கோவில் 15 - செஞ்சேரி மலை (தென்சேரி மலை) வேலாயுத சுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-15
தொழில்/திருமணம் தொடங்க பூ வாக்கு தரும் கோயம்புத்தூர் செஞ்சேரி மலை (தென்சேரி மலை) வேலாயுத சுவாமி கோவில்
23.6.2021 புதன்
அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவில்
செஞ்சேரி மலை (தென்சேரி மலை)-641671
[மந்திரகிரி]
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: பல்லடம் 27 கிமீ, கோயம்புத்தூர் 60 கிமீ
மூலவர்: வேலாயுத சுவாமி
உற்சவர்: முத்துக்குமார சுவாமி
தல விருட்சம்: வில்வ மரம்
தீர்த்தம்: சயிலோதக தீர்த்தம், ஞான தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காணார்சுனை, வள்ளி தீர்த்தம்
வேறு பெயர்: தென்சேரி மலை, மந்திரகிரி
திருப்புகழ்: 4 பாடல்கள் கிடைத்தது 2 மட்டுமே
தலமகிமை:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து உடுமலைபேட்டை சாலையில் 27 கிமீ தொலைவில் சிறப்பு வாய்ந்த செஞ்சேரி மலை என்ற தென்சேரி மலை மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. சூலூரில் இருந்து சுல்தான்பேட்டை வழியாகவும் இந்த மலைக்கு செல்ல பாதை வசதி உண்டு.
'தென்சேரி மலை’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்திற்கு ‘மந்திரகிரி’ எனவும் சிறப்பு பெயர் உண்டு. இங்கு கோவில் கொண்டிருக்கிற வேலாயுத சுவாமி ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.
சேவலை ஏந்தி நிற்கும் முருகன்! முருகனைச் சேவற்கொடியோன் எனப் போற்றுகின்றன புராணங்கள். கோவை அருகிலுள்ள செஞ்சேரி மலையில் கோவில் கொண்டிருக்கும் முருகப்பெருமான், கையில் சேவற்கொடிக்குப் பதிலாக சேவலையே ஏந்தியிருக்கிறார். சூரர்களை சம்ஹாரம் செய்வதற்குப் புறப்பட்ட முருகப்பெருமானுக்கு, அம்பிகையின் வேண்டுகோளின்படி சிவபெருமான், ‘சத்ருசம்ஹார மந்திரோபதேசம்’ செய்த திருத்தலம் செஞ்சேரித் திருத்தலம்.
திருமணம், தொழில் தொடங்குதல், திருமணம் உட்பட எந்தவொரு காரியமாக இருந்தாலும், முருகப்பெருமானிடம் `பூக்கேட்டல்' என்ற முறையை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பக்தர்கள். ஆறுமுகப்பெருமானின் திருக்கரங்களில் வலக்கையில் ஒன்றும், இடக்கையில் ஒன்றும் என பூக்களை வைக்கின்றனர். ஐந்து நிமிடங்களுக்குள் வலக்கையில் இருந்து பூ விழுமாயின், எண்ணி வந்த காரியம் ஜெயமாகும் எனவும்... இடக்கையில் இருந்து பூ விழுமாயின் அந்த காரியத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் நேரம் கடந்தும் பூ விழவில்லை என்றால் காலதாமதமாகும் என அர்த்தங்கள் இருக்கின்றன.
மேலும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க, சந்நிதி முன்பு நின்று, வேலால் நாக்கினில் மூல மந்திரம் எழுதி வேண்டிச் செல்கின்றனர். மனநிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து 48 நாள்களுக்கு இந்தத் திருக்கோயிலில் கிரிவலம் வந்து, ஞான தீர்த்தத்தில் நீராடி, எலுமிச்சையை அர்த்தஜாம சந்தனத்துடன் நீரில் கலந்து உண்டுவந்தால் குணமடைவதாக ஐதீகம்.
ஞான தீர்த்தக் குளத்தின் நீரே முருகனின் பூஜை மற்றும் அபிஷேகங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. கந்த சஷ்டி விழா இங்கே விசேஷம். தைப்பூசத் திருவிழா 10 நாள்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆறாம் நாளன்று வள்ளி திருக்கல்யாணம், ஏழாம் நாள் முருகப்பெருமானின் திருவீதி உலாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தலவரலாறு:
சூரசம்ஹாரத்துக்காக முருகப்பெருமான் புறப்பட்டபோது, அம்பிகை சிவபெருமானிடம், முருகப்பெருமானுக்கு ‘சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசிக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்தாள். இந்த நிலையில் முருகப்பெருமானும் சிவபெருமானிடம் மந்திரோபதேசம் பெறுவதற்காக, ஆகாயமார்க்கமாகப் புறப்பட்டு செஞ்சேரி மலையை அடைந்தார்.
அந்த இடத்தின் புனிதம் உணர்ந்த முருகப்பெருமான், அங்கேயே சிவபெருமானைக் குறித்து தவம் இயற்றினார். அதன் பயனாக முருகப்பெருமான் ஈசனின் தரிசனமும், ‘சத்ரு சம்ஹார மந்திரோபதேசமும்’ பெற்றார். அத்துடன், பதினொரு ருத்திரர்களைப் பதினொரு ஆயுதங்களாக மாற்றி முருகப்பெருமானுக்கு வழங்கி, சூரர்களை வெற்றி கொள்ள ஆசீர்வதித்தும் அனுப்பினார் சிவபெருமான். இப்படி, முருகப்பெருமான் தந்தையிடம் மந்திரோபதேசம் பெற்றவர் என்பதால் இத்தலத்தின் முருகப்பெருமானை மந்திரகிரி வேலாயுதசாமி, மந்திர முருகன், மந்திரியப்பன் என்றெல்லாம் பரவசத்தொடு அழைத்து மனமுருகி வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதே காரணத்தையொட்டி இந்தத் தலத்தை ‘மந்திராசலம்’ என்றும் ‘மந்திரகிரி’ என்றும் போற்றுகின்றனர். சேர, சோழ பாண்டியர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டதும், சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான திருக்கோயில் இது. அருணகிரிநாதர் தம் திருப்புகழில், ‘செஞ்சேவல் செங்கையுடைய சண்முகத்தேவே’ என இந்தத் தலத்து முருகப்பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார்.
தல அமைப்பு:
அடிவாரத்தில் இருந்து 150 அடி உயரத்தில் வேலவன் கோவில் அமைந்துள்ளது. அடிவாரத்திற்கு சற்று மேலே... சந்தன வினாயகர், இடும்பன் காட்சி தருகின்றனர்.
கருவறையில் முருகப்பெருமான், வேலாயுத சுவாமி என்ற திருப்பெயருடன் வள்ளி தெய்வானை சமேதராக, ஆறுமுகங்கள், பன்னிரண்டு திருக்கரங்கள் கொண்டு, மயில்வாகனத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
இங்கேயுள்ள தனிச்சிறப்பு இவரின் ஆறுமுகங்களையும் ஒருசேர நாம் காணமுடிகின்ற ஒன்றாகும். மேலும் மயில் வாகனமானது இடதுபக்கம் தலையை வைத்திருக்கிற காட்சியையும் பார்க்க முடிகிறது. இத்திருத்தலத்தில் மட்டுமே, முருகப்பெருமான் தனது ஒரு திருக்கரத்தில் சேவலை ஏந்தியுள்ளார். சூரனை அடக்கித் தம் பிடிக்குள் வைத்திருப்பதாக அதற்கு விளக்கம் தருகிறார்கள்.
உற்சவ மூர்த்தியாக வள்ளி தெய்வானையருடன் நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார் முத்துக்குமாரசாமி. ஏனைய உற்சவ மூர்த்தங்களாக சிவகாமி உடனமர் நடராஜப்பெருமான், விநாயகர், வீரபாகுதேவர், அஸ்திரத்தேவர் மற்றும் பெரியநாயகி அம்மனும் காட்சியளிக்கின்றனர்.
திருவிழா:
சித்திரை 1, வைகாசி விசாகம், தைப்பூசம் (10 நாள்), பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, பிரதி கிருத்திகை, சஷ்டி, ஆரூத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம்
பிரார்த்தனை:
பூக்கேட்டல் (தொழில் தொடங்க, திருமண நடத்த), குழந்தை பாக்கியம் (நெய் தீபம், சஷ்டி விரதம்), பூர்வ புண்ணிய சாப விமோசனம் (11 பவுர்ணமி நெய் தீபம்), கல்வி சிறக்க, மனநிலை சரியில்லாதவர்கள் நலம் பெற
நேர்த்திக்கடன்:
செவ்வாரளி மாலை சாற்றுதுதல், நெய் தீபம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 6-1 மாலை 4-8
நமது வாழ்க்கை செழிக்கத் செஞ்சேரி வேலாயுத சுவாமியை தரிசித்து, அவன் அருளையும் பூ வாக்கையும் பெற்று வருவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - தொழில்/திருமணம் தொடங்க பூ வாக்கு தரும் செஞ்சேரி மலை வேலாயுத சுவாமி
படம் 2 - மனநிலை சரியில்லாதவர்கள் நலம் பெற அருளும் செஞ்சேரி வேலாயுத சுவாமி
Senjeri Velayudha Swamiku arohara. It's a great learning about this temple history and it's a speciality to know that our Lord Muruga statue has got two vaganams. There are lot of theerthams and sunai in this temple. It's amazing to know that this temple is atleast 2000 years old. Thanks for this post Iya. Muruga Saranam.
ReplyDelete