கோவில் 12 - திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வீரக்குமாரசுவாமி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-12
பொட்லி பொடுதல் எனும் வெடி வழிபாடு நடக்கும் சிறப்பு தலம் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் வீரக்குமாரசுவாமி கோவில்
20.6.2021 ஞாயிறு
அருள்மிகு வீரக்குமாரசுவாமி திருக்கோவில்
வெள்ளக்கோவில்-638111
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: ஈரோடு-கோவில் 52 கிமீ, கோவை-கோவில் 90 கிமீ
மூலவர்: வீரக்குமாரசுவாமி, கன்னி முருகன்
தல விருட்சம்: கறுக்கட்டான் மரம்
தலமகிமை:
கொங்கு மண்டலத்தில் (காங்கேய நாடு) உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான வெள்ளக்கோவில் வீரக்குமாரசுவாமி கோவில் கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கோவையில் இருந்து சுமார் 90 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறப்பு திருத்தலத்திற்கு ஈரோடு நகரிலிருந்தும் (52 கிமீ) செல்லலாம்.
இங்கு முருகப்பெருமான் வீரமான தோற்றத்தில் கன்னிகுமரனாகக் காட்சி தருகிறார். ஆகவே பெண்கள் கோவிலுக்குள் செல்லும் வழக்கம் இல்லை. மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்தகன்னியரையும், வீரக்குமாரரையும் வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது.
பொட்லி போடுதல் என்ற சிறப்புப் பரிகாரம் காலங்காலமாகவே இக்கோவிலில் நடைபெற்று வருகிறது. பொட்லி என்பது ஒரு வகை வெடி ஆகும். இக்கோவிலில் வெடிக்கப்படும் பொட்லி வெடியின் சத்தம் வீரகுமாரசுவாமிக்கு விருப்பமான ஒன்று! தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் வீரகுமாரசுவாமியை தரிசித்துவிட்டு, கோவிலின் எதிரே உள்ள பொட்லி போடும் மண்டபத்துக்குச் சென்று, தங்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, பொட்லி போடுவார்கள். இந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு வீரகுமாரசுவாமி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். பொதுவாக திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பொட்லி வெடி போடுவது வழக்கம்.
இக்கோவிலில் இருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ளது செல்லாண்டியம்மன் திருக்கோவில். புற்று மண்ணால் உருவானவர்தான் வீரக்குமாரசுவாமி என்றாலும், மக்களைக் காத்தருளும் அவரை செல்லாண்டியம்மன் தன் மகனாகவே பாவித்து வந்தாராம். எனவே, செல்லாண்டியம்மனை வணங்கிய பிறகு வீரக்குமாரசுவாமியை வணங்கினால், வேண்டியவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
தலவரலாறு:
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வரை காடுகளாக இருந்த இவ்விடத்தின் தெற்குப் பகுதியில் அப்போது புற்று ஒன்று இருந்திருக்கிறது. ஒருமுறை, அந்தப் புற்றின் அருகில் பசு ஒன்று மேய்ந்து கொண்டிருக்க, பாம்பு வடிவத்தில் உடலும், மனித வடிவத்தில் தலையும் கொண்ட ஓர் உருவம் அந்தப் புற்றிலிருந்து வந்து, பசுவின் மடியிலிருந்து பாலைப் பருகியது. அந்த உருவத்துக்கு வீரக்குமாரசுவாமி என்று பெயரிட்டு, சிலை வடித்து, வழிபடத் தொடங்கியிருக்கிறார்கள். வீரக்குமாரசுவாமி பாதக்குறடு கவசம் அணிந்தும், இடுப்பில் தாங்குச்சையும், உடைவாளும், குத்துவாளும், வலது கையில் சூலாயுதமும் கொண்டு, கன்னி தெய்வமாகக் வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவர் கன்னி தெய்வமாகக் காட்சி தருவதால், பெண்கள் யாரும் கோவிலுக்குள் செல்வது கிடையாது. பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்று எந்தவிதக் கட்டுப்பாடும் இங்கு இல்லை. ஆனாலும் பெண் பக்தர்கள் உள்ளே சென்று மூலவரை தரிசிப்பது இல்லை எனத் தாங்களாகவே முடிவெடுத்து, கடைப்பிடித்தும் வருகிறார்கள்.
தல அமைப்பு:
திருக்கோவிலின் ராஜகோபுரம் வடக்குத் திசையில் அமைந்துள்ளது. பெரும்பாலான கோவில்களில், ராஜகோபுரத்தில் இருந்து பார்த்தால் மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறை நன்றாகத் தெரியும். ஆனால், இக்கோவிலின் ராஜகோபுரம் வழியாக பார்த்தால் கருவறை இறைவன் தெரியாது. எனவே பெண் பக்தர்களால் மூலவர் கன்னி முருகனை தரிசிக்க இயலாது.
கருவறையில் மூலவர் வீரக்குமாரசுவாமி பாதக்குறடு கவசம் அணிந்தும், இடுப்பில் தாங்குச்சையும், உடைவாளும், குத்துவாளும், வலது கையில் சூலாயுதமும் கொண்டு, கன்னிகுமரனாக காட்சியளித்து ஆண் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஆலயத்தின் கிழக்குப்புறம் ஐம்பூதங்களின் சிலைகள் கம்பீரமாக வீற்றிருக்கின்றன. முன்மண்டபத்தில் இருந்து உள்நோக்கிப் பார்த்தால், கன்னிமார் சந்நிதியும் பதினெண் சித்தர்கள் சிலைகளும் கண்ணுக்குப் புலப்படும். இந்தப் பதினெண் சித்தர்கள் எழுந்தருளியிருக்கும் இடம் ‘சித்தர் சபை’ என அழைக்கப்படுகிறது.
திருவிழா:
தமிழ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல், பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, திங்கள், வெள்ளி, முருகனுக்குரிய விசேஷ தினங்கள்
பிரார்த்தனை:
திருமண வரம், பிள்ளைப்பேறு, கல்வி சிறக்க, வேண்டிய அனைத்தும் நிறைவேற
நேர்த்திக்கடன்:
வெடி வழிபாடு, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்
காலை 8-1 மாலை 2-8
வேண்டியவை அனைத்தும் நிறைவேற்றும் வெள்ளக்கோவில் வீரக்குமாரசுவாமியை மனக்கண்ணால் தரிசித்து நற்பலன்களை அடையலாம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - வெடி வழிபாடு நடக்கும் சிறப்பு தலம் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் வீரக்குமாரசுவாமி
படம் 2 - வேண்டியவை அனைத்தும் நிறைவேற்றும் வெள்ளக்கோவில் வீரக்குமாரசுவாமி
Vellak Kovil Veera kumaraswamiku Arohara. Thanks for this post Iya. It's interesting to know about Potli vedi, fact that the girls would not enter into this temple, 5 panja poodha idols and 18 sithars. Muruga Saranam
ReplyDelete