தல வரலாறு:

முன்னொரு காலத்தில் ஒரு தம்பதியினர் பழனி முருகன் கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர். வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப்பெருமான் தர பழனிக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்த நினைத்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ பழனிக்கு செல்ல முடியவில்லை. அவர்களது கனவில் வந்த முருகன் இங்குள்ள குன்றில் தமக்கு கோவில் எழுப்புமாறு கூறினார். எனவே தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் பொருட்டு இங்குள்ள குன்றின் மீது முருகனுக்கு கோவில் எழுப்பி வழிபட்டனர். காலப்போக்கில் அது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக ஆனது.


தல அமைப்பு:

7500 அடி உயரத்தில் இருக்கும் முருகன் கோவில் இது, படுகர் இன மக்கள் வணங்கும் இக்கோவிலில் முதலில் பாத விநாயகரை தரிசித்து விட்டு சற்று மேல் நோக்கி வலதுபுறம் சென்றால் ஜலகண்டேஸ்வரி அம்மன் சந்நிதி இருக்கிறது. அங்கு அம்மன் தாமரை மலரில் 4 கரங்களுடன் அருள் பாலித்து வருகிறார். அருகில் விநாயகர் உள்ளார். அதற்கு முன்புறம் கொற்றவையான துர்க்கை அம்மன் சந்நிதியும், அங்கு மகிடனை வென்ற அம்பிகையின் தோற்றம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சந்நிதிக்கு கீழே ஜலகண்டேஸ்வரர் லிங்கவடிவமாக காட்சி அளிக்கிறார்.


கருவறையில் முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணி சுவாமியாக வீற்றிருந்து பழனி முருகப்பெருமான் போலவே காட்சி அளிக்கிறார். தலையில் அக்க மாலையும், ஒரு கரத்தில் தண்டமும், ஒரு கரம் இடுப்பில் வைத்த கோலத்தில் மிக அழகாக காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.. பிரகாரத்தில், சித்தி விநாயகர் பத்ரகாளியம்மன், சொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்டபுஜ துர்க்கை முதலிய தெய்வங்கள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். 40 அடி உயரத்தில் முருகன் அருள்கிறார்.


திருவிழா:

தைப்பூசம் பிரம்மோற்சவம் (10 நாள், தேரோட்டம்), கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், பொங்கல், தீபாவளி வருடப்பிறப்பு, மாத கிருத்திகை


பிரார்த்தனை:

குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செவ்வாய் தோஷம் நீங்க, நோய்கள் தீர


நேர்த்திக்கடன்:

முடி இறக்கி காது குத்துதல், பால்குடம், காவடி, சஷ்டி விரதம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 8 முதல் 5 வரை


நோய்கள் தீர அருளும் ஊட்டி எல்க் மலை பாலதண்டாயுதபாணி சுவாமி போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏


படம் 1 - செவ்வாய் தோஷம் நீங்கும் ஊட்டி எல்க் மலை பாலதண்டாயுதபாணி சுவாமி



படம் 2 - நோய்கள் தீர அருளும் ஊட்டி எல்க் மலை பாலதண்டாயுதபாணி சுவாமி


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்