கோவில் 809 - நாமக்கல் கே கே நகர் பாலதண்டாயுதபாணி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-809

நேர்மறை ஆற்றல் தரும் நாமக்கல் கே கே நகர் பாலதண்டாயுதபாணி கோவில்

26.8.2023 சனி


அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

மோகனூர் சாலை

அரசு மருத்துவமனை அருகில்

கே கே நகர்

நாமக்கல்-637001

நாமக்கல் மாவட்டம்

இருப்பிடம்: நாமக்கல் 1.5 கிமீ


மூலவர்: பாலதண்டாயுதபாணி

தல விருட்சம்: வன்னி மரம்


தலமகிமை:

நாமக்கல் நகரம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் 1.5 கிமீ தொலைவில் கே கே நகர் பகுதியில் நேர்மறை ஆற்றலை அள்ளி வழங்கும் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மூலவர் பாலதண்டாயுதபாணியின் அருளாசியால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும் தலாமாக இக்கோவில் திகழ்கின்றது. இத்திருக்கோவிலுக்கருகில் உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.


ஒவ்வொரு மாத கிருத்திகையன்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கும். மூலவர் பாலதண்டாயுதபாணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து முத்தங்கி சாத்தப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம், மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, ராஜா அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். பின்னர் பெருமானுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபடுகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றன. சஷ்டி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

தல வரலாறு:

உள்ளூர் புரவலர்கள் மற்றும் பக்தர்களின் பேருதவியோடு இக்கோவில் எழுப்பப்பட்டது.


தல அமைப்பு:

கோவிலினுள் நுழைந்தவுடன் அழகிய கொடிமரம் உள்ளது, திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணி புன்னகை தவழ கைகளில் வேல் மற்றும் சேவற்கோடி ஏந்தி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விசேஷ நாட்களில் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரம் அல்லது முத்தங்கி அலங்காரத்தில் திருக்காட்சி அருள்வது கண் கொள்ளா காட்சி. கருவறை வாசலில் விநாயகர் அருள்கின்றார். வன்னி மரத்தடியில் ருண மோஷண வல்லப கணபதி வீற்றிருந்து அருள்கின்றார், இந்த கணபதியை மனமுருக வழிபட்டால், கடன்கள் யாவும் தீரும். மேலும் விநாயகர், சிவபெருமான், அம்பாள். தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

நேர்மறை ஆற்றல் பெற, மாங்கல்ய பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, துன்பங்கள், வினைகள் அகல, கடன் தீர, நினைத்தது நிறைவேற


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 6-10.30 மாலை 5-9


நினைத்தது எல்லாம் நிறைவேற்றும் நாமக்கல் கே கே நகர் பாலதண்டாயுதபாணியை சென்னி மேல் சூட்டி மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 809 நேர்மறை ஆற்றல் தரும் நாமக்கல் கே கே நகர் பாலதண்டாயுதபாணி முத்தங்கி அலங்காரம்


படம் 2 - 809 நினைத்தது எல்லாம் நிறைவேற்றும் நாமக்கல் கே கே நகர் பாலதண்டாயுதபாணி



Comments