கோவில் 339 - இங்கிலாந்து நியு மால்டன் திருத்தணிகை வேல்முருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                         தினம் ஒரு முருகன் ஆலயம்-339

மன அமைதி பெற்றிட இங்கிலாந்து நியு மால்டன் திருத்தணிகை வேல்முருகன் கோவில்

13.5.22 வெள்ளி

அருள்மிகு திருத்தணிகை வேல்முருகன்  திருக்கோவில்

255 பர்லிங்க்டன் ரோடு (Burlington Road), 

நியு மால்டன் KT3 4NE (New Malden KT3 4NE),

சர்ரே (Surrey) 

இங்கிலாந்து [England]

யுனைட்டெட் கிங்டம் [United Kingdom]


மூலவர்: திருத்தணிகை வேல்முருகன்  

தேவியர்: வள்ளி, தெய்வானை 


தல மகிமை:

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு அருகில் உள்ள சர்ரே பகுதியை அடுத்த நியூ மால்டனில் மலை மேல் அமைந்துள்ள திருத்தணிகை வேல்முருகன் ஆலயம் சிறிய ஆனால் சிறப்பான ஆலயமாகும். தமிழகத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி கோவிலை போன்றே இக்கோவிலும் அமைதியும், மனதிற்கு ஆறுதலும் தரும் சூழலில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அமைப்பு, சிற்ப வேலைப்பாடு, பக்தர்கள் வழிபாடு போன்றவை தமிழகத்தின் திருத்தணிகை முருகன் கோவிலை ஒத்திருக்கிறது. இவ்வாலயத்தில் கதிர்காம முருகன் துணியால் வரையப்பட்டு தெய்வீகமாக காட்சியளிப்பது தனிச்சிறப்பு. பக்தர்கள் மதியம் உணவு (பிரசாதம்) வழங்கப்படுகிறது.. 


முருகனுக்குரிய அனைத்து விசேஷ தினங்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. வருடாந்திர மகோற்சவம் தேரோட்டத்துடன் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா 6 நாட்களும் சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. 


தலவரலாறு:

திருத்தணிகை வேல்முருகன் ஆலயம், 2003-ம் ஆண்டு சர்ரே நகரின் புறநகர் பகுதியில் தற்காலிக ஆலயமாக சர்ரே வாழ் தமிழர்களால் அமைக்கப்பட்டது. பின்னர் ஆலய நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு மற்றும் முருகப்பெருமானின் திருவருளால் நியூ மால்டன் பகுதியில் கோவிலிற்கான நிரந்த இடம் வாங்கப்பட்டு, ஆலயம் எழுப்பப்பட்டது. ஏராளமான பக்தர்களின் உதவியால் தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டு, 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் மூலவராக திருத்தணிகை வேல்முருகன் என்ற அழகுப் பெயருடன் வேல் தாங்கி நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்புற காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கோவில் அமைப்பு, முருகப்பெருமான் திருக்கோலம் திருத்தணி முருகனை போலவே உள்ளதால், இங்கு உள்ள மூலவருக்கு திருத்தணிகை வேல்முருகன் என்ற பெயர் வந்தது. மேலும், ஆறுமுகங்களுடன் ஷண்முகப்பெருமான் (கதிர்காம முருகன்) வள்ளி, தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து அருள்கின்றார்.  


உற்சவமூர்த்திகளாக அனைத்துத் தெய்வங்களும் இருப்பது சிறப்பு. விநாயகர், சிவப்பெருமான், அம்மன், சாய்பாபா, பெருமாள், கிருஷ்ணர், நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்புரிகின்றனர்.  


திருவிழா:

கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், பிரதி வெள்ளி, சஷ்டி, 


பிரார்த்தனை:

மன அமைதி பெற்றிட, ஆன்மீக எண்ணங்களை அதிகரிக்க, தீமைகளை அகற்ற, கல்வி, ஞானம் விருத்தி அடைய 


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 9-.2 மாலை 5.30-9


ஆன்மீக எண்ணங்களை அதிகரிக்கும் இங்கிலாந்து நியு மால்டன் திருத்தணிகை வேல்முருகனை மனமுருக வேண்டி பலனடைந்திடுவோம்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - மன அமைதி தந்தருளும் இங்கிலாந்து நியு மால்டன் திருத்தணிகை வேல்முருகன்



படம் 2 - தீமைகளை அகற்றும் இங்கிலாந்து நியு மால்டன் திருத்தணிகை வேல்முருகன் தேரோட்டத் திருவிழா

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்