கோவில் 13 - காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூர் கந்தசுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-13
கல்வி, ஞானம் அருளும் பிரம்ம சாஸ்தா காஞ்சிபுரம் மாவட்டம் ஆனூர் கந்தசுவாமி கோவில்
21.6.2021 திங்கள்
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில்
ஆனூர்-603405
காஞ்சிபுரம் மாவட்டம்
இருப்பிடம்: செங்கல்பட்டிலிருந்து தெற்கே 13 கிமீ
மூலவர்: கந்தசுவாமி
தலமகிமை:
செங்கல்பட்டில் இருந்து 13 கிமீ தொலைவில் ஆனூா் என்னும் சிறப்பு தலத்தில் முருகப்பெருமானின் கந்தசாமி திருக்கோவில் உள்ளது. ஆனூரில் 3 பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு கோவில்களும் சிவபெருமான் மற்றும் பெருமாளுக்குரியவையாகும். தந்தை, மகன், மாமன் என மூவருக்கும் சிறப்பான கோவில்கள் ஒரே ஊரில் அமைந்து இருப்பது மிக சிறப்பு. அவை ஆனூா் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோவில், ஆனூர் கந்தசுவாமி கோவில், ஆனூர் வேத நாராயணப் பெருமாள் கோவில்களாகும்.
இங்கு பிரம்ம சாஸ்தா வடிவில் அருள்கிறார் முருகன். பிரம்மத்தின் அதி உயர்வான நிலையை அடைந்தவன் முருகன் என்று உணர்த்தும் வடிவம் இது. பிரம்ம சாஸ்தா என்றும் முருகனை வழிபடுகிறோம். இவரை வழிபட்டால் எல்லா வகை வித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். கல்வி, அறிவு, கவித்திறன் அருளும் தலம்.
கூற்றுவ நாயனாரும் புகழேந்தி புலவரும் வாழ்ந்த ஊர். அந்தகக் கவி வீரராகவ முதலியார் இவரை வணங்கிய பிறகே கவிபாடும் திறன் பெற்றார் என்பர். பாடகம், திமிலை, கரடிகை, கலம் மற்றும் கண்டிகை முதலான இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.
தலவரலாறு:
பராந்தக சோழன், ராஜராஜன், குலோத்துங்கன் மற்றும் விஜயநகர மன்னர்களால் வளர்க்கப்பட்ட கோவில். 7ம் நூற்றாண்டில் ஆண்ட விஜய வர்ம பல்லவன் காலத்தில் அவனது மகனை (அபராஜித வர்ம பல்லவன்) முதலாவது ஆதித் சோழன் வெற்றி கொண்டு சோழர் காலம் தொடக்கமுற்றது. ராஜராஜன் காலத்து கல்வெட்டு மூலம் இந்தப் பகுதியில் விளங்கிய பாடகம், திமிலை, கரடிகை, கலம், சேகண்டி ஆகிய வாத்தியக் கருவிகள் பற்றிய குறிப்பு உள்ளது. அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் தந்த தலமாதலால் இப்பெயர் எனவும், அருகே உள்ள மலையும் அஸ்திர மலை என்றே அழைக்கப்படுகிறது. கடைசி கும்பாபிஷேகம் 4.9.2009-ல் சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
கருவறையில் முருகப்பெருமான், கந்தசுவாமி என்ற திருப்பெயருடன் ஒரு முகம் 4 கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலது கையில் அக்கமாலையும் இடது கரத்தில் கமண்டலமும் கொண்டு மற்ற இரு கரங்களில் ஊரு முத்திரையும் தாமரை மலரும் கொண்டு மகுடத்துடன் பிரம்ம சாஸ்தா வடிவில் வடக்கு நோக்கி காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மலர்களில் உயர்ந்தது தாமரை. தாமரை அழகும் இளமையும் கொண்ட வடிவில் பாலசுவாமியாக காட்சியளிக்கும் முருகப்பெருமான் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி இருப்பார். இத்தலத்தில் யானை வாகனமாக இருப்பது மிகவும் விசேஷமாகும்.
திருவிழா:
வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி
பிரார்த்தனை:
கல்வி, அறிவு, கவித்திறன் பெற, குடும்ப மகிழ்ச்சியை பெருக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
குடும்பத்தில் மகிழ்ச்சியை பெருக்கும் ஆனூர் கந்தசுவாமியை கும்பிட்டு பலனடைவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கல்வி, ஞானம் அருளும் பிரம்ம சாஸ்தா ஆனூர் கந்தசுவாமி
படம் 2 - குடும்பத்தில் மகிழ்ச்சியை பெருக்கும் ஆனூர் கந்தசுவாமி
Aanur kandha swami muruhanuku Arohara. Thanks for this post Iya. The second picture is fantastic and it's a great learning about the history of the temple. Muruga Saranam
ReplyDelete