கோவில் 22 - கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தர்மலை முருகன் திருக்கோவில்
தினம் ஒரு முருகன் ஆலயம்-22
நினைத்ததை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தர்மலை முருகன் திருக்கோவில்
30.6.2021 புதன்
அருள்மிகு கந்தர்மலை முருகன் திருக்கோவில்
சுண்டக்காய்பட்டி-635123
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
இருப்பிடம்: கிருஷ்ணகிரி 24 கிமீ, காவேரிப்பட்டணம் 12 கிமீ
மூலவர்: முருகன்
தலமகிமை:
அதிசயங்களும், அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் முருகன் ஆலயங்களில் ஒன்றுதான் ‘கந்தர்மலை முருகன் கோவில். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் இருந்து 12 கிமீ தொலைவில் சுண்டக்காய்பட்டியின் மலை மேல் கந்தர்மலை முருகன் கோவில் அமைந்துள்ளது, இம்மலையில் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக மேலே உள்ள குகையில் ருத்திராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் போன்ற மகான்கள் கந்தர்மலை முருகனை தரிசனம் செய்துள்ளார்கள் என்பது சிறப்பு.
இங்குள்ள வள்ளி குளத்தின் மேல் சூரிய ஒளி, சந்திர ஒளி படுவதில்லை . இந்தக் குளத்து நீரை பருகினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். இந்த குளத்தில் உள்ள நீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் விலகி ஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரம், ஆடிக்கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திர விழாவின் போது நடக்கும் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் கந்தர்மலையில் நடக்கிறது. கந்தர்மலை முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தல வரலாறு:
ஒரு முறை கானகத்தில் முருகனோடு இருந்த வள்ளியம்மைக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டது. அதை நிறுத்த ஏதாவது வழி சொல்லும்படி வள்ளியம்மை, முருகப்பெருமானிடம் வேண்டினாள். உடனே முருகப்பெருமான் “எந்தக் குளத்தில் சூரிய ஒளியும், சந்திர ஒளியும் படவில்லையோ, அந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து பருகினால் விக்கல் நின்றுவிடும்” என்று கூறினார். இதையடுத்து வள்ளியம்மை இந்த கந்தர் மலை குளத்தில் நீர் எடுத்து பருகியதும், விக்கல் நின்று விட்டதாக தல வரலாறு சொல்கிறது.
வள்ளியின் தாகம் தீர்த்த மலைக்குகையில் அற்புத சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். அரிய வகை நாகங்களும் இங்கே அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள். இன்றளவும் சித்தர்களும், நாகங்களும் அரூபமாக இங்கே நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
தல அமைப்பு:
750 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கந்தர்மலை முருகனை தரிசிக்க 250 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். திருக்கோவிலின் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் வீற்றிருக்கும் இதர மூர்த்தங்களும் அருளுவது சிறப்பம்சம்.
திருவிழா:
பங்குனி உத்திரம், ஆடிக்கிருத்திகை, வைகாசி விசாகம்
பிரார்த்தனை:
நினைத்தது நிறைவேற, சகல தோஷங்களும் நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, வியாபாரம் விருத்தியடைய, நோய்கள் அகல, தீவினைகள் தீர
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
தீவினைகள் தீர்த்தருளும் கந்தர்மலை முருகனை அனைவரும் தரிசித்து நலன் அடைந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - நினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன்
படம் 2 - தீவினைகள் தீர்த்தருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தர்மலை முருகன்
Comments
Post a Comment