கோவில் 996 - ராணிப்பேட்டை ஆற்காடு வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-996 [திருப்புகழ் தலம்]

முக்தி கிடைக்க அருளும் ராணிப்பேட்டை ஆற்காடு வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர்

29.2.2024 வியாழன்


அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் [TM003988]

திருப்புகழ் தலம்

வேப்பூர்-632503

ஆற்காடு வட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம்

இருப்பிடம்: ஆற்காடு 5 கிமீ, வேலூர் 29 கிமீ


மூலவர்: வசிஷ்டேஸ்வரர்

அம்பாள்: பாலகுஜாம்பாள்

திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வேப்பமரம்

புராணப்பெயர்: கரபுரம்

பாடியவர்: அருணகிரிநாதர் (1)


தல மகிமை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காட்டிலிருந்து 5 கிமீ-ல் தொலைவில் இருக்கும் வேப்பூர் திருத்தலத்தில் பாலாற்றின் ஆற்றங்கரையில்க மோட்சம் பெற்றிட அருளும் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேலூர் மாநகரிலிருந்து 29 கிமீ பிரயாணம் செய்தாலும் இத்தலத்தை அடையலாம். இக்கோவிலில் பாலகுஜாம்பாள் சமேத வசிஷ்டேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் இங்கு தங்கி இங்குள்ள இறைவனை வழிபட்டதால் இவர் வசிஷ்டேசுவரர் என்றழைக்கப்படுகிறார். சிவன் இங்கு வசிஷ்டருக்கு ஜோதி வடிவில் காட்சி தந்ததாகக் கூறுகின்றனர். முன்னோர்கள் முக்தி பெற, இத்தல சிவபெருமானை வழிபட்டு மோட்ச தீபம் ஏற்றுகின்றனர்.


இக்கோவிலின் கல்யாண மண்டபத்தில் நரசிம்ம அவதாரக் காட்சிகள், கருடன், விநாயகர், பிச்சாடனர், அஷ்ட புஜ காளி, ஆஞ்சநேயர், ஏகாம்பரரை தழுவிய கௌரி சிற்பங்கள் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளன.


அருணகிரிநாதர் இத்தலத்து சுப்பிரமணியரை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். “குரைகடல் உலகினில்”, என்று தொடங்கி “வேப்பூர் அமர்ந்த பெருமாளே” என்று பாடலை சிறப்புற முடிக்கின்றார்.


தல வரலாறு:

மிகவும் பழமையான கோவில் இது. ஆறு முனிவர்கள் வழிபட்ட ஆறு திருக்கோவில்களில் (ஷடராண்ய ஷேத்திரங்கள்) இது முதல் கோவில். ஆறு மகான்களில் ஒருவரான வசிஷ்டர் இங்கு தங்கி இங்குள்ள இறைவனை வழிபட்டதால் இங்குள்ள இறைவனின் திருப்பெயர் வசிஷ்டேசுவரர் ஆகும். விஜய நகர மன்னர் பிரதாப தேவராஜ மகாராயரது கல்வெட்டுகள் உள்ளன.


வேப்பமரங்கள் நிறைந்த பகுதியானதால், இது வேம்பூர் என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி வேப்பூர் என்றானதாக வரலாறு.


தல அமைப்பு:

இக்கோவிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. மூலவர் வசிஷ்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். சிவபெருமான் எதிரில் வசிஷ்டர் பெருமானை வணங்கியவாறே நின்ற நிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்கின்றார். அம்பாள் பாலகுஜாம்பாள் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இவருக்கு வழிபாடு செய்த பின்னரே சிவபெருமானுக்கு வழிபாடு செய்கிறார்கள். மேலும் செல்வவிநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சரபேசுவரர், பிரத்யங்கிரா தேவி, சப்த மாதர், காசி விசுவநாதர், அகோர வீரபத்திரர், சனீஸ்வரர், கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.


இத்தலத்தில் திருப்புகழ் தெய்வம் சுப்பிரமணியர் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

மகா சிவராத்திரி, மாசிமகம், ஆடி அமாவாசை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் தைப்பூசம், பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

முக்தி கிடைக்க, குரு கடாட்சம் கிட்ட, திருமண வரம் வேண்டி, குழந்தை பாக்கியம் பெற்றிட, மன நிம்மதி வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 7-10 மாலை 5-7


குரு கடாட்சம் அருளும் ராணிப்பேட்டை ஆற்காடு வேப்பூர் வசிஷ்டேஸ்வரர், சுப்பிரமணியரை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 996 முக்தி கிடைக்க அருளும் ராணிப்பேட்டை ஆற்காடு வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் [திருப்புகழ் தலம்]


படம் 2 - 996 குரு கடாட்சம் அருளும் ராணிப்பேட்டை ஆற்காடு வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் [திருப்புகழ் தலம்]

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1102 - திருச்சி மணப்பாறை சென்னக்கல் குன்றம் சின்ன பழனி முருகன் கோவில்