பதிவு 338 - இங்கிலாந்து லெஸ்டர் சிவமுருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                             தினம் ஒரு முருகன் ஆலயம்-338

எதிரிகளை அழித்திடும்  இங்கிலாந்து லெஸ்டர் சிவமுருகன்  கோவில்

12.5.22 வியாழன்

அருள்மிகு சிவமுருகன்  திருக்கோவில்

6 ரோஸ் வாக்  (6 Ross Walk), 

லெஸ்டர் LE4 5HH (Leicester LE4 5HH), 

ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ்  (East Midlands State)

இங்கிலாந்து [England]

யுனைட்டெட் கிங்டம் [United Kingdom]


மூலவர்: சிவமுருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை 


தல மகிமை:

இங்கிலாந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாகாணம் லெஸ்டர் நகரின் ரோஸ்வாக் வீதியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோவில் ‘கந்தக் கோட்டம்’ என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. வட இந்தியப் பகுதியைச் சேர்ந்த குஜராத்தியினரும், தமிழர்களும் அதிகமாக வசிக்கும் பகுதியில் கந்தக்கடவுள் கோவில் கொண்டுள்ளார். இக்கோவிலில் ஈசானிய மூலையில், ஒன்பது கிரகங்களும் ஆயுதம் ஏந்தி தோன்றும் அரிய காட்சி தனி சிறப்பாகும்.


இத்திருக்கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் மூலவர் சிவமுருகனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுவதுடன், ஆறாம் நாள் சூரசம்ஹார நிகழ்ச்சி கண் நிறைந்த காட்சியாக பக்திப் பரவசத்துடன் நடத்தப்படுகிறது. கந்த சஷ்டிக்கு மறுநாள் சீர்வரிசை எடுத்து நலங்கு பாடி முருகனின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. 


வைகாசி மாதத்தில் பத்து நாள் விழா நடத்தி, விசாக நாளில் தேரோட்டம் நடைபெறுகிறது. திருக்கார்த்திகை சொக்கப்பனை கொளுத்துகிறார்கள். சதுர்த்தியில் விநாயகருக்கும், ஆடி வெள்ளிகளில் துர்க்கை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இத்தலத்தில் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கும் நவக்கிரகங்களுக்கு, அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ற நாட்களிலும், கிரக பெயர்ச்சி காலங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கோவில் திறந்து வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. 

 

தலவரலாறு:

இங்கு குடிபெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து, இந்தியர்கள், இலங்கை தமிழர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து திருப்பணி நிதி திரட்டி கோவில் எழுப்பப்பட்டது. இந்த ஆலயத்தில் 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.


தல அமைப்பு:

கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதற்கடவுளான விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். சித்தி விநாயகர் என்ற பெயர் கொண்ட இவர் நான்கு கரங்களுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். திருக்கோவிலில் கொடிமரமும், அதனடியில் ஸ்தம்ப விநாயகரும், அருகில் பலிபீடமும் இருக்கிறது. கருவறையில் மயில் வாகனத்தின் எதிரே கிழக்கு நோக்கிய தனி விமானத்தின் கீழ் முருகப்பெருமான், சிவமுருகன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கின்றார். கந்தன் தன் ஒரு கரத்தில் வேலும், மறு கரத்தில் சேவற்கொடியும் தாங்கி புன்னகை மின்ன நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்து பக்த பெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானின் வலப்புறம் நீலோற்பல மலர் ஏந்தியபடி வள்ளியும், இடப்புறம் தாமரை ஏந்தியபடி தெய்வானையும் அருள் புரிகிறார்கள். மூலவர் முருகப்பெருமானுக்கு வலது புறம் தனிச்சந்நிதியில் காசி விஸ்வநாதர், லிங்கத் திருமேனியில் அருள்காட்சி தருகிறார். அவருக்கு அருகில் விசாலாட்சி அம்மன் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானின் ஆலயத்தின் அம்மையப்பனும் அருகில் இருந்து காட்சி தருவதால், இத்தல மூலவரை ‘சிவ முருகன்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர். 


மூலவரின் கருவறை கோஷ்டத்தில் தெற்கு நோக்கியபடி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து தட்சணாமூர்த்தி சுவாமி அருளாசி வழங்குகிறார். பிரகாரத்தில் வடதிசை நோக்கி சூலமேந்திய துர்க்கா தேவி தனிச் சந்நிதியில் வீற்றிருந்து அருள்கிறார். வடபுறச் சுற்றில் ஐயப்பன் காட்சி தருகிறார். வண்ணமயமான வசந்த மண்டபத்தில் அனைத்து தெய்வங்களின் உற்சவ மூர்த்தங்களும் மின்னுகின்றன. ஈசானிய மூலையில் ஒன்பது கிரகங்களும் ஆயுதம் ஏந்தி தங்கள் மனைவியுடன் தோன்றுவது எங்குமில்லாதச் சிறப்பு. மேற்கு நோக்கி பைரவர் காட்சி தருகிறார்.


திருவிழா:

கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை தைப்பூசம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி. விநாயகர் சதுர்த்தி, ஆடி வெள்ளி, பிரதி வெள்ளி, சஷ்டி, சதுர்த்தி


பிரார்த்தனை:

எதிரிகளை அழித்திட, இன்னல்கள் நீங்கிட, நினைத்தது நிறைவேற, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 10-.1 மாலை 5-8


இங்கிலாந்து லெஸ்டர் சிவமுருகனை மனமுருகி துதித்தால், நினைத்தக் காரியங்களையெல்லாம் நிறைவேற்றுவார்!                                                                                                                                                                                  

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - எதிரிகளை அழித்திடும்  இங்கிலாந்து லெஸ்டர் சிவமுருகன்



படம் 2 - நினைத்தக் காரியங்களை நிறைவேற்றும் இங்கிலாந்து லெஸ்டர் சிவமுருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்